1 | அவர் மீண்டும் தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். |
2 | சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர். |
3 | இயேசு கை சூம்பிவரை நோக்கி, “எழுந்து, நடுவே நில்லும்” என்றார். |
4 | பின்பு அவர்களிடம், “ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள். |
5 | அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை நோக்கி, “கையை நீட்டும்” என்றார். அவர் நீட்டினார். அவருடைய கை மீண்டும் நலமடைந்தது. |
6 | உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர். |
7 | இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். மேலும் யூதேயா, |
8 | எருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் ஆகிய இடங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று அவரிடம் வந்தனர். |
9 | மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தமக்காகப் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு அவர் சீடருக்குச் சொன்னார். |
10 | ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால், நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொடவேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்து கொண்டிருந்தனர். |
11 | தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, “இறைமகன் நீரே” என்று கத்தின. |
12 | அவரோ, தம்மை வெளிப்படுத்த வேண்டாமென அவற்றிடம் மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார். |
13 | அதன்பின்பு இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். |
14 | தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்: |
15 | அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார். |
16 | அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், |
17 | செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் – இவ்விருவருக்கும் ‘இடியைப் போன்றோர்’ எனப் பொருள்படும் பொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார். |
18 | அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், |
19 | இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர். |
20 | அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை. |
21 | அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர். |
22 | மேலும், எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், “இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது” என்றும்”பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர். |
23 | ஆகவே அவர் அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது: “சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? |
24 | தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. |
25 | தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது. |
26 | சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது அழிவு. |
27 | முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது: அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும். |
28 | உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப்பெறார்: அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார். |
29 | ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.” |
30 | “இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது” என்று தம்மைப் பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார். |
31 | அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள். |
32 | அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. “அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள்” என்று அவரிடம் சொன்னார்கள். |
33 | அவர் அவர்களைப் பார்த்து, “என்தாயும் என் சகோதரர்களும் யார்? என்று கேட்டு, |
34 | தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, “இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. |
35 | கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்றார். |