1 | சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று. |
2 | பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். |
3 | அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர். |
4 | மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர். |
5 | இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், “மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். |
6 | அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், “இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? |
7 | இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?” என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர். |
8 | உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு கண்ணுவதை இயேசு தமமுள் உணர்ந்து, அவர்களை நோக்கி, “உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்? |
9 | முடக்குவாதமுற்ற இவனிடம் “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்பதா?”எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட, என்பதா? எது எளிது? |
10 | மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார். பின்பு அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, |
11 | “நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ” என்றார். |
12 | அவரும் எழுந்து உடனே தம்முடைய படுககையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், “இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே” என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். |
13 | இயேசு மீண்டும் கடலோரம் சென்றார். மக்கள் கூட்டத்தினர் எல்லாரும் அவரிடம் வரவே, அவர் அவர்களுக்குக் கற்பித்தார். |
14 | பின்பு அங்கிருந்து அவர் சென்றபோது அல்பேயுவின் மகன் லேவி சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்: அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். |
15 | பின்பு அவருடைய வீட்டில் பந்தி அமர்ந்திருந்தபோது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். ஏனெனில் இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள். |
16 | அவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், “இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?” என்று கேட்டனர். |
17 | இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார். |
18 | யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்துவந்தனர். சிலர் இயேசுவிடம், “யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பிருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை?” என்று கேட்டனர். |
19 | அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்கமுடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பிருக்க முடியாது. |
20 | ஆனால் மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள். |
21 | எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்த புதிய துணி பழையதிலிருந்து கிழியும்? கிழிசலும் பெரிதாகும். |
22 | அதுபோலப் பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றிவைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்: மதுவும் தோற்பைகளும் பாழாகும். புதிய மது புதுத் தோற்பைகளுக்கே ஏற்றது” என்றார். |
23 | ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்துகொண்டே வழி நடந்தனர். |
24 | அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், “பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்?” என்று கேட்டனர். |
25 | அதற்கு அவர் அவர்களிடம், “தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா? |
26 | அபியத்தார் தலைமைக் குரவாய் இருந்தபோது தாவீது இறைஇல்லத்திற்குள் சென்று, குரக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?” என்றார். |
27 | மேலும் அவர் அவர்களை நோக்கி, “ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது: மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை. |
28 | ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார். |