1 | ஆண்டவர் மோசேயிடம் கூறியது: |
2 | நீ இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்: எனக்குரிய நேர்ச்சையை, நெருப்புப் பலியான உணவை, எனக்கு உகந்த நறுமணத்தைக் குறிக்கப்பட்ட காலத்தில் எனக்குப் படைப்பதில் நீங்கள் கருத்தாயிருக்க வேண்டும். |
3 | நீ அவர்களிடம் சொல்: நெருப்புப் பலியாக நீங்கள் ஆண்டவருக்குப் படைக்க வேண்டியது: அன்றாட எரிபலியாக எந்நாளும் செலுத்த ஒரு வயதுடைய பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகள். |
4 | இவற்றுள் ஒன்றைக் காலையிலும், மற்றதை மாலையிலும் பலியிட வேண்டும். |
5 | அத்துடன், உணவுப் படையலாக இருபதுபடி மரக்காலில் பத்தில் ஒரு அளவு மிருதுவான மாவை அடித்துப் பிழியப்பட்ட கால் கலயம் எண்ணெயுடன் பிசைய வேண்டும். |
6 | இது எந்நாளும் செலுத்தும் எரிபலி: இது ஆண்டவருக்குரிய நெருப்புப் பலியாகவும் உகந்த நறுமணமாகவும் சீனாய் மலையில் ஏற்படுத்தப்பட்டது. |
7 | அத்துடன் ஒவ்வோர் ஆட்டுக்குட்டிக்கும் கால் கலயம் வீதம் நீர்மப் படையல் நீங்கள் செலுத்த வேண்டும்: ஆண்டவருக்கு நீர்மப் படையலாகத் திருஉறைவிடத்தில் மதுபானத்தை ஊற்ற வேண்டும். |
8 | மற்ற ஆட்டுக் குட்டியை நீங்கள் மாலையில் பலியிட வேண்டும்.காலையிலுள்ள உணவுப் படையல் போன்றும், அதன் நீர்மப்படையல் போன்றும் அதை நெருப்புப் பலியாகவும் ஆண்டவருக்கு உகந்த நறுமணமாகவும் நீங்கள் படைக்க வேண்டும். |
9 | ஓய்வு நாளில், ஒரு வயதுடைய இரண்டு ஆட்டுக்குட்டிகளையும் உணவுப் படையலாக எண்ணெயில் பிசைந்த இருபதுபடி மரக்காலில் பத்தில் இரண்டு அளவு மிருதுவான மாவையும், அத்துடன்நீர்மப் படையலையும் செலுத்த வேண்டும். |
10 | எந்நாளும் செலுத்தும் எரிபலியும் நீர்மப் படையலும் நீங்கலாக இது ஒவ்வோர் ஓய்வு நாளிலும் செலுத்தப்பட வேண்டிய எரிபலி ஆகும். |
11 | மாதத் தொடக்கத்தில் எரிபலியாக நீங்கள் ஆண்டவருக்குச் செலுத்த வேண்டியவை: இளங்காளைகள் இரண்டு: ஆட்டுக் கிடாய் ஒன்று: ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் ஏழு: இவை பழுதற்றவையாக இருக்க வேண்டும். |
12 | அவற்றுடன், உணவுப் படையலுக்காகக் காளை ஒவ்வொன்றுக்கும் எண்ணெயில் பிசைந்த இருபதுபடி மரக்காலில் மூன்று அளவு மெல்லிய மாவு: உணவுப் படையலுக்காக ஆட்டுக் கிடாய் ஒன்றுக்கு எண்ணெயில் பிசைந்த பத்தில் இருபங்கு மெல்லிய மாவு: |
13 | இவை எரிபலிக்காகவும் ஆண்டவருக்கு உகந்த நறுமணமான நெருப்புப் பலிக்காகவும் இருக்க வேண்டியவை. |
14 | அவற்றின் நீர்மப் படையல்களுக்கான திராட்சை இரசம் காளை ஒன்றுக்கு அரை கலயம், ஆட்டுக்கிடாய் ஒன்றுக்கு மூன்றிலொரு கலயம், ஆட்டுக்குட்டி ஒன்றுக்கு கால் கலயம் என்ற அளவில் இருக்க வேண்டும்.இது ஆண்டில் எல்லா மாதங்களிலும் ஒவ்வொரு மாதத்திற்கும் உரிய எரி பலி. |
15 | எந்நாளும் செலுத்தப்படும் எரிபலியும், நீர்மப் படையலும் நீங்கலாகப் பாவம் போக்கும் பலியாக ஆண்டவருக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாய் செலுத்த வேண்டும். |
16 | முதல் மாதத்தின் பதினான்காம் நாள் ஆண்டவரின் பாஸ்கா. |
17 | இந்த மாதத்தின் பதினைந்தாம் நாள் திருவிழா.ஏழுநாள்களும் புளிப்பற்ற அப்பமே உண்ண வேண்டும். |
18 | முதல் நாளில் திருப்பேரவை கூட்டப்படும்.கடின வேலை ஏதும் நீங்கள் செய்யக்கூடாது. |
19 | ஆனால் நெருப்புப் பலியொன்றை, எரிபலியொன்றை ஆண்டவருக்குச் செலுத்த வேண்டும். |
20 | அத்துடன் உணவுப் படையலாக எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு, காளை ஒன்றுக்கு ஆறு படியும், வெள்ளாட்டுக்கிடாய் ஒன்றுக்கு நான்கு படி அளவு வீதம் நீங்கள் படைக்க வேண்டும். |
21 | ஏழு ஆட்டுக் குட்டிகளில் ஒவ்வொன்றுக்கும் இரண்டு படி அளவு வீதம் படைக்க வேண்டும். |
22 | இத்துடன் உங்களுக்குக் கறைநீக்கம் செய்யப் பாவம் போக்கும் பலியாகச் செலுத்த வேண்டிய ஒரு வெள்ளாட்டுக்கிடாய். |
23 | எந்நாளும் செலுத்தும் எரிபலியாக, காலை தோறும் செலுத்தும் எரிபலி நீங்கலாக, இவற்றை நீங்கள் செலுத்த வேண்டும். |
24 | நாள்தோறும் இதே முறையில் ஏழு நாள்களுக்கும் நெருப்புப் பலியாகிய உணவை, ஆண்டவருக்கு உகந்த நறுமணத்தை நீங்கள் படைக்க வேண்டும்.இது எந்நாளும் செலுத்தும் எரி பலியும் நீர்மப் படையலும் நீங்கலாகப் படைக்க வேண்டியது. |
25 | ஏழாம் நாள் உங்களுக்குத் திருப்பேரவை நாள்.நீங்கள் கடினமான வேலை ஏதும் செய்யக்கூடாது. |
26 | வாரங்களின் விழாவில் முதற்பலன்களின் நாளன்று புதுத் தானியத்திலிருந்து நீங்கள் ஆண்டவருக்கு உணவுப் படையல் படைக்கும் போதும் உங்களுக்குத் திருப்பேரவை இருக்கும்: கடினமான வேலை ஏதும் நீங்கள் செய்யக்கூடாது. |
27 | ஆண்டவருக்கு உகந்த நறுமணமாக எரிபலியொன்றைச் செலுத்துவீர்கள்.இதற்கு வேண்டியவை: இளங்காளைகள் இரண்டு, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஒரு வயதான ஆட்டுக்குட்டிகள் ஏழு. |
28 | அத்துடன் உணவுப் படையலாக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவு, காளை ஒன்றுக்கு ஆறுபடியும் ஆட்டுக்கிடாய் ஒன்றுக்கு நான்குபடி அளவில் இருக்கும். |
29 | ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றுக்கும் இரண்டு படி என்ற அளவில் இருக்கும். |
30 | மேலும், உங்களுக்குக் கறை நீக்கம் செய்ய வெள்ளாட்டுக் கிடாய் ஒன்று தேவை. |
31 | இவையும், இவற்றின் இனப் படையலும், எந்நாளும் செலுத்தும் எரிபலியும், அதன் உணவுப் படையலும் நீங்கலாக, நீங்கள் படைக்க வேண்டும்.இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும். |