1 | யோசேப்புப் புதல்வரான மனாசே குடும்பங்களைச் சார்ந்தவர் செலொபுகாத்து.இவர் மனாசேயின் மைந்தர் மாக்கிரின் புதல்வர் கிலியாதுக்குப் பிறந்த ஏபேரின் மகன், இவருக்கு மக்லா, நோகா, ஒக்லா, மில்கா, திர்சா என்ற புதல்வியர் இருந்தனர். |
2 | அவர்கள் வந்து மோசே, குரு எலயாசர், தலைவர்கள், மக்கள் கூட்டமைப்பினர் அனைவர் முன்னிலையில் சந்திப்புக் கூடார வாயிலருகில் நின்று கூறியது: |
3 | எங்கள் தந்தை பாலை நிலத்தில் இறந்து போனார்.கோராகைச் சார்ந்தவர்கள் ஆண்டவருக்கு எதிராகக் கூடிய கூட்டத்தினுள் அவர் இல்லை.அவர்தம் பாவத்துக்காகவே இறந்தார்.அவருக்குப் புதல்வர்கள் இல்லை. |
4 | இப்போதும் தமக்குப் புதல்வர் இல்லாத காரணத்துக்காக எங்கள் தந்தையின் பெயர் அவர் குடும்பத்திலிருந்து ஏன் நீக்கப்பட வேண்டும்? எங்கள் தந்தையின் சகோதரர்களிடையே எங்களுக்கும் பங்கு தாருங்கள்.” |
5 | மோசே அவர்கள் வழக்கை ஆண்டவரிடம் கொண்டு வந்தார். |
6 | ஆண்டவர் மோசேயிடம் கூறியது: |
7 | செலொபுகாதின் புதல்வியர் கேட்பது சரியே: அவர்கள் தந்தையின் சகோதரரிடையே அவர்களுக்கும் உரிமைச் சொத்தில் பங்கு கொடுத்து, அவர்கள் தந்தையின் உரிமைச் சொத்து அவர்களுக்குக் கிடைக்கச் செய். |
8 | நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறு: மகன் இல்லாமலே ஒருவன் இறந்து விட்டால் அவன் உரிமைச் சொத்து அவன் மகளுக்குச் சேர வேண்டும். |
9 | அவனுக்கு மகளும் இல்லையெனில் அவன் உரிமைச் சொத்தை அவன் சகோதரருக்குக் கொடுக்க வேண்டும். |
10 | அவனுக்குச் சகோதரரும் இல்லையெனில் அவன் உரிமைச் சொத்தை அவன் தந்தையின் சகோதரருக்குக் கொடுக்க வேண்டும். |
11 | அவன் தந்தைக்கும் சகோதரர் இல்லையெனில் அவன் உரிமைச் சொத்தை அவன் குடும்பத்தில் அவனுக்கடுத்த உறவினனுக்குக் கொடுக்க வேண்டும்: அவன் அதை உடைமையாக்கிக் கொள்வான்.ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி இது இஸ்ரயேல் மக்களுக்கு நியமமாகவும், விதிமுறையாகவும் விளங்கும். |
12 | மேலும் ஆண்டவர் மோசேயிடம் கூறியது: “இந்த அபாரிம் மலை மேல் ஏறிச் சென்று நான் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்துள்ள நாட்டைப் பார். |
13 | நீ அதைப் பார்த்த பின் உன் சகோதரன் ஆரோன் சேர்த்துக் கொள்ளப்பட்டது போன்று, நீயும் உன் மக்களுடன் சேர்த்துக்கொள்ளப்படுவாய். |
14 | ஏனெனில் சீன் பாலைநிலத்தில் மக்கள் கூட்டமைப்பு தண்ணீருக்காக வாக்குவாதம் செய்தபொழுது நீங்கள் அவர்கள் பார்வையில் என்னைப் புனிதப்படுத்தாது என் வார்த்தையை எதிர்த்துக் கலகம் செய்தீர்கள்” - இவையே சீன் பாலை நிலத்தில் காதேசிலுள்ள மெரிபாவின் நீர்நிலைகள். |
15 | மோசே ஆண்டவரிடம், |
16 | ”உயிர்க்கு எல்லாம் கடவுளாகிய ஆண்டவர் இந்த மக்கள் கூட்டமைப்புக்கு ஒருவனைப் பொறுப்பாளனாக ஏற்படுத்துவாராக: |
17 | அவன் அவர்களுக்கு முன்னே போகவும், அவர்களுக்கு முன்னே வரவும் வேண்டும்: அவ்வாறே வெளியே நடத்திச் செல்லவும் உள்ளே அழைத்து வரவும் வேண்டும்.இதனால் ஆண்டவரின் மக்கள் கூட்டமைப்பு மேய்ப்பனில்லா ஆடுகளாக இராது” என்றார். |
18 | ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நூன் புதல்வன் யோசுவாவைத் தேர்ந்துகொள்: அவன் ஆவியைத் தன்னுள் கொண்டவன்: நீ அவன் மேல் உன் கையை வை. |
19 | குரு எலயாசருக்கும் மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவருக்கும் முன்பாக அவனை நிற்கச் செய்: அவர்கள் பார்வையில் நீ அவனைப் பொறுப்பாளனாக ஏற்படுத்து. |
20 | மக்கள் கூட்டமைப்பின் அனைத்து மக்களும் கீழ்ப்படியும்படி உன் அதிகாரத்தை அவனுடன் பகிர்ந்துகொள். |
21 | அவன் குரு எலயாசருக்கு முன் நிற்க, அவனுக்காக எலயாசர் ஆண்டவர் முன்னிலையில் ஊரிம் வழங்கும் தீர்ப்பை நாடுவான்: அவனும் அவனுடன் இருக்கும் இஸ்ரயேல் மக்கள் அனைவருமான மக்கள் கூட்டமைப்பு முழுவதும் எலயாசரின் வார்த்தையின்படியே வெளியே செல்லவும், உள்ளே வரவும் வேண்டும். |
22 | ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே செய்தார்.அவர் யோசுவாவை அழைத்து குரு எலயாசர் மக்கள் அனைவர் முன்னிலையில் அவரை நிற்கச் செய்தார். |
23 | ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே தம் கைகளை அவர் மேல் வைத்து அவரைப் பொறுப்பாளராக நியமித்தார். |