1 | இஸ்ரயேல் அத்தாரிம் வழியாக வருவதை நெகேபில் வாழ்ந்த கானானியனாகிய அராது மன்னன் கேள்வியுற்றான்: அப்போது அவன் இஸ்ரயேலோடு போரிட்டு அவர்களில் சிலரைச் சிறைபிடித்தான். |
2 | உடனே ஆண்டவரிடம் இஸ்ரயேல் பொருத்தனை செய்து, “நீர் உண்மையில் இம்மக்களை என்கையில் ஒப்படைத்தால் அர்கள் நகர்களை நான் அழித்துவிடுவேன்” என்று கூறியது. |
3 | அவ்வாறே ஆண்டவர் இஸ்ரயேலின் குரலைக் கேட்டுக் கானானியரை ஒப்படைத்தார்: அவர்கள் அவர்களையும் அவர்கள் நகர்களையும் அழித்தனர்: எனவே அந்த இடத்தின் பெயர்”ஓர்மா” என்று வழங்கியது. |
4 | ஏதோம் நாட்டைச் சுற்றிப்போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து அவர்கள்”செங்கடல் சாலை” வழியாகப் பயணப்பட்டனர்: அவ்வழியைமுன்னிட்டு மக்கள் பொறுமையிழந்தனர். |
5 | மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்: “இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது” என்றனர். |
6 | உடனே ஆண்டவர் கொள்ளி வாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்: அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர். |
7 | அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் பாவம் செய்துள்ளோம்” நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்: அவர் இந்தப் பாம்புகளை அகற்றி விடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளும்” என்றனர்.அவ்வாறே மோசே மக்களுக்காக மன்றாடினார். |
8 | அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து: கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார். |
9 | அவ்வாறே மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்: பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான். |
10 | பின், இஸ்ரயேல் மக்கள் புறப்பட்டு ஓபோத்தில் பாளையம் இறங்கினர். |
11 | அடுத்து ஓபோத்திலிருந்து பயணமாகிக் கதிரவன் உதயம் நோக்கி மோவாபுக்கு எதிரேயுள்ள பாலை நிலத்தில் இய்யா அபாரிமில் பாளையம் இறங்கினர். |
12 | அங்கிருந்து அவர்கள் புறப்பட்டுச் செரத் பள்ளத்தாக்கில் பாளையம் இறங்கினர். |
13 | அங்கிருந்து அவர்கள் பயணமாகி அர்னோனுக்கு அப்பால் பாளையம் இறங்கினர்: அது எமோரியர் எல்லையிலிருந்து தொடங்கும் பாலைநிலத்தில் உள்ளது: அர்னோன் மோவாபுக்கும் எமோரிய நாட்டுக்குமிடையேயான மோவாபிய எல்லையாகும். |
14 | “ஆண்டவரின் போர்கள்” என்ற நூல் இவ்வாறு கூறுகிறது: “சூப்பாவிலுள்ள வாகேபும் அர்னோன் சிற்றாறுகளும், |
15 | ஆர் என்னும் பகுதியை நோக்கி விரிவதும் மோவாபு எல்லை மேல் சாய்வதுமான பள்ளத்தாக்குகளின் சரிவு”. |
16 | அங்கிருந்து தொடர்ந்து அவர்கள் பெயேருக்குச் சென்றனர். “மக்களை ஒன்றுகூட்டு: நான் அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன்” என்று ஆண்டவர் மோசேக்குக் கூறிய கிணறு இதுவே. |
17 | பின், இஸ்ரயேல் பாடிய பாடல்: “ஊறிப் பெருகிடு கிணறே! அதைப் புகழ்ந்து பாடுங்கள்: |
18 | ”இளவரசர்கள் செய்கோலால் அகழ்ந்த கிணறு இதுவே: மேன்மக்கள் கோல்கொண்டு குடைந்த கிணறும் இதுவே.” பின் பாலை நிலத்திலிருந்து அவர்கள் மத்தானாவுக்குச் சென்றனர். |
19 | மத்தானாவிலிருந்து நகலியேலுக்குச் சென்றனர்: நகலியேலிலிருந்து பாமோத்துக்குச் சென்றனர். |
20 | பாமோத்திலிருந்து பாலை நிலத்தை நோக்கி நிற்கும் பிஸ்காவின் கொடுமுடிக்கருகில் மோவாபு பகுதியில் இருந்த பள்ளத்தாக்குக்குச் சென்றனர். |
21 | இஸ்ரயேல் எமோரியர் மன்னன் சீகோனிடம் தூதர்களை அனுப்பிக் கூறியது: |
22 | ”உம் நாடு வழியே நான் செல்ல அனுமதியும்: நாங்கள் வயல் பக்கமோ திராட்சைத் தோட்டப் பக்கமோ திரும்ப மாட்டோம்: நாங்கள் யாதொரு கிணற்றிலிருந்தும் தண்ணீர் குடிக்கவுமாட்டோம்: நாங்கள் உம் எல்லையைத் தாண்டும் வரை அரச நெடுஞ்சாலை வழியாகவே செல்வோம்.” |
23 | ஆனால் தன் எல்லை வழியே இஸ்ரயேல் கடந்து செல்ல சீகோன் இடந்தரவில்லை.அவன் தன் ஆள்கள் எல்லாரையும் சேர்த்துக் கொண்டு இஸ்ரயேலுக்கு எதிராகப் பாலை நிலத்துக்குச் சென்றான்: யாகாசுக்கு வந்து இஸ்ரயேலை எதிர்த்துப் போரிட்டான். |
24 | இஸ்ரயேல் வாள் முனையில் அவனைக் கொன்று அர்னோன் தொடங்கி அம்மோனியர் வரையுள்ள யாப்போகு மட்டும் அவன் நாட்டைக் கைப்பற்றியது: அம்மோனியர் எல்லை அரணாய் அமைந்திருந்தது. |
25 | இஸ்ரயேல் இந்த நகர்கள் அனைத்தையும் சொந்தமாக்கிக் கொண்டது: இஸ்ரயேல் எமோரியரின் அனைத்து நகர்களிலும் எஸ்போனிலும் அதன் எல்லாக் கிராமங்களிலும் குடியிருந்தது. |
26 | ”போன் என்பது எமோரிய மன்னன் சீகோனின் நகர்: அவன் மோவாபின் முன்னைய மன்னனோடு போரிட்டு அவன் கையிலிருந்து அர்னோன் வரை இருந்த நாடு முழுவதையும் கைப்பற்றி இருந்தான். |
27 | எனவேதான் கவிஞர் பாடுகின்றனர்: “எஸ்போனுக்கு வாருங்கள்: அது கட்டப்படட்டும்: சீகோன் நகர் நிறுவப்படட்டும். |
28 | நெருப்பு, எஸ்போனிலிருந்தும் நெருப்புத் தழல் சீகோன் நகரிலிருந்தும் சென்றது: அது மோவாபிலுள்ள அர் நகரையும் அர்னோன் மேடுகளிலுள்ள தலைவர்களையும் விழுங்கிவிட்டது. |
29 | மோவாபு! உனக்கு ஐயோ கேடு: கெமொசின் மக்களே, உங்களுக்கு முடிவு வந்துவிட்டது: எமோரிய அரசன் சீகோனுக்கு கெமோசின் காரணமாய் அவன் புதல்வர் புறங்காட்டி ஓடினர்: அவன் புதல்வியர் சிறைக் கைதிகளாயினர்: |
30 | எனவே எஸ்போன் முதல் தீபோன் வரை அழிந்தது: மேதபா வரையுள்ள நோபுபாக்குப் பகுதியைப் பாழாக்கினோம்.” |
31 | இவ்வாறு இஸ்ரயேல் எமோரியர் நாட்டில் தங்கிற்று. |
32 | பின்னர் யாசேரை உளவு பார்க்கும்படி மோசே ஆளனுப்பினார்: அவர்கள் அதன் கிராமங்களைக் கைப்பற்றி அங்கிருந்த எமோரியரைத் துரத்தி விட்டனர். |
33 | அதன் பிறகு அவர்கள் திரும்பிப் பாசான் நெடுஞ்சாலை வழியாகப் போனார்கள்: பாசான் மன்னன் ஓகு என்பவனும் அவன் மக்கள் அனைவரும், எதிரேயி என்னுமிடத்தில் போர் புரியும்படி அவர்களுக்கு எதிராக வந்தனர். |
34 | ஆனால் ஆண்டவர் மோசேயிடம், “அவனுக்கு அஞ்ச வேண்டாம், நான் அவனையும் அவன் மக்கள் அனைவரையும் அவன் நாட்டையும் உன் கையில் ஒப்படைத்து விட்டேன்: நீ எஸ்போனில் வாழ்ந்த எமோரியர் மன்னன் சீகோனுக்குச் செய்தது போல இவனுக்கும் செய்வாய்” என்றார். |
35 | அங்ஙனமே அவர்கள் அவனையும் அவன் புதல்வரையும் அவன் மக்கள் அனைவரையும் ஒருவர் கூட எஞ்சியிராதபடி கொன்றொழித்தனர்: அவன் நாட்டையும் அவர்கள் கைப்பற்றினர். |