1 | முதல் மாதத்தில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் சீன் பாலைநிலத்துக்கு வந்தது: மக்கள் காதேசில் தங்கினர். மிரியாம் அங்கே இறந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டாள். |
2 | அப்போது மக்கள் கூட்டமைப்புக்குத் தண்ணீர் இல்லாதிருந்தது: அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக ஒன்று கூடினர். |
3 | மக்கள் மோசேயுடன் வாதாடிக் கூறியது: “ஆண்டவர் திருமுன் எங்கள் சகோதரர்கள் மாண்டபோது நாங்களும் மாண்டிருந்தால் நலமாயிருந்திருக்குமே! |
4 | ஆண்டவரின் சபையை இந்தப் பாலைநிலத்துக்கு நீங்கள் கொண்டு வந்தது ஏன்? நாங்களும் எங்கள் கால்நடைகளும் இங்குச் சாகவேண்டுமென்றா? |
5 | இந்தக் கொடிய இடத்துக்கு அழைத்துவர, எங்களை எகிப்திலிருந்து வெளியேறபப் பண்ணினது ஏன்? தானிய நிலம், அத்தி மரங்கள், திராட்சைக் கொடிகள், மாதுளைச் செடிகள் எவையுமே இங்கு இல்லை: குடிப்பதற்குத் தண்ணீரும் இல்லையே!” |
6 | பின், மோசேயும் ஆரோனும் சபைக்கு முன்னின்று சந்திப்புக்கூடாரத்தின் நுழைவாயிலுக்குச் சென்று முகங்குப்புற விழுந்தனர்.ஆண்டவரின் மாட்சி அவர்களுக்குத் தோன்றியது. |
7 | ஆண்டவர் மோசேயிடம், |
8 | “கோலை எடுத்துக் கொள்: நீயும்உன் சகோதரன் ஆரோனும் மக்கள் கூட்டமைப்பைக் கூடிவரச் செய்யுங்கள்: அவர்கள் பார்வையில் பாறைத் தண்ணீரைத் தரும்படி அதனிடம் பேசுங்கள்: இவ்வாறு அவர்களுக்காகப் பாறையிடமிருந்து நீங்கள் தண்ணீர் பெறுவீர்கள்: மக்கள் கூட்டமைப்புக்கும் அவர்கள் கால்நடைகளுக்கும் குடிக்கக் கொடுப்பீர்கள்”என்றார். |
9 | அவர் கட்டளைப்படியே மோசே ஆண்டவர் திருமுன்னின்று கோலை எடுத்தார். |
10 | மோசேயும் ஆரோனும் பாறைக்கு முன்பாகச் சபையை ஒன்று கூட்டினர்.மோசே அவர்களிடம், “கலகக்காரரே, இப்போது கேளுங்கள், இப்பாறையிலிருந்து உங்களுக்குத் தண்ணீர் வரவழைக்க எங்களால் கூடுமா?” என்று கேட்டார். |
11 | பின் மோசே தம் கையை ஓங்கித் தம் கோலால் பாறையை இருமறை அடித்தார்: தண்ணீர் தாராளமாக வந்தது, மக்கள் கூட்டமைப்பினரும் அவர்கள் கால்நடைகளும் குடித்தனர். |
12 | ஆண்டவரோ மோசேயிடமும் ஆரோனிடமும், “இஸ்ரயேல் மக்கள் பார்வையில் நான் தூயவராக விளங்கும்படி நீங்கள் என்னில் நம்பிக்கை கொள்ளாமல் போனதால் இந்தச் சபையை நான் அவர்களுக்குக்கொடுக்கவிருக்கும் நாட்டில் கொண்டு சேர்க்க மாட்டீர்கள்” என்றார். |
13 | இது மெரிபாவின் தண்ணீர்: இங்குத்தான் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம் வாதாடினர், அவர் அவர்களிடையே தம்மைத் தூயவராகக் காண்பித்தார். |
14 | காதேசிலிருந்து மோசே ஏதொம் மன்னனிடம் தூதரை அனுப்பிக் கூறியது: உன் சகோதரன் இஸ்ரயேல் கூறுவது இதுவே: எங்களுக்கு நேர்ந்த இடர்ப்பாடுகள் அனைத்தையும் நீர் அறிவீர்: |
15 | எங்கள் மூதாதையர் எகிப்துக்குச் சென்றனர்: நாங்கள் எகிப்திலே நெடுங்காலம் தங்கியிருந்தோம்: எகிப்தியர் எங்களையும் எங்கள் மூதாதையரையும் மிகவும் கொடுமையாக நடத்தினார்கள்: |
16 | நாங்கள் ஆண்டவரை நோக்கி அழுதபோது அவர் எங்கள் குரலைக் கேட்டு எங்களை எகிப்திலிருந்து வெளிக்கொணர ஒரு தூதனை அனுப்பினார்: நாங்கள் இங்கு உமது எல்லையின் ஓரத்திலுள்ள காதேசு நகரில் இருக்கிறோம். |
17 | இப்போதும் உம் நாடு வழியே எங்களைப் போக விடும்: நாங்கள் வயலின் ஊடேயோ திராட்சைத் தோட்டத்தின் ஊடேயோ கடந்து செல்ல மாட்டோம்: எந்தக் கிணற்றிலிருந்தும் தண்ணீர் குடிக்கமாட்டோம்: நாங்கள் அரச நெடுஞ்சாலை வழியே செல்வோம்: உம் எல்லையைத் தாண்டும்வரை நாங்கள் வலப்புறமோ இடப்புறமோ திரும்ப மாட்டோம். |
18 | ஆனால் ஏதொம், “நீங்கள் கடந்து செல்லக்கூடாது, மீறினால் நான் உங்களுக்கெதிராக வாளெடுத்து வரவேண்டியிருக்கும்”என்று அவருக்குக் கூறியனுப்பினான். |
19 | இஸ்ரயேல் மக்கள் அவனிடம், “நாங்கள் நெடுஞ்சாலை வழியே செல்வோம்: நாங்களோ, எங்கள் கால்நடைகளோ, உம் தண்ணீரைக் குடித்தால், அதற்கான விலையைத் தருவோம்: கால்நடையாகக் கடந்து செல்லமட்டும் எங்களுக்கு அனுமதி தாரும், வேறெதுவும் வேண்டாம்” என்றனர். |
20 | ஆனால் அவனோ, “நீங்கள் கடந்து செல்லவே கூடாது” என்று கூறிவிட்டான்.ஏதோம் திரண்ட வலிமை மிகுந்த படையோடு அவர்களுக்கெதிராக வந்தான். |
21 | இவ்வாறு ஏதோம் தன் எல்லைக்குள் இஸ்ரயேலுக்கு வழி தர மறுத்தான்: எனவே இஸ்ரயேலர் அவனை விட்டு விலகிப் போயினர். |
22 | இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் காதேசிலிருந்து பயணம்செய்து, “ஓர்” என்ற மலைக்கு வந்தனர். |
23 | ஆண்டவர் ஏதோம் நாட்டின் எல்லையில் ஓர் என்ற மலையில் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது: |
24 | ஆரோன் தன் மக்களோடு சேர்த்துக்கொள்ளப்படுவான்: நான் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டுக்குள் அவன் நுழைய மாட்டான்: ஏனெனில், “மெரிபாவின் தண்ணீர்” அருகில் நீங்கள் என் கட்டளையை மீறினீர்கள். |
25 | ஆரோனையும் அவனுடைய மகன் எலயாசரையும் ஓர் என்ற மலைக்குக் கூட்டிக் கொண்டு வா: |
26 | ஆரோனின் உடைகளை உரிந்து அவற்றை அவனுடைய மகன் எலயாசருக்கு உடுத்து: ஆரோன் தன் மக்களோடு சேர்த்துக் கொள்ளப்படுவான், அங்கேயே இறப்பான்”. |
27 | ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே செய்தார்: மக்கள் கூட்டமைப்பு முழுவதின் பார்வையிலும் அவர்கள் ஓர் என்ற மலைக்கு ஏறிப் போனார்கள். |
28 | மோசே ஆரோனின் உடைகளை உரிந்து அவற்றை அவர் மகன் எலயாசருக்கு உடுத்தினார்: ஆரோன் அங்கேயே மலையுச்சியில் இறந்தார்.பின் மோசேயும் எலயாசரும் மலையைவிட்டுக் கீழிறங்கி வந்தனர். |
29 | ஆரோன் இறந்ததை மக்கள் கூட்டமைப்பு அறிந்தது: இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரோனுக்காக முப்பது நாள்கள் துக்கம் கொண்டாடினர். |