வேதாகமத்தை வாசி

எண்ணாகமம் 19

                   
புத்தகங்களைக் காட்டு
1பின்னும் ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:
2ஆண்டவர் கட்டளையிட்ட சட்டவிதிமுறை இதுவே: பழுதற்ற செங்கிடாரி ஒன்றை உன்னிடம் கொண்டு வரும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல்: அது குறையற்றதும் ஒருபோதும் நுகம் சுமக்காததுமாய் இருக்கட்டும்.
3அதை நீ குரு எலயாசரிடம் கொடுப்பாய்: அது பாளையத்துக்கு வெளியே எடுத்துச்செல்லப்பட்டு அவன் முன்னிலையில் அடிக்கப்படும்:
4எலயாசர் தன் விரலினால் அதன் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து சந்திப்புக்கூடாரத்திற்கு முன்புறம் ஏழு முறை தெளிப்பான்.
5அந்தக் கிடாரி அவன் முன்னிலையில் சுட்டெரிக்கப்படும்: அதன் தோல், தசை, இரத்தம் ஆகியவையும் சாணியுடன் சுட்டெரிக்கப்படும்:
6அப்போது குரு கேதுருக்கட்டை, ஈசோப்பு, கருஞ்சிவப்பு நூல் ஆகியவற்றை எடுத்து எரிக்கப்படும் கிடாரி மேல் போடுவான்.
7பின் குரு தன் உடைகளைத் துவைத்துத் தண்ணீரில் குளிப்பான்: அதன் பின்னர்தான் அவன் பாளைத்தினுள் வர வேண்டும்: அந்த மாலைவரை குரு தீட்டுப்பட்டவனாயிருப்பான்.
8கிடாரியைச் சுட்டெரிக்கிறவனும் தன் உடைகளைத் துவைத்துத் தண்ணீரில் குளிப்பான்: அவனும் மாலைவரை தீட்டுப்பட்டவனாயிருப்பான்.
9தீட்டுப்படாத ஒருவன் கிடாரியின் சாம்பலைக் கூட்டி அதைப் பாளையத்துக்கு வெளியே ஒரு தூய்மையான இடத்தில் கொட்டி வைப்பான்: அது இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்புக்கென்று தீட்டகற்றும் தண்ணீருக்காக வைக்கப்படும்: அது பாவ நீக்கத்திற்காகப் பயன்படும்.
10கிடாரியின் சாம்பலை அள்ளிக் கூட்டுகிறவன் தன் உடைகளைத் துவைப்பான்: அவன் மாலைவரை தீட்டுப்பட்டவனாயிருப்பான்.இது இஸ்ரயேல் மக்களுக்கும் அவர்களிடையே தங்கும் அயல்நாட்டவருக்கும் என்றுமுள நியமமாக விளங்கும்.
11மனிதப் பிணத்தைத் தொடுபவன் எவனும் ஏழு நாள்களுக்குத் தீட்டுப்பட்டிருப்பான்.
12மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் அவன் தன்னைத் தண்ணீரால் தூய்மையாக்கிக் கொள்வான்: இங்ஙனம் அவன் தூய்மையாயிருப்பான்: ஆனால் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் அவன் தன்னைத் தூய்மைப்படுத்தவில்லையெனில் அவன் தூய்மையடையான்.
13பிணத்தை, அதாவது இறந்துபட்ட எந்த ஒரு மனிதனின் உடலைத் தொட்டபின், தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளாதவன் எவனோ அவன் ஆண்டவரின் திருஉறைவிடத்தைத் தீட்டுப்படுத்துகிறான்: அந்த ஆள் இஸ்ரயேலிடமிருந்து விலக்கப்பட வேண்டும்: ஏனெனில் தீட்டுக்கழிக்கும் தண்ணீர் அவன் மேல் ஊற்றப்படவில்லை, அவன் தீட்டுப்பட்டவனாகவே இருப்பான்: அவன் தீட்டு இன்னும் அவன் மேலிருக்கிறது.
14கூடாரத்தில் ஒரு மனிதன் இறக்கும் போது இதுவே சட்டம். அதனுள் வரும் ஒவ்வொருவனும் அதில் இருக்கும் ஒவ்வொருவனும் ஏழு நாள்கள் தீட்டுப்பட்டவனாகவே இருப்பான்.
15அத்துடன் இறுக மூடப்படாமல் திறந்திருக்கும் பாத்திரம் எதுவும் தீட்டுப்பட்டதாகும்.
16திறந்த வெளியில் ஒருவன் வாளால் கொல்லப்பட்டவனையோ, தானாகச் செத்தவனையோ, மனித எலும்பையோ, கல்லறையையோ தொட்டால் அவன் ஏழு நாள்கள் தீட்டுப்பட்டவனாயிருப்பான்.
17தீட்டுப்பட்டிருப்போருக்காக நெருப்பாலான பாவம் போக்கும் பலியின் சாம்பலில் அவர்கள் கொஞ்சம் எடுப்பர்: ஒரு பாத்திரத்தில் ஊற்று நீரை முகந்து அதில் சாம்பலை இடுவர்:
18தூய்மையாயிருக்கும் ஒருவன் ஈசோப்பை எடுத்து அதைத் தண்ணீரில் தோய்த்துக் கூடாரம், அதன் பாத்திரங்கள் மேலும் அங்கிருக்கும் ஆள்கள் மேலும் எலும்பையோ, கொலையுண்டவனையோ, தானாகச் செத்தவனையோ, கல்லறையையோ தொட்டவன் மேலும் தெளிக்க வேண்டும்:
19தூய்மையாயிருப்பவன் தீட்டுப்பட்டவன் மேல் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தெளிப்பான்: இங்ஙனம் ஏழாம் நாள் இவன் அவனைத் தூய்மைப்படுத்துவான்: தூய்மைப்படுத்தியவன் தன் உடைகளைத் துவைத்துத் தண்ணீரில் குளிப்பான்: மாலையில் அவன் தூய்மையாகிவிடுவான்.
20ஆனால் தீட்டுப்பட்டிருந்தும் தன்னைத் தூய்மைப்படுத்தாதவன் ஆண்டவரின் திருஉறைவிடத்தைக் கறைப்படுத்திவிட்டபடியால்சபையிலிருந்து விலக்கப்படுவான்: ஏனெனில் தீட்டுக்கழிக்கும் தண்ணீர் அவன் மேல் ஊற்றப்படவில்லை, அவன் தீட்டுப்பட்டவனாகவே இருக்கிறான்.
21இது அவர்களுக்கு என்றுமுள நியமமாக விளங்கும்: தீட்டுக் கழிக்கும் தண்ணீரைத் தெளிப்பவன் தன் உடைகளைத் துவைக்க வேண்டும்: தீட்டுக் கழிக்கும் தண்ணீரைத் தொடுபவன் மாலை வரை தீட்டுப்பட்டவனாயிருப்பான்.
22தீட்டுப்பட்டவன் தொடுவதெல்லாம் தீட்டுப்பட்டதாகவே இருக்கும்: அதனைத் தொடுபவன் எவனும் மாலைவரை தீட்டுப்பட்டவனாயிருப்பான்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.