1 | ஆண்டவர் மோசேயிடம் கூறியது: |
2 | தொழுநோயர், வெட்டையுள்ளோர், பிணத்தால் தீட்டுப்பட்டோர் அனைவரையும் பாளையத்துக்குப் புறம்பாக்குமாறு இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிடு. |
3 | மக்களிடையே நான் தங்கியிருக்கும் பாளையத்தை அவர்கள் தீட்டுப்படுத்தி விடாதபடி ஆணாயினும், பெண்ணாயினும் அவர்களைப் பாளையத்துக்குப் புறம்பாக்கிவிடுங்கள். |
4 | இஸ்ரயேல் மக்கள் அவ்வாறே அவர்களைப் பாளையத்துக்குப் புறம்பே துரத்திவிட்டனர். ஆண்டவர் மோசேயிடம் சொன்னபடியே இஸ்ரயேலர் செய்தனர். |
5 | ஆண்டவர் மோசேயிடம் கூறியது: |
6 | இஸ்ரயேல் மக்களிடம் சொல்: மனிதர் ஆண்டவரை மீறிச் செய்யும் பாவங்களில் எதையும் ஓர் ஆணோ, பெண்ணோ செய்து குற்றவாளியானால், |
7 | அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை அறிக்கையிட வேண்டும்: தீங்கிழைக்கப்பட்டவனுக்கு ஈடுகட்டி, அத்துடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்க வேண்டும். |
8 | குற்ற ஈட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ள முறைஉறவினன் இல்லையெனில் அந்தக் குற்ற ஈட்டுத் தொகை ஆண்டவருக்கு, அதாவது குருவிடம் சேரும்: இது அவன் குற்ற நீக்கத்துக்காகச் செலுத்தும் ஈட்டுப்பலி: ஆட்டைத் தவிரச் சேர வேண்டியது, |
9 | இஸ்ரயேல் மக்கள் குருவிடம் கொண்டு வரும் புனிதப் பொருள்கள் அனைத்திலும் உயர்த்திப் படைப்பவை அவனையே சேரும். |
10 | ஒவ்வொரு மனிதனின் புனிதப் பொருள்களும் அவனுக்குரியவை: ஆனால் அவன் குருவுக்குக் கொடுப்பது அவனையே சேரும். |
11 | மேலும் ஆண்டவர் மோசேயிடம் கூறியது: |
12 | இஸ்ரயேல் மக்களிடம் சொல்: ஒருவனின் மனைவி நெறி தவறி அவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தால், |
13 | வேறொருவன் அவளோடு படுத்து உடலுறவு கொள்ள, அது அவள் கணவனின் கண்களுக்கு மறைக்கப்பட்டு அவள் கறைப்பட்டிருந்தும் கண்டு பிடிக்கப்படாதிருந்து, அவள் தவறு செய்த நிலையிலேயே பிடிக்கப்படாமலிருந்தால், |
14 | வெஞ்சினத்தின் ஆவி, கணவனை ஆட்கொண்டு தன்னையே கறைப்படுத்திவிட்ட மனைவியின் மேல் அவன் வெகுண்டழுந்தால் அல்லது வெஞ்சினத்தின் ஆவி அவனை ஆட்கொண்டு தன் மனைவி தன்னையே கறைபடுத்தாதிருந்தும் அவன் வெகுண்டெழுந்தால், |
15 | அவன் தன் மனைவியை குருவின் முன் கொண்டு வரவேண்டும்.அவளை முன்னிட்டுத் தேவைப்படும் பத்தில் ஒரு ஏப்பாவாற்கோதுமை உணவைப் படைக்க வேண்டும்: அவன் அதன் மேல் எண்ணெய் ஊற்றவோ தூபப்பொருள்கள் தூவவோ கூடாது.ஏனெனில் அது நினைவுபடுத்தும் உணவுப்படையல், அதாவது குற்றத்தை நினைவூட்டக்கூடிய சினத்தின் உணவுப்படையல். |
16 | பின் குரு அவளைக் கூட்டிக் கொண்டு வந்து ஆண்டவர் முன் நிறுத்துவார்: |
17 | குரு ஒரு மண் பாத்திரத்தில் புனித நீர் எடுத்து, திருக்கூடாரத்தின் தரையில் இருந்து கொஞ்சம் துகள் எடுத்து நீரில் போடுவார். |
18 | குரு அப்பெண்ணின் தலைமுடியைக் கலைத்துவிட்டு, வெஞ்சினத்தின் உணவுப் படையலாகிய நினைவுபடுத்தும் உணவுப்படையலை அவள் கைகளில் வைப்பார்: சாபத்தைக் கொண்டு வரும் கசப்பு நீரையும் குரு தன் கையில் வைத்திருப்பார். |
19 | அதன் பின்னர் குரு அவளை ஆணையிடச் சொல்லிக் கூற வேண்டியது: “நீ உன் கணவனின் அதிகாரத்துக்கு உட்பட்டிருக்கும்போது வேறு எந்த மனிதனும் உன்னோடு படுக்காமலும், நீ ஒழுக்கக்கேட்டுக்கு உடன்படாமலுமிருந்தால் சாபங்களைக் கொண்டு வரும் இக்கசப்பு நீர் உன்னை ஒன்றுஞ் செய்யாது: |
20 | ஆனால் நீ உன் கணவனின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தும் நெறி தவறி, உன்னையே கறைப்படுத்தி, உன் கணவன் தவிர வேறொருவன் உன்னோடு படுத்திருக்க உடன்பட்டால் |
21 | குரு அப்பெண்ணைச் சாப ஆணை இடச் சொல்லி அவளிடம், “ஆண்டவர் உன் தொடைகள் அழுகி விழவும் உன் வய்று வீங்கவும் செய்து உன் மக்களிடையே உன்னை ஒரு சாபமாகவும், ஆணைக்கூற்றாகவும் ஆக்குவார்: |
22 | சாபத்தைக் கொண்டு வரும் இந்த நீர் உன் குடல்களில் இறங்கி உன் வயிற்றை வீங்கச் செய்து உன் தொடைகளை அழுகி விழச் செய்யட்டும்” என்பார்.அதற்கு அப்பெண்”ஆமென், ஆமென்” என்பாள். |
23 | பின்னர் குரு இச்சாபங்களை ஓர் ஏட்டில் எழுதிக் கசப்பு நீரால் அவற்றை அழித்து விடுவார்: |
24 | சாபத்தைக் கொண்டுவரும் அக் கசப்பு நீரை அப்பெண் குடிக்கச் செய்வார்: சாபத்தைக் கொண்டு வரும் அந்நீர் அவளுக்குள் சென்று கொடிய வேதனையை உண்டாக்கும். |
25 | குரு வெஞ்சினத்தின் உணவுப்படையலைப் பெண்ணின் கையிலிருந்து வாங்கி அதை ஆண்டவர் முன்னிலையில் ஆரத்தியாகக் காடடிப் பலிபீடத்துக்குக் கொண்டு வருவார். |
26 | குரு அந்த உணவுப் படையிலிலிருந்து அதன் நினைவுப் பகுதியாக ஒரு கைப்பிடி எடுத்து அதனைப் பீடத்தின் மேல் எரித்து விடுவார்: இறுதியாக அப்பெண், அந்நீரைக் குடிக்கச் செய்வான். |
27 | அவன் அவளை நீர் குடிக்கச் செய்யும்போது அவள் உண்மையிலேயே தன்னைக் கறைப்படுத்தித் தன் கணவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்திருந்தால் சாபத்தைக் கொண்டுவரும் நீர் அவளுக்குள் போய் கொடிய வேதனையை உண்டாக்கும்: அவள் வயிறு வீங்கி, தொடைகள் அழுகிவிடும்: அவள் தன் மக்களிடையே ஒரு சாபமாக இருப்பாள். |
28 | ஆனால், அப்பெண் கறைபடாது தூயவளாயிருந்தால் அவளுக்கு ஒரு கேடும் வராது: அவள் குழந்தையைக் கருத்தரிப்பாள். |
29 | வெஞ்சினத்தின் வேளைகளில் இதுவே சட்டம்: அதாவது ஒரு மனைவி தன் கணவனின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தும் நெறிதவறித் தன்னையே கறைபடுத்தியிருந்தால், |
30 | அல்லது வெஞ்சினத்தின் ஆவி ஒரு மனிதன் மேல் வந்து அவன் தன் மனைவி மேல் வெகுண்டெழுந்தால் அவன் அவளை ஆண்டவர் திருமுன் நிறுத்துவான்: குரு இச்சட்டத்தையெல்லாம் அவளிடம் செயல்படுத்துவார். |
31 | ஆடவன் தன் குற்றப்பழி அற்றவனாவான்: பெண்ணோ தன் குற்றப்பழியைச் சுமப்பாள். |