1 | ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது: |
2 | லேவியின் புதல்வர்களிலிருந்து கோகாத்தின் புதல்வரை அவர்கள் மூதாதையர், வீடுகள், குடும்பங்கள் வாரியாகக் கணக்கெடு. |
3 | சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வரும் முப்பது வயது முதல் ஐம்பது வயது வரையுள்ள அனைவரையும் கணக்கெடு. |
4 | சந்திப்புக் கூடாரத்தில் கோகாத்துப் புதல்வரின் மிகப் புனிதமானப் பணி இதுவே: |
5 | பாளையத்தினர் பறப்பட்டுச் செல்லும்போது ஆரோனும் அவன் புதல்வரும் உள்ளே சென்று மூடுதிரையை இறக்கி அதனைக் கொண்டு உடன்படிக்கைப் பேழையை மூடுவர். |
6 | பின் வெள்ளாட்டுத் தோலால் அதனை மூடி கருநீலமான ஒரு துணியை அதன் மேல் விரித்து நிலைக்கால்களில் வைப்பர். |
7 | திருமுன் அப்பத்து மேசையின் மேல் அவர்கள் ஒரு நீலத்துணியை விரிப்பர்: அதன் மேல் தட்டுகள், பூக்கரண்டிகள், கிண்ணங்கள் ஆகியவற்றை வைப்பர்: அப்பம் அதன் மேல் எப்போதும் இருக்கும்: |
8 | பின் அவர்கள் அவற்றின்மேல் ஒரு கருஞ்சிவப்புத் துணியை விரித்து, அவற்றை வெள்ளாட்டுத் தோலால் மூடி, நிலைக்கால்களில் வைப்பர். |
9 | பின்னர் அவர்கள் ஒரு நீலத்துணியை எடுத்து அதை விளக்குத்தண்டு, அதன் விளக்குகள், அதன் திரிகள், அதன் சாம்பல் தட்டுகள் ஆகியவற்றின் மேலும் எண்ணெய்க்காகப் பயன்படுத்தும் பாத்திரங்கள் அனைத்தின் மேலும் விரிப்பர். |
10 | அவர்கள் அதனை அதன் துணைக்கலன்களோடு ஒரு வெள்ளாட்டுத் தோலால் மூடி அதனைச் சுமக்கும் சட்டத்தின் மேல் வைப்பர். |
11 | பின் பொற்பீடத்தின் மேல் ஒரு நீலத்துணியை அவர்கள் விரித்து, வெள்ளாட்டுத் தோலால் அதனை மூடிநிலைக்கால்களில் வைப்பர். |
12 | தூயகப்பணியில் பயன்படுத்தும் அனைத்துப் பாத்திரங்களையும் அவர்கள் எடுத்து, அவற்றை ஒரு நீலத் துணியில் வைத்து வெள்ளாட்டுத் தோலால் அவற்றை மூடிச் சுமக்கும் சட்டத்தின்மேல் வைப்பர். |
13 | அவர்கள் பலிபீடத்திலிருந்து சாம்பலை வெளியே எடுத்து அதன் மேல் ஊதாத் துணியொன்றை விரிப்பர். |
14 | திருப்பணியில் பயன்படுத்தும் துணைக்கலன்களான தீச்சட்டிகள், முள்குறடுகள், சாம்பற் கரண்டிகள், கலங்கள் ஆகிய பலிபீடத்துத் துணைக்கலன்கள் அனைத்தையும் அவர்கள் அதன்மேல் வைப்பர்: வெள்ளாட்டுத்தோலை அதன் மேல் பரப்பி மூடி, அதன் நிலைக்கால்களில் வைப்பர். |
15 | ஆரோனும் அவன் புதல்வரும் திருஉறைவிடத்தையும் திருஉறைவிடத்துப் பணிக்கலன்கள் அனைத்தையும் மூடியதும் பாளையத்தினர் புறப்பட்டுச் செல்வர்.உடனே கோகாத்தின் புதல்வர் இவற்றைத் தூக்கிச் செல்ல வருவர்: ஆனால் சாகாதபடிக்குத் தூய பொருள்களை அவர்கள் தொடக்கூடாது.மீறினால் அவர்கள் சாவுக்கு உள்ளாவார்: கோகாத்தின் புதல்வர் எடுத்துச் செல்ல வேண்டிய சந்திப்புக் கூடாரப் பொருள்கள் இவையே. |
16 | விளக்கிற்கான எண்ணெய், வாசனைத் தூபம், அன்றாட உணவுப் படையல், திருப்பொழிவு எண்ணெய் ஆகியவற்றின் பொறுப்பு குரு ஆரோன் புதல்வன் எலயாசருடையது: திருஉறைவிடம் முழுவதையும், அதிலிருக்கும் அனைத்தையும், தூயகத்தையும் அதிலிருக்கும் பாத்திரங்களையும் அவனே மேற்பார்வை செய்ய வேண்டும். |
17 | ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது: |
18 | லேவியருள் கோகாத்து மரபைச் சார்ந்த குடும்பங்கள் அழிந்துபடாதிருக்கட்டும். |
19 | எனவே புனிதமிகு பொருள்களை அவர்கள் நெருங்கி வருகையில் சாகாமல் உயிரோடிருக்கும்படி நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டியது: ஆரோனும் அவன் புதல்வரும் உள்ளே சென்று அவர்களில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டியது பற்றியும் தூக்கிச் செல்ல வேண்டியது பற்றியும் பணிப்பர். |
20 | ஆயினும் புனிதப் பொருள்கள் மூடப்படும்போது கோகாத்தியர் உள்ளே சென்று பார்க்கக் கூடாது.மீறினால் அவர்கள் சாவுக்குள்ளாவார். |
21 | பின்னர் ஆண்டவர் மோசேயிடம் கூறியது: |
22 | கேர்சோன் புதல்வர்களையும் அவர்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள்வாரியாகக் கணக்கெடு. |
23 | சந்திப்புக் கூடாரவேலையின் திருப்பணிக்கு வரும் முப்பது வயது முதல் ஐம்பது வயதுவரையுள்ள அனைவரையும் கணக்கெடு. |
24 | பணி செய்ய வேண்டியோரும் சுமைகள் தூக்க வேண்டியோருமான கேர்சோனியர் குடும்பங்களின் பணி இதுவே: |
25 | அவர்கள் எடுத்துச் செல்ல வேண்டியவை: திருஉறைவிடத்தின் திரைகள், மூடுதிரையோடு சேர்ந்து சந்திப்புக் கூடாரம், அதன் மேலே உள்ள வெள்ளாட்டுத் தோல், மூடுதிரை, சந்திப்புக் கூடாரத்தின் வாயில்திரை, |
26 | சுற்றுமுற்றத் தொங்கு திரைகள்.திருஉறைவிடத்தையும் பலிபீடத்தையும் சுற்றியிருக்கும் முற்றத்தின் வாயில்திரை, அவற்றின் கயிறுகள், அவர்களின் வேலைக்கான அனைத்துக் கருவிகள் ஆகியவை.அவை தொடர்பான அனைத்துப் பணிகளையும் அவர்கள் செய்வார்கள். |
27 | ஆரோன், அவன் புதல்வர் கட்டளையிட்டபடியே கேர்சோனியர் புதல்வர் செய்யவேண்டிய எல்லா வேலைகளும், அதாவது அவர்கள் செய்ய வேண்டியவை.சுமக்க வேண்டியவை அனைத்தும் இருக்கும்: தூக்கிச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைத்தையும் நீங்கள் அவர்களிடம் விட்டுவிடுங்கள்: |
28 | இதுவே சந்திப்புக் கூடாரத்தில் கேர்சோனியர் குடும்பங்கள் செய்ய வேண்டிய பணி: அவர்களின் பணி குருவாகிய ஆரோன் மகன் இத்தாமரின் மேற்பார்வையின் கீழ் இருக்கும். |
29 | மெராரி புதல்வரை அவர்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாகக் கணக்கெடு. |
30 | சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வரும் ஐப்பது வயது முதல் ஐம்பது வயது வரையுள்ள அனைவரையும் கணக்கெடு. |
31 | சந்திப்புக் கூடாரத்தின் மொத்த வேலையில் அவர்கள் தூக்கிச் செல்ல வேண்டியவற்றிற்கான ஏற்பாடு இதுவே: திருஉறைவிடச் சட்டங்கள், அதன் குறுக்குச் சட்டங்கள், தூண்கள், பாதங்கள். |
32 | சுற்றுமுற்றத்தூண்கள், அவற்றின் பாதங்கள், முளைகள், கயிறுகள், அவற்றுக்கான எல்லாக் கருவிகள் அவை தொடர்பான அனைத்துப் பணிகளே.அவர்கள் தூக்கிச்செல்ல வேண்டிய பொருள்களைப் பெயர் குறித்து அவர்களிடம் ஒப்புவி. |
33 | இதுவே சந்திப்புக் கூடாரத்தில் மெராரியர் குடும்பங்கள் செய்யவேண்டிய மொத்தப்பணி: அவர்கள் குரு ஆரோனின் மகன் இத்தாமரின் கீழ் இருப்பர். |
34 | மோசேயும் ஆரோனும் மக்கள் கூட்டமைப்பின் தலைவர்களும் சேர்ந்து கோகாத்தியர் புதல்வரை அவர்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாகக் கணக்கெடுத்தனர். |
35 | சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வந்த முப்பது வயது முதல் ஐம்பது வயது வரையிருந்த அனைவரையும் கணக்கெடுத்தனர். |
36 | குடும்பங்கள் வாரியாக, எண்ணப்பட்டவர்களின் தொகை இரண்டாயிரத்து எழுநூற்றைம்பது: |
37 | மோசே வழியாக ஆண்டவர் கூறியபடியே மோசேயும் ஆரோனும் எண்ணியதில் கோகாத்தியர் குடும்பங்களில் சந்திப்புக் கூடாரப்பணி செய்தோரின் மொத்தத்தொகை இதுவே. |
38 | தங்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக கேர்சோன் புதல்வருள் எண்ணப்பட்டோர். |
39 | சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வந்த முப்பது வயது முதல் ஐம்பது வயது வரையிருந்த அனைவரிலும், |
40 | தங்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக எண்ணப்பட்டோர் இரண்டாயிரத்து அறுநூற்று முப்பது பேர். |
41 | ஆண்டவர் வார்த்தையின்படி மோசேயும் ஆரோனும் எண்ணியதில் கேர்சோனியர் குடும்பங்களில் சந்திப்புக் கூடாரப் பணி செய்தோரின் மொத்தத் தொகை இதுவே. |
42 | தங்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக மெராரியர் குடும்பங்களில் எண்ணப்பட்டோர்: |
43 | சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வந்த முப்பது வயது முதல் ஐம்பது வயது வரையிருந்த அனைவரிலும், |
44 | குடும்பங்கள் வாரியாக எண்ணப்பட்டோர் மூவாயிரத்து இருநூறு பேர். |
45 | மோசே வழியாக ஆண்டவர் கூறியபடியே மோசேயும் ஆரோனும் எண்ணியதில் மெராரியர் குடும்பங்களில் எண்ணப்பட்டோர் இவர்களே. |
46 | மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் தலைவர்களும் எண்ணியதில் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக எண்ணப்பட்டோர் எல்லோரும்: |
47 | சந்திப்புக் கூடார வேலையில் சுமை தூக்கும் திருப்பணிக்கு வந்த முப்பது வயது முதல் ஐம்பது வயது வரையிருந்தவர்கள், |
48 | அவர்களில் எண்ணப்பட்டோர் எண்ணாயிரத்து ஐந்நூற்று எண்பது பேர். |
49 | மோசே வழியாக ஆண்டவர் கூறியபடியே அவர்களில் ஒவ்வொருவரும் பணி செய்யவும், சுமை சுமக்கவும் நியமிக்கப்பட்டனர்.இவ்வாறு ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர் அவர்களைக் கணக்கெடுத்தார். |