வேதாகமத்தை வாசி

எண்ணாகமம் 24

                   
புத்தகங்களைக் காட்டு
1இஸ்ரயேலுக்கு ஆசி கூறுவதே ஆண்டவருக்கு விருப்பம் என்று பிலயாம் கண்போது, முன்பு செய்தது போன்று அவர் சகுனம் பார்க்கச் செல்லாமல், தம் முகத்தைப் பாலைநிலத்துக்கு நேரே திருப்பினார்.
2பிலயாம் ஏறிட்டுப் பார்க்கவே குலம் குலமாகப் பாளையமிறங்கிய இஸ்ரயேலைக் கண்டார்.அப்போது கடவுளின் ஆவி அவர் மேல் இறங்கியது.
3அவர் திருஉரையாகக் கூறியது: “பெகோர் புதல்வன் பிலயாமின் திருமொழி! கண் திறக்கப்பட்டவனின் திருமொழி!
4கடவுளின் வார்த்தைகளைக் கேட்கிறவனின், பேராற்றல் வாய்ந்தவரின் காட்சியைக் கண்டு கீழே விழுந்தும் கண் மூடாதவனின் திருமொழி!
5யாக்கோபே! உன் கூடாரங்களும் இஸ்ரயேலே! உன் இருப்பிடங்களும் எத்துணை அழகு வாய்ந்தவை!
6அவை விரிந்து கடக்கும் பள்ளத்தாக்குகள் போன்றவை: ஆண்டவர் நட்ட அகில் மரங்கள் போன்றவை: நீர் அருகிலுள்ள கேதுரு மரங்கள் போன்றவை.
7அவனுடைய நீர்க்கால்களிலிருந்து தண்ணீர் ஓடும்: அவனது விதை நீர்த்திரளின்மேல் இருக்கும்: அவனுடைய அரசன் ஆகாகைவிடப் பெரியவன்: அவனது அரசு உயர்த்தப்படும்.
8கடவுள் அவனை எகிப்திலிருந்து கொண்டு வருகிறார்: காண்டா மிருகத்தின் கொம்புகள் அவனுக்குண்டு: அவன் தன் எதிரிகளாகிய வேற்று இனத்தவரை விழுங்கிவிடுவான்: அவர்கள் எலும்புகளைத் தூள் தூள்களாக நொறுக்குவான்: அவர்களைத் தன் அம்புகளால் ஊடுருவக் குத்துவான்:
9அவன் துயில் கொண்டான்: சிங்கம் போன்றும் பெண் சிங்கம் போன்றும் படுத்துக்கொண்டான்: அவனை எழுப்பி விடுவோன் யார்? உனக்கு ஆசி கூறுவோன் ஆசி பெறுவான்: எனவே உன்னைச் சபிப்போன் சாபமடைவான்!”
10எனவே பிலயாம் மீது பாலாக்கு கடும் சினம் கொண்டு தன் கைகளைத் தட்டி பிலயாமிடம், “என் எதிரிகளைச் சபிக்கவே நான் உம்மை அழைத்தேன்: ஆனால் நீர் இம்மூன்று முறையும் அவர்களுக்கு ஆசி கூறியுள்ளீர்:
11எனவே உடனே உம் இடத்துக்கு ஓடிவிடும்: “உமக்கு உறுதியாக மரியாதை செய்வேன்” என்று சொல்லியிருந்தேன்: ஆண்டவரோ நீர் மரியாதை பெறாதபடி தடுத்துவிட்டார்” என்றான்.
12பிலயாம் பாலாக்குக்கு மறுமொழியாகக் கூறியது: “நீர் என்னிடம் அனுப்பிய உம் தூதரிடம் நான் சொல்லவில்லையா?
13பாலாக்கு வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும் ஆண்டவரின் வார்த்தையை மீறிச் சென்று என் விருப்பப்படி நன்மையோ தீமையோ செய்ய இயலாது: ஆண்டவர் பேசுவதையே நான் பேசுவேன் என்று சொல்லவில்லையா?”
14இப்போது நான் என் மக்களிடம் போகிறேன்: வாரும், பிற்காலத்தில் இம்மக்கள் உம் மக்களுக்கு என்ன செய்வார்கள் என்று உமக்குத் தெரிவிப்பேன்” என்றார்.
15அவர் திரு உரையாகக் கூறியது: “பெகோரின் புதல்வன் பிலயாமின் திருமொழி! கண் திறக்கப்பட்டவனின் திருமொழி!
16கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதர் அளித்த அறிவைப் பெற்று பேராற்றலுடையவரின் காட்சி கண்டு கீழே வீழ்ந்தும் கண் மூடப்படாதவனின் திருமொழி!
17நான் அவரைக் காண்பேன்: ஆனால் இப்போதன்று: நான் அவரைப் பார்ப்பேன்: ஆனால் அண்மையிலன்று: யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்! இஸ்ரயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும்! அது மோவாபின் நெற்றிப் பிறையை நசுக்கும்: சேத்தின் புதல்வர் அனைவரையும் அழித்துவிடும்.
18அவன் எதிரியான ஏதோம் பாழாகிவிடும்: சேயிரும் கைப்பற்றப்படும்: இஸ்ரயேலோ வலிமையுடன் செயல்படும்.
19யாக்கோபு ஆளுகை செய்வான்: நகர்களில் எஞ்சியிருப்போர் அழிக்கப்படுவர்.”
20பின் அவர் அமலேக்கைப் பார்த்துத் திருவுரையாகக் கூறியது: “வேற்றினங்களில் முதன்மையானவன் அமலேக்கு: இறுதியில் அவன் அழிந்துபோவான்.”
21அடுத்துக் கேனியனை நோக்கித் திருவுரையாக் கூறியது: “உன் வாழ்விடம் உறுதியானது: உன் கூடு பாறையில் அமைந்துள்ளது:
22ஆயினும் கேனியன் பாழாய்ப் போவான்: ஆசீரியர் உன்னைச் சிறைப் பிடித்துச் செல்ல எவ்வளவு காலந்தான் ஆகும்?”
23பின்னும் அவர் திருவுரையாகக் கூறியது: அந்தோ, கடவுள் இதனைச் செய்யும்போது எவன்தான் பிழைப்பான்?
24கித்திம் தன் கப்பல்களால் ஆசீரியாவையும் ஏபேரையும் துன்புறுத்துவான்”
25பின்பு பிலயாம் எழுந்து தம் இடத்துக்குத் திரும்பினார்: பாலாக்கும் தன்வழியே சென்றான்!

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.