வேதாகமத்தை வாசி

எண்ணாகமம் 25

                   
புத்தகங்களைக் காட்டு
1இஸ்ரயேல் சித்திமில் தங்கியிருந்தபோது மக்கள் மோவாபின் புதல்வியரோடு முறைகேடாக நடக்கத் தொடங்கினர்.
2அவர்கள் தங்கள் தெய்வங்களின் பலிகளில் பங்கேற்க மக்களை அழைத்தனர்: மக்கள் உண்டு அவர்கள் தெய்வங்களைப் பணிந்து வணங்கினர்.
3இங்ஙனம் இஸ்ரயேல் பாகால்பெகோரை அடிபணிந்தது: எனவே ஆண்டவரின் சினம் இஸ்ரயேலுக்கு எதிராக மூண்டது.
4ஆண்டவர் மோசேயிடம், “மக்களின் தலைவர்கள் அனைவரையும் கொண்டு வந்து பட்டப்பகலில் ஆண்டவர் முன் தூக்கிலிடு.அதனால் ஆண்டவர் கடுஞ்சினம் இஸ்ரயேலை விட்டு நீங்கும்” என்று கூறினார்.
5மோசே இஸ்ரயேலின் தலைவர்களிடம், “உங்கள் ஒவ்வொருவரும் பாகால் பெகோரை அடிபணிந்த தம் ஆள்களைக் கொன்று விடுங்கள்” என்றார்.
6மேலும் இஸ்ரயேல் மக்கள் சந்திப்புக் கூடார வாயிலில் அழுது கொண்டிருந்தபொழுது அவர்களில் ஒருவன் மிதியானியப் பெண்ணொருத்தியைத் தன் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்தான்: இது மோசேயின் பார்வையிலும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவர் பார்வையிலும் நடந்தது.
7குரு ஆரோன் மகன் எலயாசரின் புதல்வன் பினகாசு இதனைப் பார்த்ததும் அவன் மக்கள் கூட்டமைப்பை விட்டு எழுந்து தன் கையில் ஓர் ஈட்டியை எடுத்துக் கொண்டான்.
8அவன் அந்த இஸ்ரயேல் மனிதனின் பின்னே உள்ளறைக்குச் சென்று அந்த இஸ்ரயேல் மனிதனையும் அந்தப் பெண்ணையும் சேர்த்து அவள் வயிறு வழியே ஊடுருவக் குத்தினான்.இதனால் இஸ்ரயேல் மக்களிடையே கொள்ளைநோய் அகன்றது.
9எனினும் அக்கொள்ளை நோயால் இறந்தோர் இருபத்து நான்காயிரம் பேர்.
10ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
11குரு ஆரோன் மகன் எலயாசரின் புதல்வன் பினகாசு இஸ்ரயேல் மக்களிடமிருந்து என் சினத்தை அகற்றி விட்டான்: நான் அவர்கள் மீது கொண்டிருந்த அன்பின் வெறியை அவனும் காட்டிவிட்டான்: ஆகவே என் பேரார்வத்தால் இஸ்ரயேல் மக்களை நான் முற்றிலும் அழித்து விடவில்லை.
12எனவே நீ சொல்ல வேண்டியது: “இதோ என் நல்லுறவு உடன்படிக்கையை அவனுக்குக் கொடுக்கிறேன்:
13அது அவனுக்கும் அவனுக்குப் பின் அவன் வழித்தோன்றல்களுக்கும் நிலையான குருத்துவத்தின் உடன்படிக்கையாயிருக்கும்: அவன் தன் கடவுள் மீது பேரார்வம் கொண்டிருந்ததால் இஸ்ரயேல் மக்களுக்காகக் கறை நீக்கம் செய்தான்.”
14மிதியானியப் பெண்ணுடன் சேர்த்துக் கொல்லப்பட்ட இஸ்ரயேலன் பெயர் சிம்ரி: இவன் சிமியோன் குலத்தைச் சார்ந்த மூதாதையர் வீட்டுத் தலைவனான சாலூவின் மகன்:
15கொல்லப்பட்ட அந்த மிதியானியப் பெண்ணின் பெயர் கோசுபி: இவள் மிதியானில் மூதாதையர் வீடொன்றுக்குத் தலைவனான சூரின் மகள்.
16ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
17”மிதியானியரைத் தாக்கி அவர்களை வெட்டி வீழ்த்துங்கள்:
18ஏனெனில், அவர்களும் தங்கள் சூழ்ச்சிகளால் உங்களை ஏமாற்றினார்கள்: இதனால் பெகோரை முன்னிட்டு மிதியான் தலைவனின் மகளாகிய அவர்கள் சகோதரி கோசுபியின் காரியத்திலும் அவர்கள் உங்களைக் கெடுத்து விட்டார்கள்.பெகோரை முன்னிட்டு ஏற்பட்ட கொள்ளை நோய்க் காலத்தில் அவள் கொல்லப்பட்டாள்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.