1 | நான் காவல் மாடத்தில் நிற்பேன்: கோட்டைமேல் நின்று காவல் புரிவேன்: என் வாயிலாக ஆண்டவர் என்ன கூறப்போகின்றார் என்றும் என் முறையீட்டுக்கு என்ன விடையளிப்பார் என்றும் கண்டறிவதற்காகக் காத்திருப்பேன். |
2 | ஆண்டவர் எனக்கு அளித்த மறுமொழி இதுவே: “காட்சியை எழுதிவை: விரைவாய் ஓடுகிறவனும் படிக்கும் வண்ணம் பலகைகளில் தெளிவாய் எழுது. |
3 | குறித்த காலத்தில் நிறைவேறுவதற்காகக் காட்சி இன்னும் காத்திருக்கின்றது: முடிவை நோக்கி விரைந்து செல்கின்றது. ஒருக்காலும் பொய்க்காது. அது காலந்தாழ்த்தி வருவதாகத் தோன்றினால், எதிர்பார்த்துக் காத்திரு: அது நிறைவேறியே தீரும்: காலம் தாழ்த்தாது. |
4 | இதை நம்பாதவரோ உள்ளத்திலே நேர்மையற்றவராய் இருப்பர்: நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர். |
5 | மேலும் செல்வம் ஏமாற்றிவிடும்: ஆணவக்காரர் நிலைத்து நிற்கமாட்டார்: அவர்களது பேராசை பாதாளத்தைப் போல் பரந்து விரிந்தது: சாவைப்போல் அவர்களும் போதும் என்று நிறைவு அடைவதில்லை: வேற்றினத்தார் யாவரையும் அவர்கள் தங்கள் பக்கம் சேர்த்துக் கொள்கின்றனர்: மக்களினங்கள் அனைத்தையும் தங்கள் உடைமை ஆக்கிக் கொள்கின்றனர். |
6 | ஆனால் தோல்வியுற்ற அனைவரும் அவர்கள் மேல் பழிமொழிகளையும், ஏளனப் பாடல்களையும் இப்படிப் புனைவார்கள்: “தமக்குரியது அல்லாததைக் தமக்கெனக் குவித்துக் கொள்கின்றவருக்கு ஐயோ கேடு! இன்னும் எத்துணைக் காலத்திற்கு இப்படிச் செய்வர்? அவர்கள் தங்கள்மேல் அடைமானங்களையே சுமத்திக் கொள்கின்றார்கள்!” |
7 | உமக்குக் கடன் கொடுத்தவர்கள் திடீரென எதிர்த்தெழ மாட்டார்களோ? உன்னைத் திகிலடையச் செய்கின்றவர்கள் விழித்தெழ மாட்டார்களோ? அப்பொழுது நீ அவர்களுக்குக் கொள்ளைப் பொருள் ஆவாய். |
8 | நீ பல நாட்டினரைச் சூறையாடினாய்: மனித இரக்கத்தைச் சிந்தினாய்: நாட்டுக்கும், நகர்களுக்கும் அங்குக் குடியிருப்போர் அனைவர்க்கும் கொடுமைகள் செய்தாய்: இவற்றிற்காக, மக்களினங்களுள் எஞ்சியோர் யாவரும் உன்னைச் சூறையாடுவர். |
9 | தீமையின் பளுவிலிருந்து தப்ப, தான் வாழுமிடத்தை மிக உயரத்தில் அமைக்க, தன் குடும்பத்திற்காக நேர்மையற்ற வழியில் பொருள் சேர்க்கிறவனுக்கு ஐயோ”கேடு! |
10 | உன் திட்டங்களால் உன் குடும்பத்திற்கு மானக்கேட்டை நீ வருவித்தாய்: மக்களினங்கள் பலவற்றை அழித்தமையால், உன் அழிவை நீயே தேடிக்கொண்டாய். |
11 | சுவரிலிருக்கும் கற்களும் உனக்கு எதிராகக் கூக்குரலிடும்: கட்டடத்தின் உத்திரம் அதை எதிரொலிக்கும் |
12 | இரத்தப்பழியால் நகரைக் கட்டி எழுப்பி, அநீதியால் பட்டணத்தை நிலை நாட்டுகிறவனுக்கு ஐயோ கேடு! |
13 | மக்களினங்களின் உழைப்பு நெருப்புக்கு இரையாவதும், வேற்றினத்தாரின் களைப்பு வீணாகப் போவதும் படைகளின் ஆண்டவரது திருச்செயல் அன்றோ? |
14 | தண்ணீரால் கடல் நிரம்பியிருப்பது போல ஆண்டவரின் மாட்சியைப் பற்றிய அறிவால் மண்ணுலகு நிறைந்திருக்கும். |
15 | அடுத்திருப்பவர் மீது கொண்ட சினத்தினால் அவர்களைக் குடிவெறியர்களாக்கி அவர்களது திறந்த மேனியின் அலங்கோலத்தைக் காணும்வரை குடிக்கச் செய்பவனுக்கு ஐயோ கேடு! |
16 | நீ மேன்மை அடையாது ஏளனத்துக்கு ஆளாக்கப்பட்டிருப்பாய்: நீயும் குடி, குடித்துவிட்டுத் தள்ளாடு: ஆண்டவரின் வலக்கையிலுள்ள தண்டனைக்கலம் உன்னிடம் திரும்பிவரும்: அப்போது உன் மேன்மை மானக்கேடாய் மாறும். |
17 | லெபனோனுக்கு நீ செய்த கொடுமை உன் மீது வந்து விழும்: நீ வெட்டி வீழ்த்திய விலங்குகளே உன்னை நடுக்கமுறச் செய்யும்: ஏனெனில் நீ மனித இரத்தத்தைச் சிந்தினாய்: நாட்டுக்கும் நகர்க்கும் அங்குக் குடியிருப்போர் அனைவர்க்கும் கொடுமைகள் செய்தாய். |
18 | சிற்பி செதுக்கிய சிலையாலும், வார்ப்படத்தில் வடித்தெடுத்த படிமத்தாலும் பயன் என்ன? அவை பொய்களின் பிறப்பிடமே! ஆயினும் சிற்பி தான் செதுக்கிய ஊமைச் சிலைகளாகிய கைவேலைகளிலே நம்பிக்கை வைக்கிறான். |
19 | மரக்கட்டையிடம், “விழித்தெழும்” என்றும் ஊமைக் கல்லிடம் “எழுந்திரும்” என்றும் சொல்கிறவனுக்கு ஐயோ கேடு! அவை ஏதேனும் வெளிப்பாடு அருள முடியுமோ? பொன் வெள்ளியால் பொதியப்பட்டிருப்பினும் உள்ளே சிறிதளவும் உயிரில்லையே! |
20 | ஆனால் ஆண்டவர் தம் புனித கோவிலில் வீற்றிருக்கின்றார்: அவர் திருமுன் மண்ணுலகெங்கும் மௌனம் காப்பதாக. |