1 | யூதாவின் அரசர்களான யோத்தாம், ஆகாசு, எசேக்கியா ஆகியவர்களின் காலத்தில் மோரசேத்தைச் சார்ந்த மீக்காவுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: அவர் சமாரியாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட காட்சி இதுவே: |
2 | மக்களினங்களே, நீங்கள் அனைவரும் கேளுங்கள்: நிலவுலகே, அதில் உள்ளவையே, செவிகொடுங்கள். தலைவராகிய ஆண்டவர் தம் திருக்கோவிலிருந்து உங்களுக்கு எதிராகச் சான்றுபகரப் போகிறார். |
3 | இதோ! ஆண்டவர் தாம் தங்குமிடத்திலிருந்து புறப்பட்டு வருகின்றார்: அவர் இறங்கிவந்து நிலவுலகின் மலையுச்சிகள் மிதிபட நடப்பார். |
4 | நெருப்பின்முன் வைக்கப்பட்ட மெழுகுபோலவும், பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும் வெள்ளம்போலவும், அவர் காலடியில் மலைகள் உருகிப்போகும்: பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும். |
5 | யாக்கோபின் குற்றத்தை முன்னிட்டும் இஸ்ரயேல் குடும்பத்தாரின் பாவங்களை முன்னிட்டுமே இவை எல்லாம் நேரிடும். யாக்கோபின் குற்றத்திற்குக் காரணம் யாது? சமாரியா அன்றோ! யூதாவின் தொழுகைமேடுகளுக்குக் காரணம் யாது? எருசலேம் அன்றோ! |
6 | ஆதலால், சமாரியாவைப் பாழடைந்த மண்மேடாகவும் திராட்சை நடும் தோட்டமாகவும் செய்திடுவேன்: அதன் கற்களைப் பள்ளத்தாக்கில் உருட்டிவிட்டு, அதன் அடித்தளங்கள் வெளியிலே தெரியும்படி செய்வேன். |
7 | அதன் செதுக்குப் படிமங்கள் எல்லாம் துகள் துகளாக நொறுக்கப்படும்: அதன் பணயங்கள் எல்லாம் நெருப்பினால் சுட்டெரிக்கப்படும்: அதன் சிலைகளை எல்லாம் உடைத்து கற்குவியல் ஆக்குவேன்: ஏனெனில், விலைமகளுக்குரிய பணயமாக அவை சேர்க்கப்பட்டன: விலைமகளுக்குரிய பணயமாகவே அவை போய்விடும். |
8 | இதை முன்னிட்டே நான் ஓலமிட்டுக் கதறி அழுவேன்: வெறுங்காலோடு ஆடையின்றித் திரிவேன்: குள்ளநரிகளைப்போல் ஊளையிடுவேன்: நெருப்புக் கோழிபோல் கதறி அழுவேன். |
9 | ஏனெனில், சமாரியாவின் புண் ஆறாது: யூதாவரையிலும் அது படர்ந்துவிட்டது: என் மக்களின் வாயிலாம் எருசலேமையும் வந்து எட்டியுள்ளது. |
10 | காத்தில் இதை அறிவிக்கவேண்டாம்: கதறியழவும் வேண்டாம்: பெத்லயப்ராவில் புழுதியில் விழுந்து புரளுங்கள். |
11 | சாபீரில் குடியிருப்போரே, ஆடையின்றி மானக்கேடுற்று அகன்று போங்கள்: சானானில் குடியிருப்போரும் வெளியே வருவதில்லை: பெத்தேத்சலிலும் புலம்பல் எழும்பும். அங்கு உங்களுக்கு அடைக்கலம் கிடைக்காது. |
12 | மாரோத்தில் குடியிருப்போர் நன்மை வரும் என ஆவலோடு காத்திருக்கின்றன: ஏனெனில், தீமை ஆண்டவரிடம் இருந்து இறங்கி எருசலேமின் வாயில்மேல் விழுந்தது. |
13 | இலாக்கீசில் குடியிருப்போரே, விரைந்தோடும் குதிரைகளைத் தேரிலே பூட்டுங்கள்: மகள் சீயோனின் பாவத்திற்கு ஊற்று நீங்களே: இஸ்ரயேலின் குற்றங்கள் முதலில் காணப்பட்டது உங்களிடம்தான். |
14 | ஆதலால், மோரசேத்துகாத்துக்கு நீ சீதனம் கொடுப்பாய்: அக்சீபின் வீடுகள் இஸ்ரயேல் அரசர்களை ஏமாற்றி விடும். |
15 | மாரேசாவில் குடியிருப்போரே, கொள்ளைக்காரன் ஒருவன் உங்கள்மேல் திரும்பவும் வரும்படி செய்வேன்: இஸ்ரயேலின் மேன்மை அதுல்லாமில் ஒளிந்து கொள்ளும். |
16 | உங்கள் அருமைப் பிள்ளைகளுக்காகத் துக்கங் கொண்டாட உங்கள் தலையை மொட்டையடித்துக்கொள்ளுங்கள்: கழுகைப்போல் முற்றிலும் மொட்டையடித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவர்கள் உங்களிடமிருந்து பிரிக்கப்பட்டு நாடுகடத்தப்படுவார்கள். |