1 | பலிபீடத்தருகில் ஆண்டவர் நிற்பதைக் கண்டேன். அவர் சொன்னார்: தூணின் முகட்டை இடித்துப் போடு: மேல்தளம் ஆட்டம் கொடுக்கட்டும்: மக்கள் அனைவருடைய தலையிலும் அதை உடைத்துத் தள்ளு: அவர்களுள் எஞ்சியிருப்போரை நான் வாளால் கொன்றுபோடுவேன்: அவர்களில் எவரும் ஓடிப்போக மாட்டார்: ஒருவர் கூட தப்பிப் பிழைக்கவும் மாட்டார். |
2 | பாதாளம் வரையில் அவர்கள் இறங்கினாலும் அங்கிருந்தும் என் கை அவர்களை இழுத்து வரும்: வான் மட்டும் அவர்கள் ஏறிப்போனாலும், அங்கிருந்தும் நான் அவர்களைப் பிடித்து வருவேன்: |
3 | கர்மேல் மலையுச்சியில் ஓடி ஒளிந்துகொண்டாலும், அவர்களைத் தேடிப் பிடித்து அங்கிருந்து கொண்டு வருவேன்: என் கண்களுக்குத் தப்பி ஆழ்கடலில் மறைந்தாலும், அங்கு அவர்களைக் கடிக்கும்படி பாம்புக்குக் கட்டளையிடுவேன். |
4 | தங்கள் பகைவர்முன் அடிமைகளாய்க் கொண்டு போகப்பட்டாலும், அங்கே அவர்களைக் கொல்லும்படி வாளுக்கு ஆணையிடுவேன்: அவர்களுக்கு நன்மை செய்யாது தீங்கு செய்வதிலேயே நான் கண்ணாயிருப்பேன். |
5 | படைகளின் கடவுளாகிய ஆண்டவர் தொட மண்ணுலகம் பாகாய் உருகுகின்றது: அதில் வாழ்வோர் அனைவரும் புலம்புகின்றனர்: நாடு முழுவதும் நைல்நதியின் வெள்ளமென சுழற்றியெறியப்படுகின்றது: எகிப்து நாட்டின் நைல்நதிபோல் அலைக்கழிக்கப்பட்டு அடங்குகின்றது. |
6 | அவர் வானத்தில் தம் மேலறைகளைக் கட்டுகின்றார்: வானின் வளைவை நிலத்தில் அடித்தளமிட்டு நாட்டுகின்றார்: கடல்களின் நீரை முகந்தெடுத்து நிலத்தின்மேல் பொழிகின்றார்: “ஆண்டவர்” என்பது அவரது பெயராம். |
7 | “இஸ்ரயேல் மக்களே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியரைப் போன்றவர்கள்தானே? இஸ்ரயேல் மக்களை எகிப்து நாட்டினின்றும், பெலிஸ்தியரைக் கப்தோரிலிருந்தும், சிரியரைக் கீரிலிருந்தும் நான் அழைத்து வரவில்லையா?” என்கிறார் ஆண்டவர். |
8 | தலைவராகிய ஆண்டவரின் கண்கள் பாவம் செய்யும் அரசை உற்றுப் பார்க்கின்றன: “மண்ணுலகில் இராதபடி அதை நான் அழித்து விடுவேன். ஆயினும் யாக்கோபின் வீட்டாரை நான் முற்றிலும் அழிக்கமாட்டேன்” என்கிறார் ஆண்டவர். |
9 | நான் ஆணை பிறப்பிப்பேன்: எல்லா மக்களினங்கள் நடுவிலும் இஸ்ரயேல் வீட்டாரைச் சல்லடையில் தானியத்தைச் சலிப்பதுபோலச் சலிக்கப் போகின்றேன்: ஆயினும் கோதுமை மணி ஒன்றும் தரையில் விழாது. |
10 | “தீமை எங்களை அணுகாது, எங்கள்மேல் வராது” என்று என் மக்களுள் எந்தப் பாவிகள் கூறுகின்றார்களோ, அவர்கள் அனைவரும் வாளால் மடிவார்கள். |
11 | “அந்நாள்களில் விழுந்துகிடக்கும் தாவீதின் கூடாரத்தை மீண்டும் உயர்த்துவேன். அதிலுள்ள கிழிசல்களைப் பழுதுபார்த்துச் சிதைந்தவற்றைச் சீர்படுத்திப் பண்டை நாளில் இருந்ததுபோல் மீண்டும் கட்டியெழுப்புவேன். |
12 | அப்பொழுது, ஏதோமில் எஞ்சியிருப்போரையும் எனது பெயரைத் தாங்கியிருக்கும் பிற இனத்தார் அனைவரையும் அவர்கள் தங்கள் உடைமை ஆக்கிக் கொள்வார்கள்,” என்கிறார் இதைச் செயல்படுத்தும் ஆண்டவர். |
13 | “இதோ! நாள்கள் வரப்போகின்றன: அப்போது, அறுவடை செய்வோரை உழுவோரும், கனி பிழிவோரை விதைப்போரும் தொடர்ந்து முன்னேறுவர்: மலைகள் இனிய இரசத்தைப் பொழியும்: குன்றுகள்தோறும் அது வழிந்தோடும்,” என்கிறார் ஆண்டவர். |
14 | “என் மக்களாகிய இஸ்ரயேலை முன்னைய நன்னிலைக்குக் கொண்டுவருவேன்: அவர்கள் பாழடைந்த நகர்களைத் திரும்பக் கட்டி அவற்றில் குடியேறுவார்கள்: திராட்சைத் தோட்டங்களை அமைத்து அவற்றின் கனிரசத்தை அருந்துவார்கள். பழத்தோட்டங்கள் அமைத்து அவற்றின் கனிகளை உண்பார்கள். |
15 | அவர்களைத் தங்கள் நாட்டில் மீண்டும் நான் வேரூன்றச் செய்வேன்: நான் அவர்களுக்கு அளித்திருக்கும் நாட்டிலிருந்து இனி ஒருபோதும் அவர்கள் பிடுங்கப்படமாட்டார்கள்,” என்கிறார் உங்கள் கடவுளாகிய ஆண்டவர். |