வேதாகமத்தை வாசி

ஆமோஸ் 8

                   
புத்தகங்களைக் காட்டு
1தலைவராகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: “கனிந்த பழங்களுள்ள கூடை ஒன்று கண்டேன்.
2அவர், “ஆமோஸ்! என்ன காண்கிறாய்?” என்று கேட்டார்: நான், “கனிந்த பழங்கள் உள்ள கூடை” என்றேன். ஆண்டவர் என்னிடம் தொடர்ந்து பேசினார்: “என் மக்களாகிய இஸ்ரயேலின் முடிவு வந்துவிட்டது: இனி அவர்கள் நடுவே ஒருபோதும் கடந்து செல்ல மாட்டேன்.
3அந்நாளில்”கோவில் பாடல்கள் புலம்பலாய் மாறும்: கணக்கற்ற பிணங்கள் உரிய மரியாதையின்றித் தூக்கியெறியப்படும், எங்கும் ஒரே அமைதி!” என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
4“வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்:
5“நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வுநாள் எப்பொழுது முடிவுறும்? மரக்காலைச் சிறியதாக்கி, எடைக்கல்லைக் கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்:
6வெள்ளிக்காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்: கோதுமைப் பதர்களையும் விற்கலாம்” என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா?
7ஆண்டவர் யாக்கோபின் பெருமைமீது ஆணையிட்டுக் கூறுகின்றார்: “அவர்களுடைய இந்தச் செயல்களுள் ஒன்றையேனும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.
8இதனை முன்னிட்டு நாடு நடுநடுங்காதா? அதில் வாழ்வோர் அனைவரும் புலம்பமாட்டாரா? நாடு முழுவதும் நைல்நதியின் வெள்ளமெனச் சுழற்றியெறியப்படாதா? எகிப்து நாட்டின் நைல்நதிபோல் அலைக்கழிக்கப்பட்டு அடங்காதா?
9தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்: “அந்நாளில் நண்பகலில் கதிரவனை மறையச்செய்து பட்டப்பகலில் உலகை இருள் சூழச் செய்வேன்.
10உங்கள் திருவிழாக்களை அழுகையாகவும், பாடல்களை எல்லாம் புலம்பலாகவும் மாற்றுவேன்: எல்லாரும் இடுப்பில் சாக்கு உடை உடுத்தவும், அனைவரின் தலையும் மழிக்கப்படவும் செய்வேன், ஒரே பிள்ளையைப் பறிகொடுத்தோர் புலம்புவதுபோல நிங்களும் புலம்புமாறு செய்வேன்: அதன் முடிவு கசப்புமிக்க நாளாய் இருக்கும்.”
11தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்: “இதோ! நாள்கள் வரப்போகின்றன! அப்போது நாட்டினுள் பஞ்சத்தை அனுப்புவேன்: அது உணவு கிடைக்காத பஞ்சமோ, நீரில்லாத வறட்சியோ அன்று: ஆண்டவரின் வாக்கு கிடைக்காத பஞ்சமே அது.
12ஒரு கடல் முதல் மறு கடல்வரை, வடதிசை முதல் கீழ்த்திசைவரை தேடிச் சென்று அங்குமிங்கும் தள்ளாடி அலைந்து ஆண்டவரின் வாக்கைத் தேடுவார்கள். ஆனால், அதைக் கண்டடையமாட்டார்கள்.
13அந்நாளில் அழகிய கன்னிப் பெண்களும் இளைஞர்களும் நீர் வேட்கையால் சோர்ந்து வீழ்வார்கள்.
14சமாரியா நாட்டு அஸ்மா தெய்வத்தின் பெயரால் ஆணையிட்டு, “தாண் நாடே! வாழும் உன் கடவுள்மேல் ஆணை!” எனவும் “பெயேர்செபாவில் வாழும் காவலர்மேல் ஆணை!” எனவும் சொல்லுகின்றவர்கள் வீழ்வார்கள்: மீண்டும் எழவே மாட்டார்கள்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.