1 | தலைவராகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: “கனிந்த பழங்களுள்ள கூடை ஒன்று கண்டேன். |
2 | அவர், “ஆமோஸ்! என்ன காண்கிறாய்?” என்று கேட்டார்: நான், “கனிந்த பழங்கள் உள்ள கூடை” என்றேன். ஆண்டவர் என்னிடம் தொடர்ந்து பேசினார்: “என் மக்களாகிய இஸ்ரயேலின் முடிவு வந்துவிட்டது: இனி அவர்கள் நடுவே ஒருபோதும் கடந்து செல்ல மாட்டேன். |
3 | அந்நாளில்”கோவில் பாடல்கள் புலம்பலாய் மாறும்: கணக்கற்ற பிணங்கள் உரிய மரியாதையின்றித் தூக்கியெறியப்படும், எங்கும் ஒரே அமைதி!” என்கிறார் தலைவராகிய ஆண்டவர். |
4 | “வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்: |
5 | “நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வுநாள் எப்பொழுது முடிவுறும்? மரக்காலைச் சிறியதாக்கி, எடைக்கல்லைக் கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்: |
6 | வெள்ளிக்காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்: கோதுமைப் பதர்களையும் விற்கலாம்” என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா? |
7 | ஆண்டவர் யாக்கோபின் பெருமைமீது ஆணையிட்டுக் கூறுகின்றார்: “அவர்களுடைய இந்தச் செயல்களுள் ஒன்றையேனும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். |
8 | இதனை முன்னிட்டு நாடு நடுநடுங்காதா? அதில் வாழ்வோர் அனைவரும் புலம்பமாட்டாரா? நாடு முழுவதும் நைல்நதியின் வெள்ளமெனச் சுழற்றியெறியப்படாதா? எகிப்து நாட்டின் நைல்நதிபோல் அலைக்கழிக்கப்பட்டு அடங்காதா? |
9 | தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்: “அந்நாளில் நண்பகலில் கதிரவனை மறையச்செய்து பட்டப்பகலில் உலகை இருள் சூழச் செய்வேன். |
10 | உங்கள் திருவிழாக்களை அழுகையாகவும், பாடல்களை எல்லாம் புலம்பலாகவும் மாற்றுவேன்: எல்லாரும் இடுப்பில் சாக்கு உடை உடுத்தவும், அனைவரின் தலையும் மழிக்கப்படவும் செய்வேன், ஒரே பிள்ளையைப் பறிகொடுத்தோர் புலம்புவதுபோல நிங்களும் புலம்புமாறு செய்வேன்: அதன் முடிவு கசப்புமிக்க நாளாய் இருக்கும்.” |
11 | தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்: “இதோ! நாள்கள் வரப்போகின்றன! அப்போது நாட்டினுள் பஞ்சத்தை அனுப்புவேன்: அது உணவு கிடைக்காத பஞ்சமோ, நீரில்லாத வறட்சியோ அன்று: ஆண்டவரின் வாக்கு கிடைக்காத பஞ்சமே அது. |
12 | ஒரு கடல் முதல் மறு கடல்வரை, வடதிசை முதல் கீழ்த்திசைவரை தேடிச் சென்று அங்குமிங்கும் தள்ளாடி அலைந்து ஆண்டவரின் வாக்கைத் தேடுவார்கள். ஆனால், அதைக் கண்டடையமாட்டார்கள். |
13 | அந்நாளில் அழகிய கன்னிப் பெண்களும் இளைஞர்களும் நீர் வேட்கையால் சோர்ந்து வீழ்வார்கள். |
14 | சமாரியா நாட்டு அஸ்மா தெய்வத்தின் பெயரால் ஆணையிட்டு, “தாண் நாடே! வாழும் உன் கடவுள்மேல் ஆணை!” எனவும் “பெயேர்செபாவில் வாழும் காவலர்மேல் ஆணை!” எனவும் சொல்லுகின்றவர்கள் வீழ்வார்கள்: மீண்டும் எழவே மாட்டார்கள். |