1 | “சமாரியா மலைமேல் வாழும் பாசான் பசுக்களே! இந்த வாக்கைக் கேளுங்கள்: ஏழைகளை ஒடுக்கி, வறியோரை நசுக்குகின்ற நீங்கள் உங்கள் கணவர்களைப் பார்த்து, “கொண்டுவாருங்கள், குடிப்போம்” என்று சொல்கிறீர்கள். |
2 | இறைவனாகிய ஆண்டவர் தம் புனிதத்தின்மேல் ஆணையிட்டுக் கூறுவது இதுவே: “உங்களுக்கு அந்த நாள்கள் வருகின்றன: அப்பொழுது அவர்கள் உங்களைக் கொக்கிகளாலும், உங்களுள் எஞ்சியிருப்போரைத் தூண்டில்களாலும் இழுத்துக் கொண்டு போவார்கள். |
3 | நீங்கள் ஒருவர் பின் ஒருவராய் அருகிலுள்ள கோட்டையின் பிளவு வழியாய் வெளியேற்றப்பட்டு அர்மோனை நோக்கித் தள்ளப்படுவீர்கள்” என்கிறார் ஆண்டவர். |
4 | “வாருங்கள், பெத்தேலுக்கு வந்து குற்றம் செய்யுங்கள்: கில்காலுக்கு வந்து குற்றங்களைப் பெருக்குங்கள்: நாள்தோறும் காலையில் உங்கள் பலிகளைக் கொண்டு வாருங்கள்: மூன்று நாளைக்கு ஒருமுறை பத்திலொரு பங்கையும் செலுத்துங்கள். |
5 | புளித்த மாவின் அப்பத்தைக் கொண்டுவந்து நன்றிப் பலியாகப் படையுங்கள்: நேர்ச்சைகளைச் செலுத்தி அவற்றை விளம்பரப்படுத்துங்கள். இஸ்ரயேல் மக்களே, இப்படிச் செய்வதுதானே உங்கள் விருப்பம்”, என்கிறார் ஆண்டவர். |
6 | “உங்கள் நகர்களில் எல்லாம் உங்கள் பற்களுக்கு வேலை இல்லாமல் செய்தேன்: நீங்கள் குடியிருக்கும் இடங்களிலெல்லாம் உணவுப் பற்றாக்குறையை உண்டாக்கினேன்: ஆயினும் நீங்கள் என் பக்கம் திரும்பவில்லை” என்கிறார் ஆண்டவர். |
7 | “நீங்கள் அறுவடை செய்ய மூன்று மாதம் இருந்த போதே உங்களுக்கு மழையை நிறுத்திவிட்டேன்: ஓர் ஊரில் மழைபெய்யச் செய்து அடுத்த ஊரில் வறட்சியை உண்டாக்கினேன். ஒரு வயலில் மழை பெய்யச் செய்தேன். வேறொரு வயல் மழையின்றிக் காய்ந்து போயிற்று. |
8 | ஆகையால், இரண்டு மூன்று நகர்களின் மக்கள் தண்ணீர் தேடித் தள்ளாடித் திரிந்து வேறொரு நகருக்குப் போயும் அவர்கள் தாகம் தீரவில்லை: இப்படியெல்லாம் செய்தும் நீங்கள் என் பக்கம் திரும்பவில்லை” என்கிறார் ஆண்டவர். |
9 | 'வெப்பக் காற்றாலும் பயிரழிக்கும் நோயாலும் உங்களை வதைத்தேன். உங்கள் தோப்புகளையும் திராட்சைத் தோட்டங்களையும் அழித்தேன்: அத்திமரங்களையும் ஒலிவமரங்களையும் வெட்டுக்கிளி தின்றது: ஆயினும் நீங்கள் என்பக்கம் திரும்பவில்லை,” என்கிறார் ஆண்டவர். |
10 | “எகிப்தின்மீது அனுப்பிய கொள்ளை நோய் போன்ற கொடிய நோயை உங்கள்மீதும் அனுப்பினேன்: உங்கள் இளைஞர்களை வாளால் வெட்டி வீழ்த்தினேன்: உங்கள் குதிரைகளும் கொள்ளை போயின: உங்கள் பாளையங்களில் செத்தவர்களின் பிணநாற்றம் உங்கள் மூக்கில் ஏறும்படி செய்தேன்: ஆயினும் நீங்கள் என் பக்கம் திரும்பவில்லை,” என்கிறார் ஆண்டவர். |
11 | “சோதோம், கொமோராவின் மக்களைக் கடவுள் அழித்ததுபோல உங்களுள் சிலரை அழித்தேன். நீங்களோ, நெருப்பிலிருந்து இழுக்கப்பட்ட கொள்ளிக் கட்டைபோல் ஆனீர்கள்: ஆயினும் நீங்கள் என்பக்கம் திரும்பவில்லை” என்கிறார் ஆண்டவர். |
12 | “ஆகையால், இஸ்ரயேலே! உனக்கும் இவ்வாறே செய்வேன், இஸ்ரயேலே! இப்படி நான் செய்யப் போவதால் உன் கடவுளைச் சந்திக்கத் தயாராயிரு!” |
13 | ஏனெனில், மலைகளை உருவாக்கியர் அவரே: காற்றைத் தோற்றுவிப்பவர் அவரே: தம் எண்ணத்தை மனிதனுக்கு வெளிப்படுத்துபவரும் அவரே: காலைப்பொழுதைக் காரிருள் ஆகச்செய்பவரும் அவரே: நிலத்தின் உயர்ந்த இடங்களில் நடமாடுபவரும் அவரே: படைகளின் கடவுளாகிய ஆண்டவர் என்பதே அவரது பெயராகும். |