1 | தெக்கோவாவில் கால்நடைச் செல்வம் மிகுதியாக உடையவர்களுள் ஒருவர் ஆமோஸ். யூதாவை உசியாவும் இஸ்ரயேலை யோவாசின் மகன் எரொபவாமும் ஆண்டுவந்த காலத்தில், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன், இஸ்ரயேலைக் குறித்து ஆமோஸ் காட்சி கண்டு கூறியவை பின்வருமாறு: |
2 | “சீயோனிலிருந்து ஆண்டவர் கர்ச்சனை செய்கின்றார்: எருசலேமிலிருந்து அவர் முழுங்குகின்றார்: இடையர்களின் மேய்ச்சல் நிலங்கள் தீய்ந்து போகின்றன: கர்மேல் மலையின் உச்சியும் காய்ந்து போகின்றது” |
3 | ஆண்டவர் கூறுவது இதுவே: தமஸ்கு நகரினர் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக, நான் கொடுத்த தண்டனைத் திர்ப்பை மாற்றவே மாட்டேன். ஏனெனில், அவர்கள் கிலயாதை இரும்புக் கருவிகளைக் கொண்டு போராடித்தார்கள். |
4 | ஆதலால் அசாயேல் வீட்டின்மேல் தீ மூளச் செய்வேன். அது பெனதாது கோட்டைகளை விழுங்கிவிடும். |
5 | தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைப்பேன். பிக்காத்தாவேனில் குடியிருப்பவர்களையும் பெத்ஏதேனில் செங்கோல் பிடித்திருப்பவனையும் ஒழிப்பேன். ஆராமின் மக்கள் கீருக்கு நாடுகடத்தப்படுவார்கள்” என்கிறார் ஆண்டவர். |
6 | ஆண்டவர் கூறுவது இதுவே: “காசா நகரினர் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன். அவர்கள் ஒரு முழு இனத்தையே ஏதோமுக்கு அடிமைகளாகக் கையளித்தார்கள்: |
7 | ஆதலால் காசாவின் கோட்டை மதில்கள்மேல் நெருப்பைக் கொட்டுவேன். அது அச்சுவர்களை விழுங்கிவிடும். |
8 | அஸ்தோதில் குடியிருப்பவர்களையும் அஸ்கலோனில் செங்கோல் பிடித்திருப்பவனையும் ஒழிப்பேன்: எக்ரோனுக்கு எதிராக என் கையை ஓங்குவேன்: பெலிஸ்தியருள் எஞ்சியிருப்போரும் அழிந்திடுவர்” என்கிறார் ஆண்டவராகிய என் தலைவர். |
9 | ஆண்டவர் கூறுவுது இதுவே: “தீர் நகரினர் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்: ஏனெனில், அவர்கள் ஒரு முழு இனத்தையே ஏதோமுக்கு அடிமைகளாகக் கையளித்தார்கள்: சகோதர உடன்படிக்கையை அவர்கள் நினைவில் கொள்ளவில்லை. |
10 | ஆதலால் தீரின் கோட்டை மதில்கள் மேல் நெருப்பைக் கொட்டுவேன்: அது அச்சுவர்களை விழுங்கிவிடும்.” |
11 | ஆண்டவர் கூறுவது இதுவே: “ஏதோம் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்: ஏனெனில், அவன் உறவுமுறையின் கடமைகளை மீறி வாளேந்தித் தன் சகோதரனையே துரத்தினான்: தன் ஆத்திரத்தை அடக்கி வைக்காமல் என்றென்றும் கோபத்தைக் காட்டி வந்தான்: |
12 | ஆதலால் தேமான்மேல் நெருப்பைக் கொட்டுவேன்: அது பொட்சராவின் கோட்டைகளை விழுங்கிவிடும். |
13 | ஆண்டவர் கூறுவது இதுவே: “அம்மோன் மக்கள் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்: ஏனெனில், அவர்கள் தங்கள் நாட்டு எல்லைகளை விரிவுபடுத்துவதற்காகக் கிலயாதின் கர்ப்பவதிகள் வயிற்றைப் பீறிக் கிழத்தார்கள். |
14 | ஆதலால், இராபாவின் கோட்டை மதில்கள்மேல் நெருப்பைக் கொட்டுவேன். அது அச்சுவர்களை விழுங்கி விடும்: அப்பொழுது, போர்க்காலத்தின் பேரிரைச்சலும், சூறாவளி நாளின் கடும் புயலும் இருக்கும். |
15 | அவர்களுடைய அரசன் அடிமையாய்க் கொண்டு போகப்படுவான். அவனோடு அதிகாரிகளும் கொண்டு போகப்படுவார்கள்” என்கிறார் ஆண்டவர். |