1 | குற்றப்பழி நீக்கும் பலிபற்றிய கட்டளை இதுவே: அது மிகத்தூயது. |
2 | எரிபலி அடிக்கப்படும் இடத்திலேயே குற்றப்பழி நீக்கும் பலியும் அடிக்கப்படவேண்டும்.அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கவேண்டும். |
3 | அதன் கொழுப்பு முழுவதையும், அதன் கொழுப்பு வாலையும் குடல்களை மூடிய கொழுப்பையும், |
4 | இரு சிறுநீரகங்களையும் அவற்றின்மேல் குடல்களோடு சேர்ந்திருக்கிற கொழுப்பையும் சிறுநீரகங்களோடு கல்லீரலின் மேல் இருக்கிற சவ்வையும் எடுத்து, |
5 | இவற்றைக் குரு பலிபீடத்தின்மேல் ஆண்டவருக்கு நெருப்புப்பலி ஆக்கவேண்டும்.அது குற்றப்பழி நீக்கும் பலி. |
6 | குருக்களில் ஆண்மக்கள் யாவரும் அதை உண்பர்.அதைத் தூய தலத்தில் உண்ண வேண்டும்.அது மிகத் தூயது. |
7 | பாவம் போக்கும் பலியைப் போன்றதே குற்றப்பழி நீக்கும் பலியும்.அவற்றிற்குரிய சட்டம் ஒன்றே.அது கறை நீக்கம் செய்யும் குருவுக்கே உரியது. |
8 | ஒருவர் செலுத்தும் எரிபலியின் தோல் அப்பலியைச் செலுத்தும் குருவுக்கே உரியது. |
9 | அடுப்பில் சுட்டதும், பொரிக்கும் சட்டியிலும் தட்டையான சட்டியிலும் தயாரித்ததுமான உணவுப் படையல் அனைத்தும் அதைச் செலுத்துகிற குருவுக்கே உரியவை. |
10 | எண்ணெயில் பிசைந்ததும் பிசையாததுமான உணவுப்படையல் அனைத்தும் ஆரோனின் புதல்வர் யாவருக்கும் சரிபங்காகச் சேரும். |
11 | ஆண்டவருக்கு ஒருவர் செலுத்தும் நல்லுறவுப் பலிபற்றிய சட்டம் இதுவே: |
12 | அவர் அதை நன்றிக் கடனாகச் செலுத்தினால் எண்ணெயில் தோய்த்த நெய்யப்பங்கள், எண்ணெய் பூசிய புளிப்பற்ற அடைகள், மெல்லிய மாவினால் எண்ணெயில் நன்கு பிசைந்து செய்த நெய்யப்பங்கள் ஆகியவற்றை நன்றிப் பலியோடு கொண்டுவர வேண்டும். |
13 | புளித்த மாவினால் செய்த நெய்யப்பங்களை நன்றிக்கடனாகச் செலுத்தும் நல்லுறவுப் பலியைத் தமது நேர்ச்சையாக அவர் கொண்டுவருவார். |
14 | ஒவ்வொரு காணிக்கையிலும் ஒன்றை எடுத்து, ஆண்டவருக்குரிய பங்காகப் படைக்க வேண்டும்.இப்பொருள்கள் நல்லுறவுப் பலியின் இரத்தத்தைத் தெளிக்கும் குருவுக்கே உரியவை. |
15 | நன்றிக் கடனாகச் செலுத்தும் நல்லுறவுப் பலியின் இறைச்சி படைக்கப்படும் நாளில் உண்ணப்படவேண்டும்.விடியுமட்டும் அதில் எதையும் மீதி வைக்கலாகாது. |
16 | அவர் செலுத்தும் நேர்ச்சைப் பலி ஒரு பொருத்தனையாகவோ தன்னார்வப்பலியாகவோ இருந்தால், அதைப் படைக்கும் நாளிலும் எஞ்சியதை மறுநாளிலும் உண்ணலாம். |
17 | பலி இறைச்சியில் எஞ்சியிருப்பதெல்லாம் மூன்றாம் நாளில் நெருப்பால் எரிக்கப்பட வேண்டும். |
18 | நல்லுறவுப்பலி இறைச்சியில் எஞ்சியதை மூன்றாம் நாளில் உண்பது உகந்தன்று.அதைச் செலுத்தினவருக்கும் அது பயன் அளிக்காது.அது அருவருப்பானது.அதை உண்பவர் தம் குற்றபழியைச் சுமப்பார். |
19 | தீட்டான எந்தப் பொருளிலாவது அந்த இறைச்சி பட நேர்ந்தால் அதை உண்ணலாகாது.அதை நெருப்பில் எரிக்க வேண்டும்.மற்ற இறைச்சியையோ தூய்மையாய் இருக்கிறவர் எவரும் உண்ணலாம். |
20 | தீட்டுப்பட்ட ஒருவர் ஆண்டவரின் நல்லுறவுப் பலியின் இறைச்சியை உண்பாராகில், அவர் தம் இனத்தாரிலிருந்து விலக்கப்பட்டவர் ஆவார். |
21 | தீட்டான எதையும் தீட்டுப்பட்ட மனிதரையோ கால்நடையையோ, தீட்டான ஊர்வனவற்றையோ ஒருவர் தீண்டியவராக இருந்து ஆண்டவருக்குப் படைக்கும் நல்லுறவுப்பலி இறைச்சியை உண்டால், அவர் தம் இனத்தாரிலிருந்து விலக்கப்பட்டவர் ஆவார். |
22 | ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது: |
23 | நீ இஸ்ரயேல் மக்களிடம், “மாடு, ஆடு, வெள்ளாடு இவற்றின் கொழுப்பை நீங்கள் உண்ணலாகாது. |
24 | தானாய்ச் செத்ததின் கொழுப்பையும், பீறுண்டதின் கொழுப்பையும் வேறு செயல்களுக்குப் பயன்படுத்தலாமேயன்றி நீங்கள் அதை ஒருபோதும் உண்ணலாகாது. |
25 | ஏனெனில், ஆண்டவருக்கு நெருப்புப்பலியாகப் படைக்கும் கால்நடையின் கொழுப்பை உண்கிற எவரும் தம் இனத்தாரிலிருந்து விலக்கப்பட்டவர் ஆவார். |
26 | உங்கள் குடியிருப்புகள் எங்கும், பறவையின் இரத்தத்தையோ கால்நடைகளின் இரத்தத்தையோ, வேறு எந்த இரத்தத்தையுமோ உண்ணலாகாது. |
27 | இரத்தத்தை உண்ணும் எவரும் தம் இனத்தாரிலிருந்து விலக்கப்பட்டவர் ஆவார்” என்று சொல். |
28 | ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது: |
29 | நீ இஸ்ரயேல் மக்களிடம்,”ஆண்டவருக்கு நல்லுறவுப் பலி செலுத்துபவர், தாம் செலுத்தும் நல்லுறவுப் பலியிலிருந்து ஆண்டவருக்குரிய நேர்ச்சையைக் கொண்டுவர வேண்டும். |
30 | ஆண்டவருக்குரிய நெருப்புப் பலியை அவரே கொண்டு வரவேண்டும்.நெஞ்சுக் கறியையும் அதனோடு அதன் மேலுள்ள கொழுப்பையும் ஆண்டவரின் திருமுன் ஆரத்திப் பலியாகக் கொண்டவர வேண்டும். |
31 | குரு அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தில் எரிப்பார்.நெஞ்சுக் கறியோ ஆரோனுக்கும் அவன் புதல்வர்க்கும் உரியதாகும். |
32 | நல்லுறவுப் பலிகளில் வலது பின்னந்தொடையைக் குருவிடம் பங்காகக் கொடுக்க வேண்டும். |
33 | ஆரோனின் புதல்வருள் நல்லுறவுப் பலியின் இரத்தத்தையும், கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு வலது பின்னந்தொடை பங்காகச் சேரும். |
34 | நல்லுறவுப் பலிகளில் ஆரத்திப் பலியாகிய நெஞ்சுக் கறியையும் பங்காகிய பின்னந்தொடையையும் நான் இஸ்ரயேல் மக்களிடமிருந்து எடுத்து குருவாகிய ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் கொடுத்துள்ளேன்.இது இஸ்ரயேல் மக்களிடமிருந்து பெறும் நிலையான பங்காகும்” என்று சொல். |
35 | ஆரோனும் அவன் புதல்வரும் ஆண்டவர்க்குரிய குருக்களாகும்படி அழைத்து வரப்பட்ட நாளிலிருந்து இது ஆண்டவரின் நெருப்புப் பலியிலிருந்து அவர்களுக்கென அர்ப்பணிக்கப்பட்ட பங்காகும். |
36 | ஆண்டவர் அவர்களுக்கு அருள்பொழிவு செய்த நாளில், அவர்கள் தலைமுறைதோறும் அவர்களுக்கு மாறாத பங்காகக் கொடுக்கக் கட்டளையிட்டார். |
37 | எரிபலி, உணவுப் படையல், பாவம் போக்கும் பலி, குற்றப்பழி நீக்கும் பலி, திருநிலைப்படுத்தும் பலி, நல்லுறவுப் பலி ஆகிய பலிகளைப்பற்றிய சட்டம் இதுவே. |
38 | தமக்குச் செலுத்த வேண்டிய நேர்ச்சைகளைப் பற்றி ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்குச் சீனாய்ப் பாலைநிலத்தில் கட்டளையிட்ட நாளில் மோசேக்கு அவர் சீனாய் மலையில் இட்ட கட்டளைகள் இவையே. |