வேதாகமத்தை வாசி

லேவியராகமம் 27

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: ஒருவர் யாரையேனும் பொருத்தனையாகச் செலுத்தத் திட்டமிட்டிருந்தால் அவர்கள் உன் மதிப்பின்படி ஆண்டவருக்கு உரியவர்.
3இருபது வயதிலிருந்து அறுபது வயதுக்கு உட்பட்ட ஆண்மகனுக்குத் திருக்கோவில் அளவையின்படி அறுநூறு கிராம் வெள்ளி:
4பெண்ணாய் இருந்தால் முன்னூற்றைம்பது கிராம்.
5ஐந்து வயது முதல் இருபது வயது வரையுள்ள ஆண்பிள்ளைக்கு இருநூற்று முப்பது கிராம் பெண் பிள்ளைக்கு நூற்றுப் பதினைந்து கிராம்
6ஒரு மாதம் முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளைக்கு அறுபது கிராம் வெள்ளி: பெண்பிள்ளைக்கு முப்பத்தைந்து கிராம் வெள்ளி,
7அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவரை நூற்று எழுபது கிராம் வெள்ளியாகவும் மூதாட்டியை நூற்றுப் பதினைந்து கிராம் வெள்ளியாகவும் மதிப்பிட வேண்டும்.
8தம் மதிப்பைச் செலுத்த வாய்ப்பற்ற ஏழை எனில், குரு முன்னிலையில் அவர் வந்து நிற்க, பொருத்தனை செய்தவரின் நிதி நிலைக்கு ஏற்பக் குரு அவரை மதிப்பிடவேண்டும்.
9ஆண்டவருக்குக் காணிக்கையாக பொருத்தனை செய்தது விலங்கு எனில், அது ஆண்டவருக்கெனப் பிரித்துவைக்கப்பட்டது ஆகும்.
10அது மாற்றத் தகுந்தது அன்று.நல்லதுக்குப் பதில் கெட்டதையும் கெட்டதுக்குப் பதில் நல்லதையும் கொடுக்கலாகாது.ஒரு விலங்குக்குப் பதிலாக வேறொரு விலங்கைக் கொடுக்க விரும்பினால், அவை இரண்டும் ஆண்டவருக்கெனப் பிரித்துவைக்கப்பட்டவை ஆகும்.
11அது பலியீடத் தகுதியற்ற தீட்டான விலங்கு எனில், அதைக் குருமுன் கொண்டுவந்து நிறுத்தவேண்டும்.
12குரு அதன் தரத்தின் உயர்வு, தாழ்வை மதிப்பிடுவான்.அவன் மதிப்பிடுவதே அதன் மதிப்பு ஆகும்.
13அதனை மீட்க விரும்பினால், மதிப்புப் பணத்துடன் ஐந்தில் ஒரு பங்கை மிகுதியாகச் செலுத்தவேண்டும்.
14ஒருவர் நேர்ச்சையாகத் தன் இல்லத்தை ஆண்டவருக்கு நேர்ந்து கொண்டால், குரு அதன் தரத்தின் உயர்வு, தாழ்வை மதிப்பிடுவான்.அவன் மதிப்பீடே அதன் மதிப்பு ஆகும்.
15அதன் உடைமையாளர் அந்த வீட்டை மீட்க விரும்பினால், மதிப்புப் பணத்துடன் ஐந்தில் ஒருபங்கை மிகுதியாகச் செலுத்த வேண்டும்.அது மீண்டும் அவருடையது ஆகும்.
16ஒருவர் தன் குடும்ப நிலத்தின் பகுதியை நேர்ந்துகொண்டால், அதன் மதிப்பு விதைப்பாட்டிற்கேற்ப இருக்க வேண்டும்.ஒரு கலம் பார்லி விதைப்பாடுள்ள வயல் அறுநூறு கிராம் வெள்ளி ஆகும்.
17யூபிலி ஆண்டில் தம் வயலை நேர்ச்சை செய்தால், நீ மதிக்கிறபடியே அதன் மதிப்பு இருக்கும்.
18யூபிலி ஆண்டுக்குப் பின்னர் அதை நேர்ந்துகொண்டால், அடுத்த யூபிலி ஆண்டுவரை எஞ்சியுள்ள ஆண்டுகளுக்கு ஏற்ப, அதன் மதிப்பு குருவினால் கணக்கிடப்பட்டு, அதன் உண்மை மதிப்பிலிருந்து குறைக்கப்படும்.
19வயலை நேர்ச்சையாகச் செலுத்தினவர் அதை மீட்க விரும்பினால், மதிப்புப் பணத்துடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்க அது அவருடையது ஆகும்.
20வயலை மீட்காமல், அதை வேறொருவருக்கு விற்றால், அதனை மீட்க இயலாது.
21அது யூபிலி ஆண்டில் விடுவிக்கப்படும்போது, ஆண்டவருக்கென நேர்ந்துகொள்ளப்பட்ட நிலமாகக் கருதப்படும்: அது குருவின் உடைமை ஆகும்.
22ஒருவர், தன் குடும்பச் சொத்து அல்லாத ஒது வயலை வாங்கி அதை ஆண்டவருக்கென நேர்ச்iயாகச் செலுத்தினால்,
23யூபிலி ஆண்டு மட்டும் அதற்குண்டான மதிப்பிற்கேற்ப, அதன் விலை குருவினால் கணக்கிடப்படும்.அந்த மதிப்பு அன்றே ஆண்டவருக்கு நேர்ச்சையாகச் செலுத்தப்படும்.
24எவரிடமிருந்து அந்த வயலை வாங்கினாரோ, அவருக்கு யூபிலி ஆண்டில் அது திருப்பிக் கொடுக்கப்படும்.
25மதிப்பீடுகள் அனைத்தும் தூயகத்துச் செக்கேலின்படி கணக்கிட வேண்டும்.ஒரு செக்கேல் என்பது பதினொன்றரை கிராம்.
26தலையீற்று ஆண்டவருடையது.அதனை நேர்ச்சையாக்க வேண்டாம்: ஏனெனில் அது, மாடோ ஆடோ, ஆண்டவருக்கு உரியதே.
27தீட்டான கால்நடையின் முதற்பிறப்பு எனில், அதன் மதிப்பினால் அதனை மீட்டு, அதனுடன் மீண்டும் ஐந்திலொரு பங்கைக் கூட்டிக்கொடுக்க வேண்டும்.மீட்கப்படாவிடில் அதன் மதிப்பிற்கேற்ப அதனை விற்றுவிடலாம்.
28ஒருவர் காணிக்கையாகச் செலுத்pய தனக்குரிய மனிதரையும், விலங்கையும், குடும்ப நிலத்தையும் ஆண்டவருக்கென நேர்ந்துவிட்டால், அவற்றுள் எதையும் விற்கவோ, மீட்டுக் கொள்ளவோ வேண்டாம்.நேர்ச்சை அனைத்தும் ஆண்டவருக்கே முற்றிலுமாகப் பிரித்து வைக்கப்பட்டன.
29சபிக்கப்பட்ட எவரும் மீட்கப்படலாகாது.அவர் கொல்லப்படவேண்டும்.
30நிலத்தின் தானியங்களிலும், மரங்களின் கனிகளிலும் பத்திலொன்று ஆண்டவருக்குரியது.அது ஆண்டவருக்கெனப் பிரித்து வைக்கப்பட வேண்டியதே.
31அவற்றில் எதையேனும் மீட்க விரும்பினால், அதன் மதிப்போடு ஐந்தில் ஒரு பங்கைக் கூடச்செலுத்த வேண்டும்.
32மேய்ச்சலுக்கு உட்பட்ட ஆடு மாடுகளின் பத்திலொன்று ஆண்டவர்க்கெனப் பிரித்து வைக்கப்பட வேண்டும்.
33எது உயர்ந்தது, எது தாழ்ந்தது எனப் பார்க்க வேண்டாம்.அதை மாற்றவும் வேண்டாம்: மாற்றினால் அவை இரண்டும் ஆண்டவருக்கெனப் பிரித்து வைக்கப்பட வேண்டாம்.அவை மீட்கப்படலாகா.
34இஸ்ரயேலருக்குக் கூறும்படியாக ஆண்டவர் மோசேக்கு சீனாய் மலையில் வழங்கிய கட்டளைகள் இவையே.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.