1 | ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயிடம் கூறியது: |
2 | நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: நான் உங்களுக்கு வழங்கும் நாட்டில் நீங்கள் வந்து சேரும்போது, நாடு ஆண்டவருக்கென்று ஓய்வு நாளைக் கொண்டாட வேண்டும். |
3 | ஆறு ஆண்டுகள் வயலைப் பயிரிட்டுத் திராட்சைக் கொடிகளைக் கிளைநறுக்கி அவற்றின் பலனைச் சேர்ப்பாய். |
4 | ஏழாம் ஆண்டு ஆண்டவருக்காக ஓய்ந்திருக்கும் ஆண்டு, நிலத்துக்கும் ஓய்வு வேண்டும். வயலைப் பயிரிடாமலும், திராட்சைக் கொடிகளைக் கிளைநறுக்காமலும் இருங்கள். |
5 | தானாய் விளைந்த பயிரை அறுக்காமலும், கிளை நறுக்காத திராட்சைச் செடிகளிலிருந்து பழங்களைச் சேர்க்காமலும் இருக்க வேண்டும்.அது நிலத்துக்கு ஓய்வு ஆண்டு. |
6 | உனக்கும் உன் பணியாளனுக்கும், உன் வேலைக்காரிக்கும், உன் கூலியாளுக்கும், உன்னிடையே தங்கியிருக்கும் அன்னியனுக்கும் ஓய்வு நிலப் பயிர்விளைச்சல் உணவாயிருக்கட்டும். |
7 | வீட்டு விலங்குகளுக்கும் உன் நாட்டிலுள்ள காட்டு விலங்குகளுக்கும் அவையே உணவு. |
8 | தொடர்ந்து வரும் ஏழு ஓய்வு ஆண்டுகளை ஏழேழு ஆண்டுகளாக ஏழுமுறை எண்ணிக்கையிட்டு அவை நாற்பத்தொன்பது ஆண்டுகள் ஆகும். |
9 | ஏழாம் மாதம் பத்தாம் நாள் எக்காள ஒலி எழட்டும்: பாவக் கழுவாய் நிறைவேற்றும் அந்த நாளில் உங்கள் நாடெங்கும் எக்காளம் முழங்கச்செய்யுங்கள். |
10 | ஐம்பதாம் ஆண்டைத் தூயதாக்கி, நாட்டில் வாழ்வோருக்கெல்லாம் தன்னுரிமை அறிவியுங்கள்.அது உங்கள் யூபிலி ஆண்டு அந்த ஆண்டில் நீங்கள் உங்கள் நிலப்பகுதிக்கும் உங்கள் இனத்தாரிடமும் திரும்ப வேண்டும். |
11 | ஐம்பதாம் ஆண்டு உங்களுக்கு யூபிலி ஆண்டு: அந்த ஆண்டு பயிரிட வேண்டாம்: தானாய் விளைந்ததை அறுக்க வேண்டாம்: கிளைநறுக்காத திராட்சைச் செடியினின்று கனி சேர்க்கவும் வேண்டாம். |
12 | ஏனெனில், அந்த ஆண்டு யூபிலி ஆண்டு: அது உங்களுக்குத் தூயது.நிலத்தினின்று அவ்வப்போது கிடைக்கும் பலனை உண்ணுங்கள். |
13 | அந்த யூபிலி ஆண்டில் அவரவர் தம் காணியாட்சிக்குத் திரும்பிச் செல்லவேண்டும். |
14 | உங்களுக்குள் ஒருவனுக்கு நிலத்தை விற்கவோ அவனிடத்தில் வாங்கவோ செய்யும்பொழுது ஒருவரை ஒருவர் ஏமாற்றாதிருங்கள். |
15 | யூபிலி ஆண்டிற்குப் பின், ஆண்டுகளைக் கணக்கிட்டு அவற்றின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாங்கலாம்.பயன்படுத்தும் ஆண்டுகளுக்கு ஏற்ப அவன் அதை உனக்கு விற்கவேண்டும். |
16 | பலனைப் பயன்படுத்தும் ஆண்டுகள் எண்ணிக்கை மிகுந்திருந்தால் விலையை உயர்த்த வேண்டும்: குறைந்திருந்தால் விலையைக் குறைக்க வேண்டும்.ஏனெனில், பயனுள்ள ஆண்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவே அவன் விற்கிறான். |
17 | உங்களுள் எவரும் தம் இனத்தாரை ஏமாற்றலாகாது.கடவுளுக்கு அஞ்சி நடங்கள்! ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்! |
18 | கட்டளைப்படி நடங்கள்: என் நியமங்களைக் கடைப்பிடிப்பதில் கவனமாயிருங்கள், அப்போது நாட்டில் நலமாய்க் குடியிருப்பீர்கள். |
19 | நிலமும் பலனைத் தருவதனால் வயிறார உண்டு பாதுகாப்புடன் நாட்டில் வாழ்வீர்கள். |
20 | விதைக்காமலும் அறுவடை செய்யாமலும் இருந்தால் ஏழாம் ஆண்டு எதனை உண்போம்?” என்று கேட்பீர்களானால், |
21 | ஆறாம் ஆண்டு, நிலம் மூன்றாண்டுக்குரிய விளைச்சலைக் கொடுக்குமாறு என் ஆசியை அனுப்புவேன். |
22 | எட்டாம் ஆண்டு விதை விதைத்து, ஒன்பதாம் ஆண்டு விளைச்சல் கிடைக்கும்வரை பழைய விளைச்சலையே உண்பீர்கள். |
23 | நிலத்தை அறுதியாய் விற்றுவிட வேண்டாம்.ஏனெனில் நிலம் என்னுடையது.நீங்களோ என்னைப் பொறுத்தவரையில் அன்னியரும் இரவற்குடிகளுமே. |
24 | நீங்கள் காணியாட்சியாய்க் கொண்டுள்ள நாடு எங்கும் வாய்ப்பு வழங்கப்படவேண்டும். |
25 | சகோதரருள் ஒருவன் ஏழ்மைக்கு உட்பட்டு, அவனுடைய சொத்தில் எதையேனும் விற்றால், அவனுடைய முறைஉறவினனான மீட்பன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கட்டும். |
26 | மீட்க மீட்பன் இல்லாதவனுக்கு பின்னர் மீட்க வாய்ப்பும் வசதியும் ஏற்பட்டால் கீழ்க்கண்டவாறு அவன் மீட்பானாக: |
27 | விற்ற ஆண்டிலிருந்து கணக்கிட்டு, அதற்கான தொகையைத் தள்ளி, வாங்கினவனுக்கு மீதித் தொகையைக் கொடுத்து, மீண்டும் தன் நிலத்திற்குத் திரும்பி வருவான். |
28 | திரும்பக் கொடுக்க வாய்ப்பில்லாமற்போனால், யூபிலி ஆண்டு மட்டும், அது வாங்கினவனிடமே இருக்கும்.யூபிலி ஆண்டிலோ அவன் தன் நிலபுலங்களுக்குத் திரும்பிவர அவனுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். |
29 | அரண்சூழ் நகரில் குடியிருக்கத்தக்க வீட்டைவிற்றால், விற்றபிறகு மீட்பதற்கான கெடு ஓராண்டு: அதற்குள் மீட்டுக் கொள்ள வேண்டும். |
30 | ஓராண்டிற்குள் மீட்கப்படவில்லையெனில், அரண்சூழ் நகரில் உள்ள அந்த வீடு, வாங்கியவனுக்கும் அவன் வழிமரபினருக்கும் என்றென்றும் உரிமை ஆகிவிடும்.யூபிலி ஆண்டில் அதைத் திருப்ப முடியாது. |
31 | அரணற்ற கிராமத்து வீடுகளோ நாட்டின் வயல் வெளிக்கு ஒப்பானவை.மீட்டெடுக்கலாம்: அல்லது யூபிலி ஆண்டில் விற்றவனுக்கே திரும்பக் கிடைக்கும். |
32 | லேவியரின் உடைமையான நகர வீடுகளை மீட்க என்றைக்கும் அவர்களுக்கு உரிமை உண்டு. |
33 | இஸ்ரயேல் மக்கள் நடுவில் இருக்கும் லேவியரின் நகர இல்லங்கள் அவர்களின் உரிமை: அந்த உடைமைகள் மீட்கப்படத்தக்கன.அவர்களுக்குச் சொந்தமான விற்கப்பட்ட எந்த வீடும் யூபிலி ஆண்டில் திருப்பித் தரப்படும். |
34 | நகர்களின் பொதுநிலமான வயல்வெளிகளை விற்கலாகாது.ஏனெனில், அது அவர்களுக்கு நிலையான உடைமையாகும். |
35 | சகோதரர்கள் ஏழ்மைப்பட்டு இளைத்துப்போனால், அவர்களுக்கு உதவு.அவர்கள் அன்னியர்போலும் விருந்தினர் போலும் உன்னோடு வாழட்டும். |
36 | அவர்களிடமிருந்து வட்டியோ இலாபமோ பெறவேண்டாம்.உன் கடவுளுக்கு அஞ்சி நட: உன் சகோதரர்கள் உன்னோடு வாழட்டும். |
37 | அவர்களுக்கு உன் பணத்தை வட்டிக்குக் கொடாதே: உணவை அதிக விலைக்கு விற்காதே. |
38 | உங்களை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்து, உங்கள் கடவுளாய் இருக்கும்படி கானான் நாட்டைக் கொடுத்த நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்! |
39 | சகோதரர் ஏழ்மைப்பட்டு உனக்கு விலையாகிப் போனால் அவர்களை அடிமைபோல் நடத்த வேண்டாம். |
40 | அவர் கூலியாள்போலும் விருந்தினர்போலும், உன்னோடு தங்கி யூபிலி ஆண்டுவரை உன்னிடத்தில் பணியாற்றட்டும். |
41 | பின்னர் அவரும், அவர்தம் பிள்ளைகளும் விடுதலையாகித் தங்கள் இனத்திற்கும், மூதாதையரின் நிலபுலங்களிடத்திற்கும் திரும்பிச் செல்லட்டும். |
42 | எகிப்திலிருந்து அழைத்துவந்த இஸ்ரயேலராகிய அவர்கள் என் வேலைக்காரர்கள்: அவர்கள் அடிமையாக விற்கப்படலாகாது. |
43 | உன் சகோதரரைக் கொடுமையாய் நடத்தாதே: உன் கடவுளுக்கு அஞ்சி நட. |
44 | உன் அடிமைகள், ஆணும் பெண்ணும், உன்னைச் சுற்றிலும் உள்ள வேற்றினத்தாரிடமிருந்து நீ அடிமைகளை விலைக்கு வாங்கலாம். |
45 | உங்களிடம் தற்காலிகமாய்த் தங்குகிற அன்னியரின் பிள்ளைகளிலும், உங்கள் நாட்டில் உங்களிடையே பிறந்திருக்கிற அவர்களுடைய இனத்தவரிலும் உங்களுக்கு அடிமைகளை வாங்கி, உங்களுக்கு உடைமையாக்கிக் கொள்ளலாம். |
46 | அவ்வடிமைகளை, உங்களுக்குப் பின்னர் உங்கள் பிள்ளைகளுக்கும் பிறப்புரிமையாக்கி, என்றும் உரிமை கொண்டாடலாம்.ஆனால் இஸ்ரயேல் மக்களாகிய உங்கள் சகோதரரைப் பொறுத்தமட்டில் எவரும் மற்றவரைக் கொடுமையாய் நடத்த வேண்டாம். |
47 | அன்னியரோ உன்னிடம் தற்காலிகமாகத்தங்கியிருப்பவரோ, வசதியாக வாழும்போது, அவர்களிடம் உள்ள உன் சகோதரர்கள் ஏழையாகி, அவர்களுக்கோ அவர்களின் இனத்திற்கோ விலையாகிப் போனால், |
48 | விலையாகிப்போன அவர்கள் மீட்கப்பட வேண்டும்: அவர்கள் உறவினருள் ஒருவர் அவர்களை மீட்கட்டும். |
49 | அவர்களுடைய தந்தையின் சகோதரனோ, அவரின் மகனோ, அவர்களின் முறை உறவினனோ அவர்களை மீட்கட்டும்: அல்லது வசதி ஏற்படும்போது அவர்கள் தம்மைத் தாமே மீட்டுக் கொள்ளட்டும். |
50 | அவர்களது பணிக்காலத்தை அவர்களும் அவர்களை வாங்கினவர்களும் அவர்கள் விலைப்பட்டுப்போன ஆண்டிலிருந்து யூபிலி ஆண்டுவரை கணக்கிட வேண்டும்.அவர்கள் விடுதலை ஆவதற்கான விலை, கூலிக்காரன் ஒருவனுக்கு அந்த ஆண்டுகளில் கொடுக்கப்படும் கூலியைப் போலக் கணக்கிடப்படவேண்டும். |
51 | ஆண்டுகள் மிகுதியாய் இருந்தால், மிகுதியாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும். |
52 | யூபிலிக்கு சில ஆண்டுகள் இருந்தால், அவற்றைக் கணக்கிட்டு அவற்றிற்கு ஏற்பச் செலுத்த வேண்டும். |
53 | ஆண்டுதோறும் கூலிக்கு அமர்த்தப்பட்டவனைப் போல அவர்களைக் கருத வேண்டும். விலைக்கு வாங்கினவர்கள் அவர்களைக் கொடுமையாய் நடத்த இடம் கொடாதே. |
54 | இவ்விதமாய் அவர்கள் மீட்கப்படாமல் போனால், யூபிலி ஆண்டில் அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் விடுதலை பெறுவர். |
55 | ஏனெனில், இஸ்ரயேல் மக்கள் என் வேலைக்காரர்கள்: எகிப்திலிருந்து நான் அழைத்து வந்த என் வேலைக்காரர்கள்.நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்! |