1 | ஆண்டவர் மோசேயிடம் கூறியது: |
2 | இஸ்ரயேல் மக்கள் எனக்கு நேர்ச்சையாகச் செலுத்தும் தூய பொருள்களால் ஆரோனும் அவன் பிள்ளைகளும் என் பெயரை இழிவுபடுத்தாதபடி எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று அவர்களிடம் கூறு.நானே ஆண்டவர். |
3 | அவர்களிடம் நீ கூற வேண்டியது: உங்கள் வழிமரபினருள் எவனும் தீட்டுப்பட்டிருந்து, இஸ்ரயேல் மக்கள் நேர்ச்சையாகச் செலுத்தும் தூய பொருள்கள் அருகில் வந்தால், அவன் என் முன் இராதபடி அழிவான்.நானே ஆண்டவர். |
4 | ஆரோன் குடும்பத்தினரில் தொழு நோயாளியோ விந்து ஒழுக்கு உடையவனோ இருந்தால் குணமாகும் மட்டும் அவன் தூய பொருள்களை உண்ண வேண்டாம்.பிணத்தால் தீட்டானதைத் தொட்டவனும் விந்தொழுகியவனும், |
5 | தீட்டு என ஒதுக்கிய ஊர்வனவற்றையோ, தீட்டான மனிதரையோ தொட்டவனும், |
6 | மாலைமட்டும் தீட்டுடன் இருப்பான்.அவன் தூய பொருள்களை உண்ணாமல் தன் உடலைத் தண்ணீரால் கழுவ வேண்டும். |
7 | கதிரவன் மறைந்தபின் தூய்மை அடைவான், அப்பொழுது அவன் தூய பொருள்களை உண்ணலாம்.ஏனெனில் அது அவன் உணவு. |
8 | தானாய்ச் செத்ததையும், பீறிக் கிழிக்கப்பட்டதையும் அவன் உண்டு தீட்டாக வேண்டாம்.நானே ஆண்டவர். |
9 | எனவே தூய்மையானதைத் தீட்டாக்குவதால் தங்கள் மேல் பாவத்தைச் சுமத்திக்கொண்டு சாகாதவாறு, நான் ஒப்படைத்தவற்றை அவர்கள் காப்பார்களாக! நானே அவர்களைத் தூயோராக்கும் ஆண்டவர்! |
10 | வேற்றினத்தார் எவரும் தூய பொருள்களை உண்ண வேண்டாம்.குரு வீட்டிலுள்ள விருந்தினரும் கூலிக்காக வேலை செய்பவரும் தூய பொருளை உண்ண வேண்டாம். |
11 | குருவின் பணம் கொடுத்து வாங்கிய அடிமையும், அவன் வீட்டில் பிறந்தவனும் குருவின் உணவை உண்ணலாம். |
12 | குருவின் மணமுடித்த மகள் தூயபொருள்களை உண்ண வேண்டாம். |
13 | குருவின் குழந்தைகளற்ற கைம்பெண் அல்லது மணவிலக்குப் பெற்றவளான மகள் திரும்பிவந்து இளமையிலிருந்து தன் தந்தையோடு வாழ்ந்ததுபோல வாழ்ந்தாளாயின், தந்தையின் உணவில் பங்கு பெறலாம்.ஆனால் பொது நிலையர் எவரும் அதை உண்ணலாகாது. |
14 | தூய பொருளை அறியாமல் உண்பவர்.அப்பொருளின் விலையில் ஐந்தில் ஒரு பங்கைக் கூடுதலாகக் கொடுத்து தூய பொருளுடன் குருவுக்குக் கொடுக்க வேண்டும். |
15 | ஆண்டவருக்கு இஸ்ரயேலர் நேர்ச்சையாக அளிக்கும் புனிதப் பொருள்களைக் குருக்கள் இழிவுக்கு உள்ளாக்கக்கூடாது. |
16 | அப்புனிதப் பொருள்களை உண்டு இழிவுக்கு உள்ளாக்குவதால், அவர்கள் தண்டம் செலுத்தும் குற்றப்பழிக்கு ஆளாவர்.ஏனெனில், நானே அவர்களைத் தூய்மையாக்கும் ஆண்டவர்! |
17 | ஆண்டவர் மீண்டும் மோசேயிடம் கூறியது: |
18 | ”ஆரோன், அவன் புதல்வர் மற்றும் இஸ்ரயேல் மக்கள் அனைவரிடமும் கூற வேண்டியது: இஸ்ரயேலரோ இஸ்ரயேலரிடையே தங்கியிருக்கும் அன்னியர்களோ தங்கள் பொருத்தனைக்கேற்ப அல்லது ஆர்வமிகுதியால் எரிபலியாகச் செலுத்தும் காணிக்கை |
19 | அவரவர் விருப்பப்படியே மாடு, ஆடு, வெள்ளாடு எவற்றிலேனும் பழுதற்ற ஓர் ஆணாய் இருப்பதாக! |
20 | பழுதான எதையும் உங்களுக்காகச் செலுத்தலாகாது.அது ஆண்டவருக்கு உகந்தது அன்று. |
21 | சிறப்புப் பொருத்தனையோ, தன்னார்வக் காணிக்கையோ மாடுகளில் அல்லது ஆடுகளில் நல்லுறவுப் பலியாகச் செலுத்தினால், அது ஏற்கத்தக்கதாக அமைய, மாசுமறுவற்றதாய் இருத்தல் வேண்டும். |
22 | குருடு, ஊனம், நெரிவு, கழிச்சல் நோய், சொறி, சிரங்கு முதலிய குறைபாடுள்ளவற்றைச் செலுத்தாமலும் அவற்றை ஆண்டவரின் பலிபீடத்தில் எரிபலியாக்காமலும் இருப்பீர்களாக. |
23 | உறுப்பு ஒழுங்கற்ற ஆடோ, மாடோ, மகிழ்வுப்பலி ஆகலாம்.ஆனால் அது பொருத்தனைக்கு ஏற்றதன்று. |
24 | விதை நசுங்கினதையும் நொறுங்கினதையும், காயம்பட்டதையும் விதை அடிக்கப்பட்டதையும் ஆண்டவருக்கு நீங்கள் காணிக்கை ஆக்காமலும் உங்கள் நாட்டில் பலியிடாமலும் இருப்பீர்களாக! |
25 | வேற்றின் மக்களிடமிருந்து இத்தகையவற்றை வாங்கி உங்கள் கடவுளுக்கு உணவுப் படையலாகச் செலுத்தாதீர்.அவற்றில் கேடும் பழுதும் உள்ளன.அவை உங்கள் சார்பாக எற்றுக்கொள்ளப்பட மாட்டா.” |
26 | ஆண்டவர் மோசேயிடம் கூறியது: |
27 | ஒரு கன்று, செம்மறி, அல்லது வெள்ளாட்டுக்குட்டி பிறந்தால், ஏழு நாளளவும் தன் தாயிடம் அது இருக்கட்டும்.எட்டாம் நாளிலிருந்து அது ஆண்டவருக்குரிய எரிபலியாகச் செலத்தப்படும்.இது விரும்பத்தக்கது. |
28 | பசுவையும் அதன் கன்றையும் அல்லது ஆட்டையும் அதன் குட்டியையும் ஒரே நாளில் பலியிட வேண்டாம். |
29 | நன்றிப்பலியை ஆண்டவருக்குச் செலுத்தினால், அது உங்கள் சார்பாக ஏற்கத் தகுந்ததாக இருக்கட்டும். |
30 | அன்றே அது உண்ணப்படவேண்டும்.விடியற்காலை மட்டும் அதில் ஒன்றும் மீதியாக வேண்டாம்.நானே ஆண்டவர்! |
31 | கட்டளைகளைக் கடைப்பிடித்து அவற்றிற்கேற்ப ஒழுகுங்கள்.நானே ஆண்டவர்! |
32 | இஸ்ரயேல் மக்களிடையே நான் தூயவராகக் கருதப்படுமாறு, என் திருப்பெயரை இழிவுப் படுத்தாதிருங்கள்.நானே உங்களைப் புனிதர் ஆக்கும் ஆண்டவர்! |
33 | உங்களுக்குக் கடவுளாய் இருக்குமாறு உங்களை எகிப்தினின்று அழைத்து வந்தேன்.நானே ஆண்டவர்! என்று சொல்.” |