1 | ஆண்டவர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, அவர்களிடம் கூறியது: |
2 | “நீங்கள் இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: உலகில் உள்ள உயிரினங்களில் நீங்கள் உண்ணத்தக்கவை இவைகளே. |
3 | கால்நடைகளில், குளம்புகள், இரண்டாகப் பிரிந்திருக்கிற, விரிசல் குளம்புள்ள, அசைபோடுபவற்றை நீங்கள் உண்ணலாம். |
4 | அசைபோடும் கால்நடைக்கு விரிகுளம்பில்லையெனில், அதனை நீங்கள் உண்ணலாகாது. குறிப்பாக ஒட்டகம்: அது அசைபோடும்: ஆனால், அதற்கு விரிகுளம்பு இல்லை: எனவே அது உங்களுக்குத் தீட்டு. |
5 | குழிமுயல் அசைபோடும்: ஆனால் அதற்கு விரிகுளம்பு இல்லை: எனவே அது உங்களுக்குத் தீட்டு. |
6 | முயல் அசைபோடும்: ஆனால், அதற்கு விரிகுளம்பு இல்லை: எனவே அது உங்களுக்குத் தீட்டு. |
7 | பன்றி இரண்டாகப் பிரிந்திருக்கும் விரிகுளம்புடையது: ஆனால், அது அசைபோடாது: எனவே அது உங்களுக்குத் தீட்டு. |
8 | இவற்றின் இறைச்சியை உண்ணலாகாது.இவற்றின் சடலங்களைத் தொடவும் கூடாது. இவை உங்களுக்குத் தீட்டானவை. |
9 | நீர்நிலைகளில் இருப்பனவற்றில் நீங்கள் உண்ணத்தக்கவை: கடல்களும், ஆறுகளுமாகிய நீர்நிலைகளில் இருப்பனவற்றில் துடுப்பும் செதிலுமுள்ளவை அனைத்தும் நீங்கள் உண்ணத்தக்கவை. |
10 | ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய நீர்நிலைகளில் செறிந்திருக்கும் உயிரினங்களும், துடுப்பும் செதிலும் அற்றவை உங்களுக்கு அருவருப்பு. |
11 | அவை உங்களுக்கு அருவருப்பு.அவற்றின் இறைச்சியை உண்ணலாகாது.அவற்றின் சடலங்களை அருவருப்பாகக் கருதுங்கள். |
12 | நீர்வாழ்வனவற்றில் துடுப்பும் செதிலும் அற்றவையாவும் உங்களுக்கு அருவருப்பு. |
13 | பறவைகளிலும் நீங்கள் உண்ணாமல் அருவருக்க வேண்டியவை: கழுகு, கருடன், கடலூராஞ்சி, |
14 | பருந்து, வல்லூறு, அதன் இனம், |
15 | காகம், அதன் இனம், |
16 | தீக்கோழி, கூகை, சம்புகம், சிறுகழுகு, அதன் இனம், |
17 | ஆந்தை, சகோரம், கோட்டான், |
18 | நாரை, கூழக்கடா, குருகு, |
19 | கொக்கு, இராசாளி, அதன் இனம், புழுக்கொத்தி, வெளவால். |
20 | பறப்பனவற்றுள் நான்கு கால்களால் நடமாடும் ஊர்வன யாவும் உங்களுக்கு அருவருப்பு. |
21 | ஆயினும், நான்கு கால்களால் நடமாடியும் தரையில் தத்திப் பாயும்படி நெடிய பின்னங்கால்கள் உடையனவற்றை உண்ணலாம். |
22 | நீங்கள் உண்ணக்கூடியவை: தத்துக்கிளி, அதன் இனம்: வெட்டுக்கிளி, அதன் இனம்: மொட்டை வெட்டுக்கிளி, அதன் இனம்: சுவர்க்கோழி, அதன் இனம். |
23 | பறப்பனவற்றுள் நான்கு கால்களால் நடமாடும் மற்ற யாவும் உங்களுக்கு அருவருப்பு. |
24 | அவை உங்களுக்குத் தீட்டு, அவற்றின் சடலத்தைத் தொடுகிறவர் மாலைவரை தீட்டுடையவர். |
25 | அவற்றின் சடலத்தை எடுப்போர் தம் உடைகளைத் துவைக்க வேண்டும்.மாலைவரை அவர் தீட்டுடையவர். |
26 | இரண்டாய்ப் பிரிந்த குளம்புகள் இல்லாமலும் அசைபோடாமலும் இருக்கும் அனைத்து உயிரினங்களைத் தொடுகிற எல்லாரும் தீட்டுடையவர். |
27 | நான்கு கால் உயிர்களில் உள்ளங்கால் ஊன்றி நடக்கும் அனைத்தும் உங்களுக்குத் தீட்டு. |
28 | அவற்றின் சடலத்தைத் தொடுகிறவர் மாலைவரை தீட்டுடையவர். அவற்றின் சடலத்தை எடுப்போர் தம் உடைகளைத் துவைக்க வேண்டும்.மாலைவரை அவர் தீட்டுடையவர். அவர் உங்களுக்குத் தீட்டு. |
29 | நிலத்தில் செறிந்திருக்கும் ஊர்வனவற்றில் உங்களுக்குத் தீட்டானவை: எலி, சுண்டெலி, ஆமை இனம்: |
30 | உடும்பு, அழுங்கு, ஓணான், பல்லி, பச்சோந்தி |
31 | ஊர்வனவற்றில் இவை உங்களுக்குத் தீட்டு.அவற்றுள் செத்ததைத் தொடுகிறவர் மாலைவரை தீட்டுடையவர். |
32 | அவற்றுள் செத்த ஏதேனும், எதன்மேலாவது விழுந்தால் அது தீட்டுப்படும்.அது மரப்பாத்திரமானாலும், உடையானாலும், தோலானாலும், கோணிப்பையானாலும், வேலைக்கு உதவும் எந்தக் கருவியானாலும் மாலைவரை அது தண்ணீரில் போடப்பட வேண்டும்.மாலைவரை அது தீட்டுப்பட்டது.பின்னால் அது தூய்மையாகும். |
33 | அவற்றுள் ஏதேனும் மண் பாண்டத்துக்குள் விழுந்தால் அதனுள் இருக்கும் அனைத்தும் தீட்டுப்பட்டுவிடும்.எனவே அது உடைக்கப்பட வேண்டும். |
34 | உண்ணத்தக்க எந்த உணவிலும் இப்பாண்டத்துத் தண்ணீரில்பட்டால் அது தீட்டு: அந்தப் பாண்டத்திலிருக்கும் எந்தப் பானமும் தீட்டு. |
35 | அவற்றின் சடலம் எதன்மீது விழுந்தாலும் அது தீட்டு: அடுப்போ சமையல் பாண்டமோ எனில், அவை உடைக்கப்பட வேண்டும்.அவை உங்களுக்குத் தீட்டு, ஏனெனில் அவை தீட்டுப்பட்டிருக்கும். |
36 | நீரூற்றும் மிகுந்தநீருள்ள கிணறும் எனில், அவை தூய்மையாய் இருக்கும்: ஆனால் அவற்றின் சடலம் தொடும்பகுதி தீட்டுப்பட்டது. |
37 | விதைக்கிற தானியத்தின் மீது அவற்றின் சடலம் விழுந்தால் அது தீட்டன்று. |
38 | தண்ணீர் விடப்பட்ட விதைமேல் விழுந்தால், அது தீட்டாகும். |
39 | உங்கள் உணவுப்பொருளான கால்நடை ஒன்று சாக, அதன் சடலத்தைத் தொடுகிறவர் மாலைவரை தீட்டுடையவர். |
40 | அதன் சடலத்தைத் தின்பவர் தம் உடைகளைத் துவைக்கவேண்டும்.அவர் மாலைவரை தீட்டுடையவர்.மேலும் அதன் சடலத்தை எடுத்துப் போகிறவரும் தம் உடைகளைத் துவைக்க வேண்டும்.அவர் மாலைவரை தீட்டுடையவர். |
41 | தரையில் நகர்ந்து செல்லும் ஊர்வன அனைத்தும் அருவருப்பானவை.அவற்றை உண்ணலாகாது. |
42 | நிலத்தில் ஊர்வனவற்றையும், வயிற்றால் நகர்வனவற்றையும், நான்கு காலால் ஊர்வனவற்றையும் பல கால்களுள்ள எதனையும் உண்ணலாகாது. அவை அருவருப்பு. |
43 | நகருகிற எந்த ஊர்வனவும் உங்களையும் தீட்டுப்படுத்தலாகாது.அவற்றால் தீட்டுப்படாமல் இருங்கள்.ஏனெனில் அவற்றால் நீங்கள் தீட்டுப்படுவீர்கள். |
44 | நான் உங்கள் ஆண்டவராகிய கடவுள்.எனவே உங்களைத் தூய்மைப்படுத்தி, தூயவராயிருங்கள்.ஏனெனில், நான் தூயவர்.நிலத்தில் ஊர்வனவற்றால் உங்களைத் தீட்டுப்படுத்தலாகாது. |
45 | உங்கள் கடவுளாயிருக்குமாறு உங்களை எகிப்திலிருந்து வெளிக்கொணர்ந்த ஆண்டவர் நானே! நீங்கள் தூயவராயிருங்கள்.ஏனெனில் நான் தூயவர்! |
46 | விலங்கினம், பறவைகள், நீர்வாழும் எல்லா உயிரினங்கள், நிலத்தில் நகரும் உயிரினங்கள் ஆகியவை பற்றிய சட்டம் இதுவே. |
47 | இதனின்று, தீட்டுடையதற்கும் தீட்டற்றதற்கும், உண்ணத்தகுந்த உயிரினங்களுக்கும் உண்ணத்தகாத உயிரினங்களுக்கும் வேறுபாடு தெரிந்துகொள்க! |