1 | ஆண்டவர் மோசேயிடம் கூறியது: |
2 | நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: ஒருவர் யாரையேனும் பொருத்தனையாகச் செலுத்தத் திட்டமிட்டிருந்தால் அவர்கள் உன் மதிப்பின்படி ஆண்டவருக்கு உரியவர். |
3 | இருபது வயதிலிருந்து அறுபது வயதுக்கு உட்பட்ட ஆண்மகனுக்குத் திருக்கோவில் அளவையின்படி அறுநூறு கிராம் வெள்ளி: |
4 | பெண்ணாய் இருந்தால் முன்னூற்றைம்பது கிராம். |
5 | ஐந்து வயது முதல் இருபது வயது வரையுள்ள ஆண்பிள்ளைக்கு இருநூற்று முப்பது கிராம் பெண் பிள்ளைக்கு நூற்றுப் பதினைந்து கிராம் |
6 | ஒரு மாதம் முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளைக்கு அறுபது கிராம் வெள்ளி: பெண்பிள்ளைக்கு முப்பத்தைந்து கிராம் வெள்ளி, |
7 | அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவரை நூற்று எழுபது கிராம் வெள்ளியாகவும் மூதாட்டியை நூற்றுப் பதினைந்து கிராம் வெள்ளியாகவும் மதிப்பிட வேண்டும். |
8 | தம் மதிப்பைச் செலுத்த வாய்ப்பற்ற ஏழை எனில், குரு முன்னிலையில் அவர் வந்து நிற்க, பொருத்தனை செய்தவரின் நிதி நிலைக்கு ஏற்பக் குரு அவரை மதிப்பிடவேண்டும். |
9 | ஆண்டவருக்குக் காணிக்கையாக பொருத்தனை செய்தது விலங்கு எனில், அது ஆண்டவருக்கெனப் பிரித்துவைக்கப்பட்டது ஆகும். |
10 | அது மாற்றத் தகுந்தது அன்று.நல்லதுக்குப் பதில் கெட்டதையும் கெட்டதுக்குப் பதில் நல்லதையும் கொடுக்கலாகாது.ஒரு விலங்குக்குப் பதிலாக வேறொரு விலங்கைக் கொடுக்க விரும்பினால், அவை இரண்டும் ஆண்டவருக்கெனப் பிரித்துவைக்கப்பட்டவை ஆகும். |
11 | அது பலியீடத் தகுதியற்ற தீட்டான விலங்கு எனில், அதைக் குருமுன் கொண்டுவந்து நிறுத்தவேண்டும். |
12 | குரு அதன் தரத்தின் உயர்வு, தாழ்வை மதிப்பிடுவான்.அவன் மதிப்பிடுவதே அதன் மதிப்பு ஆகும். |
13 | அதனை மீட்க விரும்பினால், மதிப்புப் பணத்துடன் ஐந்தில் ஒரு பங்கை மிகுதியாகச் செலுத்தவேண்டும். |
14 | ஒருவர் நேர்ச்சையாகத் தன் இல்லத்தை ஆண்டவருக்கு நேர்ந்து கொண்டால், குரு அதன் தரத்தின் உயர்வு, தாழ்வை மதிப்பிடுவான்.அவன் மதிப்பீடே அதன் மதிப்பு ஆகும். |
15 | அதன் உடைமையாளர் அந்த வீட்டை மீட்க விரும்பினால், மதிப்புப் பணத்துடன் ஐந்தில் ஒருபங்கை மிகுதியாகச் செலுத்த வேண்டும்.அது மீண்டும் அவருடையது ஆகும். |
16 | ஒருவர் தன் குடும்ப நிலத்தின் பகுதியை நேர்ந்துகொண்டால், அதன் மதிப்பு விதைப்பாட்டிற்கேற்ப இருக்க வேண்டும்.ஒரு கலம் பார்லி விதைப்பாடுள்ள வயல் அறுநூறு கிராம் வெள்ளி ஆகும். |
17 | யூபிலி ஆண்டில் தம் வயலை நேர்ச்சை செய்தால், நீ மதிக்கிறபடியே அதன் மதிப்பு இருக்கும். |
18 | யூபிலி ஆண்டுக்குப் பின்னர் அதை நேர்ந்துகொண்டால், அடுத்த யூபிலி ஆண்டுவரை எஞ்சியுள்ள ஆண்டுகளுக்கு ஏற்ப, அதன் மதிப்பு குருவினால் கணக்கிடப்பட்டு, அதன் உண்மை மதிப்பிலிருந்து குறைக்கப்படும். |
19 | வயலை நேர்ச்சையாகச் செலுத்தினவர் அதை மீட்க விரும்பினால், மதிப்புப் பணத்துடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்க அது அவருடையது ஆகும். |
20 | வயலை மீட்காமல், அதை வேறொருவருக்கு விற்றால், அதனை மீட்க இயலாது. |
21 | அது யூபிலி ஆண்டில் விடுவிக்கப்படும்போது, ஆண்டவருக்கென நேர்ந்துகொள்ளப்பட்ட நிலமாகக் கருதப்படும்: அது குருவின் உடைமை ஆகும். |
22 | ஒருவர், தன் குடும்பச் சொத்து அல்லாத ஒது வயலை வாங்கி அதை ஆண்டவருக்கென நேர்ச்iயாகச் செலுத்தினால், |
23 | யூபிலி ஆண்டு மட்டும் அதற்குண்டான மதிப்பிற்கேற்ப, அதன் விலை குருவினால் கணக்கிடப்படும்.அந்த மதிப்பு அன்றே ஆண்டவருக்கு நேர்ச்சையாகச் செலுத்தப்படும். |
24 | எவரிடமிருந்து அந்த வயலை வாங்கினாரோ, அவருக்கு யூபிலி ஆண்டில் அது திருப்பிக் கொடுக்கப்படும். |
25 | மதிப்பீடுகள் அனைத்தும் தூயகத்துச் செக்கேலின்படி கணக்கிட வேண்டும்.ஒரு செக்கேல் என்பது பதினொன்றரை கிராம். |
26 | தலையீற்று ஆண்டவருடையது.அதனை நேர்ச்சையாக்க வேண்டாம்: ஏனெனில் அது, மாடோ ஆடோ, ஆண்டவருக்கு உரியதே. |
27 | தீட்டான கால்நடையின் முதற்பிறப்பு எனில், அதன் மதிப்பினால் அதனை மீட்டு, அதனுடன் மீண்டும் ஐந்திலொரு பங்கைக் கூட்டிக்கொடுக்க வேண்டும்.மீட்கப்படாவிடில் அதன் மதிப்பிற்கேற்ப அதனை விற்றுவிடலாம். |
28 | ஒருவர் காணிக்கையாகச் செலுத்pய தனக்குரிய மனிதரையும், விலங்கையும், குடும்ப நிலத்தையும் ஆண்டவருக்கென நேர்ந்துவிட்டால், அவற்றுள் எதையும் விற்கவோ, மீட்டுக் கொள்ளவோ வேண்டாம்.நேர்ச்சை அனைத்தும் ஆண்டவருக்கே முற்றிலுமாகப் பிரித்து வைக்கப்பட்டன. |
29 | சபிக்கப்பட்ட எவரும் மீட்கப்படலாகாது.அவர் கொல்லப்படவேண்டும். |
30 | நிலத்தின் தானியங்களிலும், மரங்களின் கனிகளிலும் பத்திலொன்று ஆண்டவருக்குரியது.அது ஆண்டவருக்கெனப் பிரித்து வைக்கப்பட வேண்டியதே. |
31 | அவற்றில் எதையேனும் மீட்க விரும்பினால், அதன் மதிப்போடு ஐந்தில் ஒரு பங்கைக் கூடச்செலுத்த வேண்டும். |
32 | மேய்ச்சலுக்கு உட்பட்ட ஆடு மாடுகளின் பத்திலொன்று ஆண்டவர்க்கெனப் பிரித்து வைக்கப்பட வேண்டும். |
33 | எது உயர்ந்தது, எது தாழ்ந்தது எனப் பார்க்க வேண்டாம்.அதை மாற்றவும் வேண்டாம்: மாற்றினால் அவை இரண்டும் ஆண்டவருக்கெனப் பிரித்து வைக்கப்பட வேண்டாம்.அவை மீட்கப்படலாகா. |
34 | இஸ்ரயேலருக்குக் கூறும்படியாக ஆண்டவர் மோசேக்கு சீனாய் மலையில் வழங்கிய கட்டளைகள் இவையே. |