1 | ஆண்டவர் மோசேயிடம் கூறியது:”ஆரோனின் புதல்வரான குருக்களுக்குச் சொல்: அவர்களுள் எவனும் தன் இனத்தாரில் இறந்துபோன ஒருவராலே தன்னைத் தீட்டப்படுத்த வேண்டாம். |
2 | தனக்கு இரத்த உறவான தாய், தந்தை, மகன், மகள், சகோதரன், |
3 | மணமாகாமல் தன்னுடன் வாழ்ந்த கன்னியான சகோதரி-ஆகியவர்களைத் தவிர |
4 | வேறேவராலும் திருமணத்தால் உறவானவர் உட்பட-தன்னைத் தூய்மைக் கேட்டிற்கு உட்படுத்தித் தீட்டுப்படவேண்டாம். |
5 | அவர்கள் தலையை மொட்டையடித்துக் கொள்ளாமலும், தாடியின் ஓரங்களைச் சிரைத்துக்கொள்ளாமலும், உடலைக் கீறிக் கொள்ளாமலும் இருப்பார்கள். |
6 | அவர்கள் தங்கள் கடவுளின் பெயரைக் கெடுக்காமல் அவருக்கு ஏற்ற தூயோராய் இருப்பார்கள்.ஆண்டவரின் பலியான தங்கள் கடவுளின் அப்பத்தைச் செலுத்துவதால் அவர்கள் தூய்மையாய் இருக்க வேண்டும். |
7 | விலைமாதையோ தூய்மைக் கேடு உற்றவளையோ அவர்கள் மணம் புரியலாகாது.கணவனால் மணமுறிவு செய்யப்பட்ட பெண்ணையும் மணம்புரியலாகாது.ஏனெனில், குரு தன் கடவுளுக்கு ஏற்ற தூய்மை உடையவனாய் இருத்தல் வேண்டும். |
8 | அவர்கள் தூயோர்கள் ஏனெனில், அவர்கள் உங்களின் கடவுளுக்கு உணவு படைக்கிறார்கள்.உங்களைத் தூய்மையாக்கும் நான் தூயவனாய் இருப்பதால், உங்களுக்குத் தூயோராய் அவர்கள் இருப்பார்கள். |
9 | குருவின் மகள் வேசியானால், அவள் தன் தந்தைக்குத் தூய்மைக்கேட்டை ஏற்படுத்துகிறாள்.அவளை நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும். |
10 | தலையில் திருப்பொழிவு எண்ணெய் வார்க்கப்பட்டு குருத்துவ உடை அணிந்துள்ள தலைமைக் குருவாகிய உன் சகோதரன், தன் தலையை மூடிக் கொள்ள வேண்டும்: தன் உடைகளைக் கிழித்தலாகாது. |
11 | எந்தப் பிணமானாலும் அது தந்தையுடையதாயினும் தாயுடையதாயினும் அதன் அருகில் சென்று அவன் தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ள வேண்டாம். |
12 | தூய கூடத்திலிருந்து வெளிவராமலும் தன் கடவுளின் தூயகத்தை இழிவுபடுத்தாமலும் இருக்க வேண்டும்.ஏனெனில் அவனுடைய கடவுளின் திருப்பொழிவு எண்ணெய் தாங்கும் சிறப்பு அவனுக்கு உரியது.நானே ஆண்டவர்! |
13 | கன்னிப்பெண்ணையே அவன் மணம் புரிய வேண்டும். |
14 | அவன் கைம்பெண்ணையோ மணமுறிவு பெற்றவளையோ, கற்பொழுக்கம் அற்றவளையோ, விலைமாதையோ மணம் புரியாமல், தன் இனத்திலுள்ள ஒரு கன்னிப் பெண்ணையே மணக்க வேண்டும். |
15 | தன் வழிமரபை இரத்தக் கலப்பற்றதாகப் பாதுகாக்க வேண்டும்.ஏனெனில் நானே அவனைத் தூய்மையாக்கும் ஆண்டவர்.” |
16 | ஆண்டவர் மீண்டும் மோசேயிடம் கூறியது: |
17 | ”நீ ஆரோனிடம் கூறவேண்டியது: உன் வழிமரபினரில் உடல் ஊனமுற்றவன் தன் கடவுளுக்கு உணவுப் படையலைச் செலுத்துதல் ஆகாது. |
18 | உடல் ஊனமுற்றவன் எவனும் அருகில் வரவேண்டாம்: பார்வையற்றவன், முடவன், குறைந்த அல்லது நீண்ட உறுப்பு உடையவன், |
19 | கால் கை ஒடிந்தவன், |
20 | , குள்ளன், கண்ணில் பூ விழுந்தவன், சொறி சிரங்கு உடையவன், அண்ணகன் எவனும் வேண்டாம். |
21 | குருவான ஆரோனின் வழி மரபில் உடல் ஊனமுற்ற எவனும் ஆண்டவரின் நெருப்புப் பலியைச் செலுத்த அருகில் வரவேண்டாம்.மேலும் உடல் ஊனம் அவனுக்கு இருப்பதால், அவன் தன் கடவுளின் உணவுப் படையலைச் செலுத்தவும் வரக்கூடாது. |
22 | தன் கடவுளின் தூய அப்பத்தை அவன் உண்ணலாம். |
23 | ஆனால் தொங்குதிரை அருகில் வர வேண்டாம்: பீடத்தை அணுக வேண்டாம்.ஏனெனில், அவன் உடலில் குறைபாடு உள்ளது.என் தூயகத்தை இழிவுபடுத்த வேண்டாம்.ஏனெனில் நான் அவர்களைத் தூய்மையாக்கும் ஆண்டவர்.” |
24 | மோசே இவற்றை ஆரோனிடமும் அவர் புதல்வரிடமும், இஸ்ரயேல் மக்கள் அனைவரிடமும் கூறினார். |