வேதாகமத்தை வாசி

லேவியராகமம் 1

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆண்டவர் மோசேயை அழைத்துச் சந்திப்புக் கூடாரத்திலிருந்து அவரோடு பேசினார்.
2இஸ்ரயேல் மக்களோடு நீ பேசி அவர்களுக்குச் சொல்ல வேண்டியது: உங்களில் ஒருவர் ஆண்டவருக்கு நேர்ச்சை செலுத்த வந்தால், மாட்டு மந்தையிலிருந்தோ ஆட்டு மந்தையிலிருந்தோ கால்நடையை ஒப்புக்கொடுப்பார்.
3அவரது நேர்ச்சை எரிபலி எனில், மாட்டு மந்தையிலிருந்து எடுக்கப்பட்ட, பழுதற்ற ஒரு காளையை அவர் படைக்கவேண்டும்.ஆண்டவர் திருமுன் ஏற்புடையதாகுமாறு, அதைச் சந்திப்புக் கூடார நுழைவாயிலில் அவர் படைக்கட்டும்.
4அவர் எரிபலியின் தலைமேல் தம் கையை வைப்பார்.அது அவருடைய பாவத்திற்கு கழுவாயாக ஏற்றுக்கொள்ளப்படும்.
5அந்த இளம் காளையை அவர் ஆண்டவர் திருமுன் அடிப்பார்.ஆரோனின் புதல்வராகிய குருக்கள் அதன் இரத்தத்தைக் கொண்டு வந்து, சந்திப்புக் கூடார நுழைவாயிலில் இருக்கும் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளிப்பர்.
6பின்பு, அவர் எரிபலியைத் தோலுரித்துப் பகுதி பகுதியாகத் துண்டிப்பார்.
7ஆரோனின் புதல்வராகிய குருக்கள் பலிபீடத்தின்மேல் தழல் இட்டு அந்நெருப்பின்மேல் விறகுக் கட்டைகளை அடுக்குவர்.
8ஆரோனின் புதல்வராகிய குருக்கள் துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள நெருப்பில் அடுக்கியிருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைப்பர்.
9அதன் குடலையும் கால்களையும் தண்ணீரில் கழுவி அவை எல்லாவற்றையும் குருக்கள் பலிபீடத்தின்மேல் எரித்துவிடுவர்.நெருப்பாலான இது ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க நெருப்புப்பலி ஆகும்.
10எரிபலிக்கான அவரது நேர்ச்சை ஆட்டுமந்தையிலுள்ள செம்மறி அல்லது வெள்ளாடாக இருந்தால், அவர் பழுதற்ற ஓர் ஆட்டுக் கிடாயைக் கொண்டு வரவேண்டும்.
11ஆண்டவர்திருமுன் பலிபீடத்தின் வடபுறத்தில் அதை அவர் கொல்ல வேண்டும்.ஆரோனின் புதல்வராகிய குருக்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிப்பர்.
12அவர் அதைப் பகுதிகளாகத் துண்டித்து, துண்டங்களோடு தலையையும் கொழுப்பையும் சேர்த்து வைப்பார்.பின்பு, குரு அவற்றைப் பலிபீடத்திலுள்ள நெருப்பின்மேல் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கி வைப்பார்.
13அதன் குடலும் பின்னந்தொடைகளும் தண்ணீரால் கழுவப்படும்.அவை அனைத்தையும் பலிபீடத்தின்மேல் குரு எரியூட்டுவார்.இது ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க நெருப்பாலான எரிபலி ஆகும்.
14அவர் ஆண்டவருக்குச் செலுத்தும் நேர்ச்சை பறவை எரிபலி எனில், காட்டுப் புறாக்களையாவது மாடப்புறாக்களையாவது நேர்ச்சையாகச் செலுத்த வேண்டும்.
15அதைக் குரு பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து அதன் தலையைத் திருகி, பலிபீடத்தின் எரித்து விடுவார்: அதன் இரத்தத்தையோ பலிபீடத்தின் பக்கத்தில் சிந்த விடுவார்:
16அதன் இரைப்பையையும் இறகுகளையும் அகற்றி, அவற்றைப் பலிபீடத்திற்கருகில் கிழக்குப்புறமாக சாம்பல் இடுகிற இடத்தில் எறிந்து விடுவார்:
17அதன் இறக்கைகளைப் பிடித்து இரண்டாக்காமல் அதனைக் கிழிப்பார்.அவ்வாறு கிழித்தபின் குரு அதைப் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் எரியூட்டுவார்.இது ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க நெருப்பாலான எரிபலி ஆகும்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.