1 | இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன்மேல் அன்பு கூர்ந்தேன்: எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன். |
2 | எவ்வளவுக்கு நான் அவர்களை வருந்தி அழைத்தேனோ, அவ்வளவுக்கு என்னை விட்டுப் பிடிவாதமாய் விலகிப் போனார்கள்: பாகால்களுக்குப் பலியிட்டார்கள், சிலைகளுக்குத் தூபம் காட்டினார்கள். |
3 | ஆனால் எப்ராயிமுக்கு நடைபயிற்றுவித்தது நானே: அவர்களைக் கையிலேந்தியதும் நானே: ஆயினும், அவர்களைக் குணமாக்கியது நானே என்பதை அவர்கள் உணராமற் போனார்கள். |
4 | பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன்: அவர்கள் கழுத்தின்மேல் இருந்த நுகத்தை அகற்றினேன்: அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன். |
5 | எகிப்து நாட்டுக்கே அவர்கள் திரும்பிப் போவார்கள்: அசீரியா அவர்களை அரசாளும்: ஏனெனில் என்னிடம் திரும்பி வர மறுத்துவிட்டார்கள். |
6 | அவர்களுடைய தீய எண்ணங்களை முன்னிட்டு அவர்களின் நகர்களுக்கு எதிராக வாள் பாய்ந்தெழுந்து, அவர்கள் கதவுகளின் தாழ்ப்பாள்களை நொறுக்கிவிட்டு, அவர்களை விழுங்கிவிடும். |
7 | என் மக்கள் என்னை விட்டு விலகிப் போவதிலேயே கருத்தாய் இருக்கிறார்கள், அவர்கள்மேல் நுகத்தடி பூட்டப்படுவதால் கூக்குரலிடுவார்கள்: அந்த நுகத்தை அகற்றுவார் எவருமில்லை. |
8 | எப்ராயிமே! நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரயேலே! உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்? உன்னை எப்படி அதிமாவைப் போலாக்குவேன்? செபோயிமுக்குச் செய்ததுபோல் உனக்கும் செய்வேனோ? என் உள்ளம் அதை வெறுத்து ஒதுக்குகின்றது, என் இரக்கம் பொங்கி வழிகின்றது. |
9 | என் சீற்றத்தின் கனலைக் கொட்டமாட்டேன்: எப்ராயிமை அழிக்கத் திரும்பிவரமாட்டேன்: நான் இறைவன், வெறும் மனிதனல்ல: நானே உங்கள் நடுவிலிருக்கும் தூயவர், ஆதலால், நான் நகர்க்கு எதிராக வரமாட்டேன். |
10 | ஆண்டவராம் என் பின்னே அவர்கள் போவார்கள்: நானும் சிங்கத்தைப் போலக் கர்ச்சனை செய்வேன்: ஆம், நான் கர்ச்சனை செய்வேன். அவர்களின் புதல்வர் மேற்கிலிருந்து நடுங்கிக்கொண்டு வருவர். |
11 | எகிப்தினின்று பறவைகள்போலவும், அசீரியா நாட்டினின்று புறாக்களைப் போலவும் நடுங்கிக் கொண்டு வருவர்: அவர்களைத் தம் வீடுகளுக்கே திரும்பச் செய்வேன், என்கிறார் ஆண்டவர். |
12 | எப்ராயிம் மக்களின் பொய்க்கூற்று என்னைச் சூழ்ந்துள்ளது: இஸ்ரயேல் குடும்பத்தாரின் வஞ்சகம் என்னை வளைத்துக் கொண்டுள்ளது. ஆனால், யூதா இறைவனோடு இன்னும் நடக்கிறான்: தூயவராம் ஆண்டவருக்கு உண்மை உள்ளவனாய் இருக்கிறான். |