1 | பாபிலோனிய அரசனாகிய பெல்சாட்சரின் முதலாண்டில் தானியேல் கனவு கண்டார்: அவர் படுத்திருக்கையில், அவரது மனக்கண்முன் காட்சிகள் தோன்றின. பிறகு அந்தக் கனவை எழுதிவைத்து அதைச் சுருக்கமாகச் சொன்னார். |
2 | தானியேல் கூறியது: “இரவில் நான் கண்ட காட்சியில் வானத்தின் நான்கு திசைக் காற்றுகளும் பெருங்கடலைக் கொந்தளிக்கச் செய்தன. |
3 | அப்பொழுது நான்கு பெரிய விலங்குள் கடலினின்று மேலெழும்பின. |
4 | அவை வௌவேறு உருவம் கொண்டவை. அவற்றுள் முதலாவது கழுகின் இறக்கைகளை உடைய சிங்கத்தைப்போல் இருந்தது. நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அதன் இறக்கைகள் பிடுங்கப்பட்டன: அது தரையினின்று தூக்கப்பட்டு மனிதனைப்போல் இரண்டு கால்களில் நின்றது: அதற்கு மனித இதயமும் கொடுக்கப்பட்டது. |
5 | அடுத்து, வேறொரு இரண்டாம் விலங்கைக் கண்டேன். கரடியைப் போன்ற அந்த விலங்கு பின்னங்கால்களை ஊன்றி எழுந்து நின்றது: தன் மூன்று விலா எலும்புகளைத் தன் வாயின் பற்களுக்கு இடையில் கவ்விக்கொண்டிருந்தது. 'எழுந்திரு, ஏராளமான இறைச்சியை விழுங்கு' என்று அதற்குச் சொல்லப்பட்டது. |
6 | இன்னும் நோக்குகையில், வேங்கை போன்ற வேறோரு விலங்கு காணப்பட்டது. அதன் முதுகில் பறவையின் இறக்கைகள் நான்கு இருந்தன: அந்த விலங்குக்கு நான்கு இருந்தன: அதற்கும் ஆளும் உரிமை கொடுக்கப்பட்டது. |
7 | இவற்றுக்குப் பிறகு, இரவின் காட்சியில் கண்ட நான்காம் விலங்கு, அஞ்சி நடுங்க வைக்கும் தோற்றமும் மிகுந்த வலிமையும் கொண்டதாய் இருந்தது. அதற்கு பெரிய இரும்புப் பற்கள் இருந்தன. அது தூள் தூளாக நொறுக்கி விழுங்கியது: எஞ்சியதைக் கால்களால மிதித்துப் போட்டது. இதற்குமுன் நான் கண்ட விலங்குகளுக்கு இது மாறுபட்டது. இதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தன. |
8 | அந்தக் கொம்புகளை நான் கவனித்துப் பார்க்கையில், அவற்றின் நடுவில் வேறொரு சிறிய கொம்பு முளைத்தது: அதற்கு இடமளிக்கும் வகையில், முன்னைய கொம்புகளுள் மூன்று வேரோடு பிடுங்கப்பட்டன: அந்தக் கொம்பில் மனிதக் கண்களைப் போலக் கண்களும் பெருமை பேசும் வாயும் இருந்தன. |
9 | நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன: தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்: அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன: அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன. |
10 | அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது: பல்லாயிரம் பேர் அவருக்குப் பணிபுரிந்தார்கள்: பலகோடி பேர் அவர்முன் நின்றார்கள்: நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது: நூல்கள் திறந்து வைக்கப்பட்டன. |
11 | அந்தக் கொம்பு பேசின பெருமை மிக்க சொற்களை முன்னிட்டு நான் அதைக் கவனித்துப் பார்த்தேன். அப்படிப் பார்க்கையில், அந்த விலங்கு கொல்லப்பட்டது: அதன் உடல் சிதைக்கப்பட்டு நெருப்பிற்கு இரையாக்கப்பட்டது. |
12 | மற்ற விலங்குகளிடமிருந்து அவற்றின் ஆட்சியுரிமை பறிக்கப்பட்டது: ஆயினும் அவற்றின் வாழ்நாள் குறிப்பிட்ட கால நேரம்வரை நீட்டிக்கப்பட்டது. |
13 | இரவில் நான் கண்ட காட்சியாவது: “வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்: இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்: அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். |
14 | ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்கு கொடுக்கப்பட்டன: எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்: அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்: அதற்கு முடிவே இராது: அவரது அரசு அழிந்து போகாது. |
15 | தானியேல் ஆகிய நான் உள்ளம் கலங்கினேன். மனக்கண்முன் தோன்றிய காட்சிகள் என்னை அச்சுறுத்தின. |
16 | அங்கு நின்று கொண்டிருந்தவர்களுள் ஒருவரை அணுகி, 'இவற்றிற்கெல்லாம் பொருள் என்ன?' என்று கேட்டேன். அவர் அவற்றின் உட்பொருளை எல்லாம் எனக்கு விளக்கிக் கூறினார். |
17 | இந்த நான்கு விலங்குகளும் உலகில் எழும்பப்போகும் நான்கு அரசர்களைக் குறிக்கின்றன. |
18 | ஆனால் உன்னதரின் புனிதர்கள் அரசுரிமை பெறுவர்: அந்த அரசுரிமையை என்றும் ஊழ்ஊழிக் காலமும் கொண்டிருப்பர்.” |
19 | அதன் பின்னர், மற்ற விலங்குகளினின்று மாறுபட்டு, மிகவும் அஞ்சி நடுங்கவைக்கும் தோற்றத்துடன், இரும்புப் பற்களும் வெண்கல நகங்களும் கொண்டு, அனைத்தையும் தூள் தூளாக நொறுக்கி விழுங்கி, எஞ்சியதைக் கால்களால் மிதித்துப்போட்ட அந்த நான்காம் விலங்கைப்பற்றி அறிந்து கொள்ள விரும்பினேன். |
20 | அதன் தலையில் இருந்த பத்துக் கொம்புகளைப் பற்றியும், மூன்று கொம்புகள் தன் முன்னிலையில் விழுந்து போக அங்கே முளைத்த கண்களும் பெருமையாகப் பேசும் வாயும் கொண்டிருந்த ஏனையவற்றைவிடப் பெரியதாகத் தோன்றிய அந்தக் கொம்பைப் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்பினேன். |
21 | நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அந்தக் கொம்பு புனிதர்களுக்கு எதிராகப் போர் புரிந்து அவர்களை வென்றது. |
22 | தொன்மை வாய்ந்தவர் வந்து உன்னதரின் புனிதர்களுக்கு நீதி வழங்கும் வரையிலும் உரிய காலத்தில் புனிதர்கள் அரசுரிமை பெறும் வரையில் இவ்வாறு நடந்தது. |
23 | அவர் தொடர்ந்து பேசினார்: அந்த நான்காம் விலங்கோ உலகில் தோன்றப்போகும் நான்காம் அரசைக் குறிக்கின்றது: இது மற்றெல்லா அரசுகளையும் விட வேறுபட்டதாகும். உலக முழுவதையும் அது மிதித்துத் தூள்தூளாக நொறுக்கி விழுங்கிவிடும். |
24 | அந்தப் பத்துக் கொம்புகளோ இந்த அரசினின்று தோன்றவிருக்கும் பத்து மன்னர்களைக் குறிக்கின்றன. அவர்களுக்குப் பிறகு மற்றொருவன் எழும்புவான்: முந்தினவர்களைவிட வேறுபட்டிருப்பான்: மூன்று அரசர்களை முறியடிப்பான்: |
25 | அவன் உன்னதர்க்கு எதிரான சொற்களைப் பேசுவான்: உன்னதரின் புனிதர்களைத் துன்புறுத்துவான்: வழிபாட்டுக் காலங்களையும் திருச்சட்டத்தையும் மாற்ற நினைப்பான். மூன்றரை ஆண்டுகள் புனிதர்கள் அவனது கையில் ஒப்புவிக்கப்படுவர். |
26 | ஆனால், நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமரும்: அவனது ஆட்சி அவனிடமிருந்து பறிக்கப்பட்டு, எரியுண்டு ஒன்றுமில்லாது அழிக்கப்படும். |
27 | ஆட்சியும் அரசுரிமையும், வானத்தின் கீழுள்ள உலகனைத்திலும் உள்ள அரசுகளின் மேன்மையும் உன்னதரின் புனித மக்களுக்குத் தரப்படும். அவர்களது அரசு என்றென்றும் நிலைக்கும் அரசு: எல்லா அரசுகளும் அவர்களுக்குப் பணிந்து கீழ்ப்படியும். |
28 | இத்தோடு விளக்கம் முடிகிறது. தானியேல் ஆகிய நான் என் நினைவுகளின் பொருட்டு மிகவும் கலங்கினேன்: என் முகம் வெளிறியது: ஆயினும் இவற்றை என் மனத்திற்குள் வைத்துக் கொண்டேன். |