வேதாகமத்தை வாசி

தானியேல் 9

                   
புத்தகங்களைக் காட்டு
1பிறப்பினால் மேதியனாகிய அகஸ்வேருவின் மகன் தாரியு கல்தேய நாட்டின் அரசனாகி ஆட்சி புரிந்த முதல் ஆண்டு.
2அவனது முதல் ஆட்சியாண்டில் தானியேல் ஆகிய நான், எருசலேம் பாழ்நிலையில் கிடக்கும் காலம், எரேமியா இறைவாக்கினர்க்கு ஆண்டவர் உரைத்தபடி எழுபது ஆண்டுகள் ஆகும் என்று நூல்களிலிருந்து படித்தறிந்தேன்.
3நான் நோன்பிலிருந்து சாக்கு உடை அணிந்து சாம்பலில் அமர்ந்து என் தலைவராகிய கடவுளிடம் திரும்பி மன்றாடி வேண்டிக் கொண்டேன்.
4என் கடவுளாகிய ஆண்டவர்முன் என் பாவங்களை அறிக்கையிட்டு நான் மன்றாடியது: “என் தலைவரே! நீர் மாட்சிமிக்க அஞ்சுதற்குரிய இறைவன். உம்மீது அன்புகொண்டு உம் கட்டளைகளின்படி நடப்பவர்களுடன் நீர் செய்துகொண்ட உடன்படிக்கையைக் காத்து அவர்களுக்குப் பேரன்பு காட்டுகின்றீர்!
5நாங்கள் பாவம் செய்தோம்: வழி தவறி நடந்தோம்: பொல்லாதவர்களாய் வாழ்ந்து உம்மை எதிர்த்து நின்றோம். உம் கட்டளைகளையும் நீதிநெறிகளையும் கைவிட்டோம்.
6எங்களுடைய அரசர்கள், தலைவர்கள், தந்தையர்கள், நாட்டிலுள்ள மக்கள் அனைவர்க்கும் இறைவாக்கினர்களாகிய உம் ஊழியர்கள் உமது பெயரால் பேசியதற்கு நாங்கள் செவி கொடுக்கவில்லை.
7என் தலைவரே! நீதி உமக்கு உரியது: எம்கோ இன்று வரை கிடைத்துள்ளது அவமானமே. ஏனெனில், யூதாவின் ஆண்களும் எருசலேம்வாழ் மக்களும், இஸ்ரயேலைச் சார்ந்த யாவரும் ஆகிய நாங்கள், உமக்கு எதிராகச் செய்த துரோகத்தின் பொருட்டு, அருகிலோ தொலையிலோ உள்ள எல்லா நாடுகளுக்கும் உம்மால் இன்றுவரை விரட்டப்பட்டுள்ளோம்.
8ஆம், ஆண்டவரே! அவமானமே எங்களுக்கும் எங்கள் அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் தந்தையர்களுக்கும் கிடைத்துள்ளது. ஏனெனில், நாங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.
9எங்கள் தலைவரும் கடவுளுமாகிய உம்மிடத்தில் இரக்கமும் மன்னிப்பும் உண்டு. நாங்களோ உம்மை எதிர்த்துநின்றோம்.
10எங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம் ஊழியர்களான இறைவாக்கினர் மூலம் தம் திருச்சட்டங்களை அளித்து அவற்றின் வழியில் நடக்குமாறு பணித்தார்.
11நாங்களோ அவரது குரலொளியை ஏற்கவில்லை. இஸ்ரயேலர் யாவரும் உமது திருச்சட்டத்தை மீறி உம் குரலுக்குப் பணிய மறுத்து, விலகிச் சென்றனர். கடவுளின் ஊழியரான மோசேயின் திருச்சட்டத்தில் எழுதப்பட்டபடி, சாபமும் கேடும் எங்கள் தலைமேல் கொட்டப்பட்டன. ஏனெனில், நாங்கள் அவருக்கு எதிராகப் பாவம் செய்தோம்.
12எங்களுக்கும் எங்களை ஆண்டுவந்த எங்கள் அரசர்களுக்கும் எதிராக அவர் கூறியதை எங்கள்மீது அவர் சுமத்தியுள்ள பெரும் துன்பத்தின் வழியாய் உறுதிப்படுத்தியுள்ளார். ஏனெனில், எருசலேமுக்கு எதிராக நிகழ்ந்ததுபோல் உலகில் வேறெங்கும் நடக்கவே இல்லை.
13மோசேயின் திருச்சட்டத்தில் எழுதியுள்ளவாறே, இத்துணைத் துன்பமும் எங்கள்மேல் வந்துள்ளது. ஆயினும், நாங்கள் எங்கள் கொடிய செயல்களை விட்டொழித்து, உமது உண்மை வழியை ஏற்று, ஆண்டவரும் எம் கடவுளுமான உமக்கு உகந்தவர்களாய் நடக்க முயலவில்லை.
14ஆகையால் ஆண்டவர் எங்களுக்கு உரிய தண்டனையைத் தயாராக வைத்திருந்தது எங்கள்மீது சுமத்தினார். ஏனெனில் எங்கள் கடவுளாகிய ஆண்டவர் தாம் செய்யும் செயல்கள் அனைத்திலும் நீதியுள்ளவர். ஆனால், நாங்கள்தான் அவரது குரலுக்குப் பணிய மறுத்தோம்.
15அப்படியிருக்க, எங்கள் தலைவராகிய கடவுளே! உம் மக்களை நீர் மிகுந்த ஆற்றலோடு எகிப்து நாட்டிலிருந்து மீட்டு, இன்றுவரை உமது பெயருக்குப் புகழ் தேடிக்கொண்டீர். நாங்களோ பாவம் செய்தோம், பொல்லாதன புரிந்தோம்.
16ஆனால், எம் தலைவரே! உம்முடைய நீதிச் செயல்களுக்கேற்ப உமது நகரமும் உமது திருமலையுமாகிய எருசலேமைவிட்டு உம் சினமும் சீற்றமும் விலகுவதாக! ஏனெனில் எங்கள் பாவங்கள் தந்தையரின் கொடிய செயல்களில் காரணமாக, எருசலேமும் உம் மக்களும் எங்களைச் சுற்றி வாழும் மக்களிடையே நிந்தைப் பொருளாக மாறிவிட்டனர்.
17ஆகையால், எங்கள் கடவுளே! இப்பொழுது உம் அடியானின் வேண்டுதலையும் விண்ணப்பங்களையும் ஏற்றுக்கொள்ளும். பாழாய்க் கிடக்கிற உமது தூயகத்தின்மீது தலைவராகிய உம்மை முன்னிட்டே உமது முகத்தை ஒளிரச் செய்வீராக!
18என் கடவுளே! செவி சாய்த்துக் கேட்டருளும்: உம் கண்களைத் திறந்து எங்கள் பாழிடங்களையும் உமது பெயர் தாங்கிய நகரையும் நோக்கியருளும். நாங்கள், எங்கள் நேர்மையை நம்பாமல், உமது பேரிரக்கத்தையே நம்பி, எங்கள் மன்றாட்டுகளை உமது முன்னிலையில் சமர்ப்பிக்கிறோம்.
19என் தலைவரே! கேளும்: என் தலைவரே! செவிகொடுத்துச் செயலாற்றும்: என் கடவுளே! உம்மை முன்னிட்டுக் காலம் தாழ்த்தாதேயும்: ஏனெனில் உமது நகரமும் உம் மக்களும் உமது பெயரையே தாங்கியுள்ளனர்.”
20நான் இவ்வாறு சொல்லி வேண்டிக் கொண்டு, என் பாவங்களையும் என் இனத்தாராகிய இஸ்ரயேல் மக்களின் பாவங்களையும் அறிக்கையிட்டு, என் கடவுளின் திரு மலைக்காக என் விண்ணப்பங்களை என் கடவுளாகிய ஆண்டவர்முன் சமர்ப்பித்தேன்.
21இவ்வாறு நான் வேண்டுதல் செய்து கொண்டிருக்கும்பொழுது, முதல் காட்சியில் நான் கண்ட கபிரியேல் என்ற மனிதர் மாலைப் பலிவேளையில் விரைவாய்ப் பறந்து வந்து, என்னைத் தொட்டு என்னிடம் பின்வருமாறு சொன்னார்:
22“தானியேல்! உனக்கு விவேகத்தையும் மெய்யுணர்வையும் அளிக்க நான் புறப்பட்டு வந்துள்ளேன்.
23நீ வேண்டுதல் செய்யத் தொடங்கிய போதே கட்டளை ஒன்று பிறந்தது: நான் அதை உனக்குத் தெரிவிக்க வந்தேன்: ஏனெனில் நீ மிகுதியான அன்புக்கு உரியவன்: ஆதலால் நான் சொல்வதைக் கவனித்து காட்சியின் உட்பொருளை உணர்ந்துகொள்.
24உன்னுடைய இனத்தவம் உனது புனித நகரும் குற்றங்கள் புரிவதையும் பாவம் செய்வதையும் நிறுத்தி விடுவதற்கும், கொடிய செயல்களுக்கும் கழுவாய் தேடுவதற்கும், முடிவற்ற நீதியை நிலைநாட்டுவதற்கும், திருக்காட்சியையும் இறைவாக்குகளையும் முத்திரையிடுவதற்கும், திருத்தூயகத்தைத் திருநிலைப்படுத்துவதற்கும் குறிக்கப்பட்ட கெடு எழுபது வாரங்கள் ஆகும்.
25ஆகவே, நீ அறிந்து தெளிவுபெற வேண்டியதாவது: எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புமாறு கட்டளை பிறப்பதற்கும், அரசராகத் திருப்பொழிவு செய்யப்பட்டவர் வருவதற்கும் இடையே உள்ள காலம் ஏழு வாரங்கள் ஆகும். பின்பு சதுக்கங்களும் அகழிசூழ் அரண்களும் அமைத்து அந்நகரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அறுபத்திரண்டு வாரங்கள் ஆகும். ஆயினும் அது தொல்லை நிறைந்த காலமாய் இருக்கும்.
26அதன் பிறகு திருப்பொழிவு செய்யப்பட்டவர் குற்றமற்றவராயிருந்தும் கொலை செய்யப்படுவார். படையெடுத்து வரவிருக்கும் அரசனின் குடிமக்கள் நகரையும் தூயகத்தையும் அழித்துவிடுவர். பெரும் பிரளயம் போல முடிவு வரும். கடவுளின் ஆணைப்படி இறுதிவரை போரும் பேரழிவுமாய் இருக்கும்.
27ஒரு வாரம் அவன் பலரோடு உடன்படிக்கை செய்து கொண்டு அரசாள்வான். அந்த வாரத்தின் பாதி கழிந்தபின், பலியையும் காணிக்கையையும் நிறுத்திவிடுவான். திருக்கோவிலின் முனையில் பாழாக்கும் அருவருப்பு வைக்கப்படும். அதை அங்கு வைத்துப் பாழ்படுத்தியவன் கடவுளின் ஆணைப்படி இறுதியில் அழிவுறுவான்.”

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.