1 | பின்னர் ஆவி என்னைத் தூக்கி ஆண்டவரது இல்லத்தின் கிழக்குநோக்கி இருக்கும் கீழை வாயிலுக்குக் கொண்டுவந்தது. அவ்வாயிற்பகுதியில் இருபத்தைந்து பேர் இருந்தனர். அவர்கள் நடுவே மக்கள் தலைவர்களான அசூரின் மகன் யாசனியாவையும் பெனாயாவின் மகன் பெலற்றியாவையும் கண்டேன். |
2 | அவர் என்னை நோக்கி, “மானிடா! இந்நகரில் கெடுதலானவற்றைத் திட்டமிடுபவர்களும் தீய அறிவுரை கூறுபவர்களும் இவர்களே. |
3 | 'வீடுகட்டும் காலம் அருகில் உள்ளது அன்றோ! இந்நகர் ஒரு பாண்டம், நாமோ இறைச்சி' என அவர்கள் சொல்கிறார்கள். |
4 | ஆகவே, அவர்களுக்கெதிராக இறைவாக்குரை! மானிடா! இறைவாக்கு உரை!” என்றார். |
5 | அப்போது ஆண்டவரது ஆவி என்மீது இறங்கியது. ஆண்டவர் என்னிடம் கூறுவது: “நீ சொல்: ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேல் வீட்டாரே, நீங்கள் இவ்வாறெல்லாம் எண்ணுகிறீர்கள். உங்கள் உள்ளத்தில் உள்ளதை நான் அறிவேன். |
6 | நீங்கள் இந்நகரில் பலரைக் கொலை செய்துள்ளீர்கள். இதன் தெருக்களைக் கொலையுண்டவர்களால் நிரப்பினீர்கள்.” |
7 | ஆகையால், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “உங்களால் கொலை செய்யப்பட்டு இதனுள் போடப்பட்டவர்கள்தான் இறைச்சி: இந்நகர் ஒரு பாண்டம். உங்களையோ நான் இதனுள்ளிருந்து வெளியேற்றுவேன். |
8 | வாளுக்கு நீங்கள் அஞ்சினீர்கள்: ஆனால் வாளையே உங்கள் மீது கொணர்வேன்,” என்கிறார் தலைவராகிய ஆண்டவர். |
9 | நான் உங்களை இந்நகரினின்று வெளியேற்றி உங்களை மாற்றாரிடம் கையளித்து உங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்குவேன். |
10 | உங்களுக்கு நான் வழங்கும் தீர்ப்பு: நீங்கள் இஸ்ரயேலின் எல்லையில் வாளால் வீழ்வீர்கள். அப்போது நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள். |
11 | இந்நகர் உங்களுக்கு ஒரு பாண்டமாக இராது: நீங்களும் இதிலுள்ள இறைச்சியாக இருக்கமாட்டீர்கள்: இஸ்ரயேலின் எல்லையில் நான் உங்களைத் தீர்ப்பிடுவேன். |
12 | நீங்கள் மீறிய நியமங்களின் ஆண்டவர் நானே என்பதை அப்போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள். என் நீதி நெறிகளை நீங்கள் கடைப்பிடிக்கவில்லை. மாறாக, உங்களைச் சுற்றியுள்ள வேற்றினத்தாரின் நீதிநெறிகளைப் பின்பற்றினீர்கள். |
13 | நான் இறைவாக்குரைத்தபோது, பெனாயாவின் மகன் பெலற்றியா செத்துப்போனான். நான் முகம்குப்புற விழுந்து, உரத்த குரலில், “ஐயோ, தலைவராகிய ஆண்டவே! இஸ்ரயேலின் எஞ்சியிருப்போரை முற்றிலும் அழிக்கப் போகிறீரோ?” என்று கதறினேன். |
14 | அப்போது, ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: |
15 | “மானிடா! உன் சகோதரர், உன் உறவின் முறையினர் மற்றும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறித்து, 'அவர்கள் ஆண்டவரை விட்டுத் தொலைவில் போய்விட்டார்கள்: எங்களுக்குத்தான் இந்நாடு உரிமையாய்க் கொடுக்கப்பட்டுள்ளது' என எருசலேமில் வாழ்வோர் கூறுகின்றனர். |
16 | எனவே நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: 'நான் அவர்களைத் தொலைவில் வேற்றினத்தாரிடையே அனுப்பி இருந்தாலும், நாடுகளிடையே அவர்களைச் சிதறடித்திருந்தாலும் அவர்கள் சென்ற அந்நாடுகளில் அவர்களுக்கு நான் ஒரு சிறிய தூயகமாக இருந்துள்ளேன். |
17 | ஆதலால் நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான் உங்களை மக்களினங்களிடையே இருந்து கூட்டிச் சேர்த்து நீங்கள் சிதறுண்டிருக்கும் நாடுகளினின்று உங்களை ஒன்று சேர்த்து இஸ்ரயேல் நாட்டை உங்களுக்குத் தருவேன். |
18 | அவர்கள் அங்கு வந்ததும், வெறுக்கத்தக்க எல்லாவற்றையும், அருவருப்புகள் அனைத்தையும் அதனின்று களைவார்கள். |
19 | அவர்களுக்கு நான் வேறோர் இதயத்தையும் புதியதோர் ஆவியையும் வழங்குவேன். கல்லான இதயத்தை அவர்கள் உடலினின்று களைந்து விட்டு, சதையாலான இதயத்தை அருளுவேன். |
20 | அப்போது அவர்கள் என் நியமங்களின்படி நடப்பார்கள். என் நீதிநெறிகளுக்குச் செவி கொடுத்து அவற்றைக் கடைப்பிடிப்பார்கள்: அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்: நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன். |
21 | ஆனால், வெறுக்கத்தக்கவற்றையும் அருவருப்புகளையும் நாடிச்செல்லும் இதயம் கொண்டவர்களின் வழிமுறைகளை அவர்களின் தலைமீதே சுமத்துவேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். |
22 | கெருபுகள் தங்கள் இறக்கைகளை விரிக்க, சக்கரங்களும் அவற்றுடன் எழுந்தன. இஸ்ரயேலின் கடவுளது மாட்சி அவற்றின்மேல் இருந்தது. |
23 | ஆண்டவரது மாட்சி நகரின் நடுவினின்று எழுந்து நகருக்குக் கிழக்கே உள்ள மலைமீது போய் நின்றது. |
24 | அப்போது, இறைக்காட்சியில் ஆவி என்னைத் தூக்கிக் கல்தேயாவிலிருந்த நாடுகடத்தப்பட்டோரிடம் கொண்டு சென்றது. பின்னர் நான் கண்ட காட்சி என்னை விட்டு அகன்றது. |
25 | நானும் ஆண்டவர் எனக்குக் காண்பித்த அனைத்தையும் நாடுகடத்தப்பட்டோரிடம் எடுத்துச் சொன்னேன். |