1 | ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: |
2 | “மானிடா! கலகம் செய்யும் வீட்டாரிடையே நீ வாழ்கின்றாய். காணக் கண்கள் இருந்தும் அவர்கள் காண்பதில்லை: கேட்கச் செவிகள் இருந்தும் அவர்கள் கேட்பதில்லை: ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் வீட்டார். |
3 | மானிடா! நீயோ நாடுகடத்தப்படும் ஒருவர் போல் பொருள்களைத் தயார் செய்து கொண்டு, அவர்கள் கண்ணெதிரே பகல் நேரத்தில் புறப்படு. உன் உறைவிடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு, அவர்கள் கண்ணெதிரே, நாடுகடத்தப்படுபவர் போல் வெளியேறு. கலகம் செய்யும் வீட்டாராக இருப்பினும் ஒருவேளை அவர்கள் அதைக் கண்டுணராலம். |
4 | நாடுகடத்தப்படும் ஒருவர்போல், அவர்கள் கண்ணெதிரே பகல்நேரத்தில் உன் பொருள்களை எடுத்து வை. மாலை வேளையில், அவர்கள் கண்ணெதிரே நாடுகடத்தப்படுபவர்போல் புறப்படு. |
5 | அவர்கள் கண்முன்னே, சுவரில் துளையிட்டு அதன் வழியாய் அவற்றை வெளிக்கொணர்வாய். |
6 | அவர்கள் கண்முன்னே அவற்றைத் தோள்மேல் வைத்து இருள் சூழ்ந்ததும் வெளியே தூக்கிச்செல். நிலத்தைப் பார்க்காதபடி உன் முகத்தை மூடிக்கொள். ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாருக்கு உன்னை ஓர் அடையாளமாக வைத்திருக்கிறேன்.” |
7 | எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன். நாடுகடத்தப்படுகையில் கொண்டு போவதுபோல என் பொருள்களைப் பகல் வேளையில் வெளிக் கொணர்ந்தேன். மாலையில் என் கைகளால் சுவரில் துளையிட்டேன். இருள் சூழ்ந்ததும் அவற்றைத் தோளில் தூக்கிக்கொண்டு அவர்கள் கண்முன்னே வெளியேறினேன். |
8 | காலையில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: |
9 | “மானிடா! கலகம் செய்யும் வீடாகிய இஸ்ரயேல் வீட்டார் உன்னிடம், “நீ செய்கிறது என்ன?” என்று கேட்கவில்லையா? |
10 | நீ அவர்களுக்குச் சொல்: எருசலேமில் இருக்கும் மக்கள் தலைவனையும் அவனுடனிருக்கும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறித்துத் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: |
11 | நீ சொல்: உங்களுக்கு நான் ஓர் அடையாளமாய் இருக்கிறேன்: நான் செய்ததுபோல் அவர்களுக்கும் செய்யப்படும். அவர்கள் நாடுகடத்தப்பட்டோராயும் சிறைப்பட்டோரையும் செல்வர். |
12 | அவர்களின் தலைவன் இருளில் தோளில் சுமையுடன் மதிலினூடே வெளியேறுவான். அவனை வெளிக்கொணர்வதற்காக மதிலைக் குடைவார்கள். கண்களால் நாட்டைப் பார்க்காதபடி அவன் தன் முகத்தை மூடிக்கொள்வான். |
13 | நான் அவன்மீது என் வலையை வீசுவேன். அவனும் என் வலையை வீசுவேன்: அவனும் என் கண்ணில் சிக்கிக்கொள்வான். நான் அவனைக் கல்தேயரின் நாடாகிய பாபிலோனுக்குக் கொண்டு வருவேன். அந்த நாட்டைப் பார்க்காமலேயே அவன் அங்குச் செத்துப் போவான். |
14 | அவனுக்கு உதவியாக அவனைச் சுற்றிலும் இருக்கும் அனைவரையும், அவனுடைய படைகள் அனைத்தையும், நான் எப்பக்கமும் சிதறடித்து, அவர்களை உருவிய வாளோடு பின்தொடர்வேன். |
15 | நான் அவர்களை வேற்றினத்தாரிடையே ஓடச்செய்து, நாடுகளிடையே சிதறடிப்பேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வர். |
16 | ஆயினும் அவர்களுள் சிலரை வாளுக்கும், பஞ்சத்துக்கும், கொள்ளைநோய்க்கும் இரையாக்காமல் விட்டுவைப்பேன். அவர்கள் தாங்கள் போய்ச்சேரும் வேற்றினத்தாரிடையே தங்கள் அருவருப்புகள் எல்லாவற்றையும்பற்றி எடுத்துக்கூறுவர். அப்போது அவர்கள் நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வர். |
17 | ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: |
18 | “மானிடா! நடுக்கத்தோடு உன் அப்பத்தை உண்டு, அதிர்ச்சியோடும் அச்சத்தோடும் நீரைப் பருகு. |
19 | பின்னர், நாட்டின் மக்களை நோக்கிக் கூறு: இஸ்ரயேல் நாட்டிலுள்ள எருசலேமில் வாழ்வோரைப்பற்றித் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: அச்சத்தோடு தங்கள் அப்பத்தை உண்டு, திகைப்போடு நீரைப் பருகுவர். ஏனெனில், அங்கு வாழ்வோரின் வன்செயல்களை முன்னிட்டு அவர்களது நாட்டில் உள்ள அனைத்தும் பறிக்கப்படும். |
20 | மக்கள் வாழும் நகர்கள் பாலைநிலமாகும்: நாடு பாழாய்ப் போகும். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். |
21 | ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: |
22 | “மானிடா! இஸ்ரயேல் நாட்டில் உங்களிடையே வழங்கிவரும் பழமொழி என்ன? 'நாள்கள் கடந்துகொண்டே செல்கின்றன: காட்சிகளோ பலிப்பதில்லை' என்கிறீர்கள். |
23 | ஆகையால் அவர்களுக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: அந்தப் பழமொழிக்கு நான் ஒரு முடிவு கட்டுவேன். இனி அதை இஸ்ரயேலில் வழங்கமாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்குச் சொல்: நாள்கள் நெருங்கிவிட்டன. முன்னறிவிப்புக் காட்சிகள் யாவும் நிறைவேறும். |
24 | இஸ்ரயேல் வீட்டினுள் இனிப் பொய்யான காட்சியும் குறி சொல்லலும் இல்லாமற்போம். |
25 | ஏனெனில், நானே ஆண்டவர்: நானே உரைத்திடுவேன்: நான் உரைக்கும் வாக்கு நிறைவேறியே தீரும்: இனிமேல் காலந்தாழ்த்தாது: கலகம் செய்யும் வீட்டாரே, நானே உரைத்திடுவேன்: அவ்வாக்கை நானே நிறைவேற்றுவேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். |
26 | ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது. |
27 | மானிடா! 'இவன் காணும் காட்சிகள் நெடுநாள்களுக்கப்பால் உள்ளவை: இவன் உரைக்கும் இறைவாக்கும் தொலையில் இருக்கும் காலங்களைப் பற்றியது' என இஸ்ரயேல் வீட்டார் சொல்லிக்கொள்கின்றனர். |
28 | எனவே அவர்களுக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் வார்த்தைகளுள் எதுவும் இனிமேல் காலந்தாழ்த்தாது. நான் உரைக்கும் வாக்கு நிறைவேறியே தீரும்,” என்கிறார் தலைவராகிய ஆண்டவர். |