1 | ஐயோ! மகள் சீயோனை ஆண்டவர் தம் சினமென்னும் மேகத்தால் மூடினார்! அவர் இஸ்ரயேலின் மேன்மையை விண்ணினின்று மண்ணுக்குத் தள்ளினார்! அவரது சினத்தின் நாளில் தம் கால்மணையை மனத்தில் கொள்ளவில்லை! |
2 | ஆண்டவர் யாக்கோபின் அனைத்துக் குடியிருப்புகளையும் இரக்கமின்றி அழித்தார்: அவர் சீற்றமடைந்து மகள் யூதாவின் அரண்களைத் தகர்த்தார்: அவற்றைத் தரைமட்டமாக்கினார். அவரது நாட்டையும் அதன் தலைவர்களையும் மேன்மை குலையச் செய்தார். |
3 | அவர் வெஞ்சினம் கொண்டு இஸ்ரயேலின் கொம்பை முற்றிலும் வெட்டிவிட்டார்: பகைவன் வந்தபொழுது தம் வலக்கையைப் பின்புறம் மறைத்துக்கொண்டார்: சூழ்ந்திருக்கும் யாவற்றையும் எரிக்கும் தீப்பிழம்பென, அவர் யாக்கோபின் மீது பற்றியெரிந்தார். |
4 | எதிரி போலத் தமது வில்லை நாணேற்றினார்: பகைவன் போலத் தம் வலக்கையை ஓங்கினார்: கண்ணுக்கு இனியவை அனைத்தையும் அழித்தார்: மகள் சீயோனின் கூடாரத்தில் தம் சினத்தை நெருப்பெனக் கொட்டினார். |
5 | என் தலைவர் எதிரி போலானார்: அவர் இஸ்ரயேலை அழித்தார்: அதன் கோட்டை கொத்தளங்களைத் தகர்த்தார்: மகள் யூதாவின் அழுகையையும் புலம்பலையும் மிகுதியாக்கினார். |
6 | தோட்டத்துப் பரணைப் பிரித்தெறிவது போலத் தம் கூடாரத்தையும் பிரித்தெறிந்தார்: சபை கூடும் இடத்தையும் அழித்தார்: சீயோனில் ஆண்டவர் விழாக்களையும் ஓய்வுநாளையும் மறக்கச் செய்தார்: அவர் வெஞ்சினமுற்று அரசனையும் குருவையும் வெறுத்து ஒதுக்கினார். |
7 | என் தலைவர் தம் பலிபீடத்தை வெறுத்தொதுக்கினார். தம் திருத்தூயகத்தைக் கைவிட்டார்: அதன் கோட்டைச் சுவர்களைப் பகைவரிடம் கையளித்தார்: விழா நாளில் ஆரவாரம் செய்வதுபோல ஆண்டவரின் இல்லத்தில் அவர்கள் ஆரவாரம் செய்தனர்: |
8 | மகள் சீயோனின் மதிலை அழிக்க ஆண்டவர் திட்டமிட்டார்: அதற்கென நூலினால் அளந்தார்: அதை அழிப்பரை நிறுத்தத் தம் கையை மடக்கிக் கொள்ளவில்லை: அரணும் மதிலும் புலம்பச் செய்தார்: அவை ஒருங்கே சரிந்து வீழ்ந்தன. |
9 | அவளின் வாயிற்கதவுகள் மண்ணில் புதைந்து கிடந்தன: அதன் தாழ்களை உடைத்துச் சிதறடித்தார்: அவளின் அரசனும் தலைவர்களும் வேற்றினத்தாரிடையே உள்ளனர்! திருச்சட்டம் இல்லை: அவளின் இறைவாக்கினரும் ஆண்டவரின் காட்சி பெறவில்லை. |
10 | மகள் சீயோனின் பெரியோர் தரையில் மௌனமாய் அமர்ந்துள்ளனர்: அவர்கள் தங்கள் தலைமேல் புழுதியைத் தூவிக் கொண்டுள்ளனர்: சாக்கு உடை உடுத்தியுள்ளனர்: எருசலேமின் கன்னிப் பெண்கள் தங்கள் தலைகளைத் தரை மட்டும் தாழ்த்தியுள்ளனர். |
11 | என் கண்கள் கண்ணீர் சொரிந்து சோர்ந்துள்ளன! என் குலை நடுங்குகின்றது! என் துயரத்தால் என் ஈரல் வெடித்துத் தரையில் சிதறுகின்றது! என் மக்களாகிய மகள் நசுக்கப்பட்டுள்ளாள்! நகர் வீதிகளில் குழந்தைகளும் மழலைகளும் மயங்கிக் கிடக்கின்றனர்! |
12 | அவர்கள் தங்கள் அன்னையரிடம், “அப்பம், திராட்சை இரசம் எங்கே?” என்று கேட்கின்றனர்! படுகாயமுற்றோரைப்போல, நகர் வீதிகளில் அவர்கள் மயங்கி வீழ்கின்றனர்! தாய் மடியில் உயிர்விட்டவர்போல் ஆகின்றனர்! |
13 | மகளே! எருசலேம்! உன் சார்பாக நான் என்ன சொல்வேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? மகள் சீயோனே! கன்னிப் பெண்ணே! யாருக்கு உன்னை இணையாக்கித் தேற்றுவேன் உன்னை? உன் காயம் கடலைப்போல் விரிந்துள்ளதே! உன்னைக் குணமாக்க யாரால் முடியும்? |
14 | உன் இறைவாக்கினர் உனக்காகப் பொய்யும் புரட்டுமான காட்சிகளைக் கண்டனர்: நீ நாடுகடத்தப்பட இருப்பதைத் தவிர்க்குமாறு, உன் நெறிகேடுகளை அவர்கள் உனக்கு எடுத்துச் செல்லவில்லை: அவர்கள் பொய்யையும் அபத்தங்களையும் காட்சியாகக் கண்டு, உனக்குப் பொய்வாக்கு உரைத்தனர்! |
15 | அவ்வழியாய்க் கடந்து செல்வோர் உன்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தனர்! மகள் எருசலேமை நோக்கித் தலையை ஆட்டிச் சீழ்க்கையடித்தனர்! “அழகின் நிறைவும் மண்ணுலகின் மகிழ்ச்சியுமாக இருந்த மாநகர் இதுதானா?” என்றனர். |
16 | உன் எதிரிகள் அனைவரும் உன்னை நோக்கிக் கோணல்வாய் காட்டுகின்றனர்: சீழ்க்கையடித்துப் பற்களை நறநற வென்று கடிக்கின்றனர்: “நாம் அவளைப் பாழாக்கினோம்” என்றனர். “இந்நாளுக்காகவே நாம் காத்திருந்தோம்: இப்போதுதான் நம்மால் அதைக் காணமுடிந்தது” என்றனர். |
17 | ஆண்டவர் தாம் திட்டமிட்டபடியே செய்தார்: நெடுநாள்களுக்குமுன் தாம் முன்னெச்சரிக்கை செய்தவாறு செயல்பட்டார்: ஈவிரக்கமின்றி இடித்துத் தள்ளினார்: உன் எதிரிகளை மகிழ்ச்சியடையச் செய்தார்: பகைவனின் ஆற்றலைப் பெருகச் செய்தார். |
18 | அவர்களின் இதயம் என் தலைவனை நோக்கிக் கூக்குரலிடுகின்றது: மகள் சீயோனின் மதிலே! இரவும் பகலும் வெள்ளமெனக் கண்ணீர் பொழி! உனக்கு ஓய்வு வேண்டாம்! கண்ணீர் விடாமல் நீ இருக்க வேண்டாம்! |
19 | எழு! இரவில் முதற் சாமத்தில் குரலெழுப்பு! உள்ளத்தில் உள்ளதை என் தலைவர் திருமுன் தண்ணீரைப் போல் ஊற்றிவிடு! தெருமுனையில் பசியால் மயங்கி விழும் குழந்தைகளின் உயிருக்காக, அவரை நோக்கி உன் கைகளை உயர்த்து! |
20 | கண்ணோக்கும் ஆண்டவரே! எண்ணிப் பாரும்: யாருக்கு இப்படிச் செய்திருக்கின்றீர்? பெண்கள் தங்கள் கர்ப்பத்தின் கனிகளையே, கைக்குழந்தைகளையே, தின்ன வேண்டுமோ? குருவும், இறைவாக்கினரும் என் தலைவரின் திருத்தூயகத்தில் கொல்லப்படவேண்டுமோ? |
21 | வீதிகளின் புழுதியில் சிறியோரும் பெரியோரும் வீழ்ந்து கிடக்கின்றனர்! என் கன்னியரும் காளையரும் வாளால் வீழ்த்தப்பட்டனர் உமது சீற்றத்தின் நாளில் ஈவிரக்கமின்றி அவர்களைக் கொன்று குவித்தீர்! |
22 | திருவிழாவுக்கு அழைப்பது போல, எப்பக்கமும் எனக்கெதிராகப் பேரச்சத்தை வரவழைத்தீர்! ஆண்டவரது சீற்றத்தின் நாளில் உயிர்தப்பிப் பிழைத்தவரோ எஞ்சியவரோ எவரும் இல்லை! நான் பேணி வளர்த்தவர்களை என் எதிரி கொன்றழித்தான்! |