1 | “கணவன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனை விட்டகன்று வேறு ஒருவனோடு வாழ்கையில், அக்கணவன் அவளிடம் மீண்டும் திரும்பிச் செல்வானா? அந்நாட்டு தீட்டுப்படுவது உறுதியல்லவா? நீ பல காதலர்களோடு விபசாரம் செய்தாய்: உன்னால் என்னிடம் திரும்பிவர முடியுமா?” என்கிறார் ஆண்டவர். |
2 | உன் கண்களை உயர்த்தி மொட்டை மேடுகளைப்பார்: நீ படுத்துக்கிடக்காத இடம் உண்டோ? பாலை நிலத்தில் அராபியனைப்போல, பாதையோரங்களில் நீயும் காதலர்களுக்காகக் காத்திருந்தாய்: உன் விபசாரங்களாலும் தீச்செயல்களாலும் நாட்டைத் தீட்டுப்படுத்தினாய். |
3 | ஆகையால், நாட்டில் மழை பெய்யாது நின்று விட்டது: இளவேனிற் கால மழையும் வரவில்லை: உனது நெற்றி ஒரு விலைமாதின் நெற்றி: நீ மானங்கெட்டவள். |
4 | இப்போது கூட 'என் தந்தையே! என் இளமையின் நண்பரே!' என என்னை நீ அழைக்கவில்லையா? |
5 | 'என்றென்றும் அவர் சினம் அடைவாரோ? இறுதிவரை அவர் சினம் கொண்டிருப்பாரோ?' என்கிறாய். இவ்வாறு சொல்லிவிட்டு உன்னால் இயன்றவரை தீச்செயல்களையே செய்கிறாய். |
6 | யோசியா அரசன் காலத்தில் ஆண்டவர் என்னிடம் கூறியது: “நம்பிக்கையற்ற இஸ்ரயேல் செய்ததைக் கண்டாயா? அவள் சென்று உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மீதும், பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும் விபசாரம் செய்தாள். |
7 | இவை அனைத்தையும் செய்தபின் என்னிடம் திரும்பி வருவாள் என எண்ணினேன். அவளோ திரும்பி வரவில்லை. நம்பிக்கைத் துரோகம் செய்த சகோதரி யூதா இதைக் கண்டாள். |
8 | நம்பிக்கையற்ற இஸ்ரயேலுடைய விபசாரத்தின் காரணமாக, நான் அவளைத் தள்ளிவிட்டு அவளுக்கு மணமுறிவுச் சீட்டு கொடுத்ததை நம்பிக்கைத் துரோகம் செய்த அவளுடைய சகோதரி யூதா கண்டாள். எனினும், அவளும் அஞ்சாது சென்று விபசாரம் செய்தாள். |
9 | விபசாரம் செய்வது அவளுக்கு வெகு எளிதாக இருந்ததால், கல்லோடும் மரத்தோடும் வேசித்தனம் செய்து நாட்டைத் தீடுப்படுத்தினாள். |
10 | இவை அனைத்திற்கும் பிறகு கூட நம்பிக்கைத் துரோகம் செய்த அவளுடைய சகோதரி யூதா முழு உள்ளத்தோடு என்னிடம் திரும்பி வரவில்லை: பொய் வேடம் போடுகிறாள்” என்கிறார் ஆண்டவர். |
11 | ஆண்டவர் என்னிடம் கூறியது: நம்பிக்கையற்ற இஸ்ரயேல் நம்பிக்கைத் துரோகம் செய்த யூதாவைவிட நேர்மையானவள். |
12 | நீ சென்று வடக்கே திரும்பி இச்சொற்களை உரக்கக் கூறு: நம்பிக்கையற்ற இஸ்ரயேலே, என்னிடம் திரும்பிவா, என்கிறார் ஆண்டவர். நான் உன்மீது சினம் கொள்ளமாட்டேன்: ஏனெனில், நான் பேரன்பு கொண்டவன், என்கிறார் ஆண்டவர். நான் என்றென்றும் சினம் கொள்ளேன். |
13 | உன் குற்றத்தை நீ ஏற்றுக்கொண்டால் போதும்: உன் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்தாய்: பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும் அன்னியரை நாடி அங்குமிங்கும் ஓடினாய்: என் குரலுக்கோ நீ செவிசாய்க்கவில்லை, என்கிறார் ஆண்டவர். |
14 | மக்களே! என்னிடம் திரும்பி வாருங்கள்: ஏனெனில், நானே உங்கள் தலைவன்: நகருக்கு ஒருவனையும் குடும்பத்திற்கு இருவரையுமாகத் தெரிந்தெடுத்து உங்களைச் சீயோனுக்குக் கூட்டி வருவேன். |
15 | என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் உங்களை அறிவுடனும், முன்மதியுடனும் வழிநடத்துவார்கள். |
16 | நீங்கள் நாட்டில் பல்கிப் பெருகும் அக்காலத்தில் யாரும் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழைபற்றியே பேசமாட்டார்கள். அது அவர்கள் எண்ணத்திலோ நினைவிலோ இராது. அது இல்லை என்று வருந்தி இனி ஒன்றும் செய்யமாட்டார்கள், என்கிறார் ஆண்டவர். |
17 | அக்காலத்தில் எருசலேமை “ஆண்டவரின் அரியணை” என அழைப்பார்கள். ஆண்டவரின் பெயரை முன்னிட்டு எல்லா மக்களினத்தாரும் எருசலேமில் வந்து கூடுவர். தங்கள் தீய இதயப் பிடிவாதத்தின்படி இனி நடக்க மாட்டார்கள். |
18 | அந்நாள்களில் யூதா வீட்டார் இஸ்ரயேல் வீட்டாரோடு சேர்ந்து கொள்வர்: நான் அவர்கள் மூதாதையருக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்த நாட்டுக்கு வட நாட்டிலிருந்து ஒன்றாக வந்து சேர்வர். |
19 | உன்னை என் மக்களின் வரிசையிலே எவ்விதம் சேர்த்துக்கொள்வேன் என்றும் திராளன மக்களினங்களுக்கிடையே அழகான உரிமைச்சொத்தாகிய இனிய நாட்டை உனக்கு எவ்விதம் தருவேன் என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன். “என் தந்தை” என என்னை அழைப்பாய் என்றும், என்னிடமிருந்து விலகிச் செல்லமாட்டாய் என்றும் எண்ணியிருந்தேன். |
20 | நம்பிக்கைத் துரோகம் செய்த ஒரு பெண் தன் காதலனைக் கைவிடுவது போல, இஸ்ரயேல் வீடே! நீயும் எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்கிறாய், என்கிறார் ஆண்டவர். |
21 | மொட்டை மேடுகளில் கூக்குரல் கேட்கிறது: அது இஸ்ரயேல் மக்களின் அழுகையும் வேண்டலுமாம்: ஏனெனில், அவர்கள் நெறிதவறித் தங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்தார்கள். |
22 | என்னைவிட்டு விலகிய மக்களே! திரும்பி வாருங்கள்: உங்கள் நம்பிக்கையின்மையிலிருந்து உங்களைக் குணமாக்குவேன்: “இதோ நாங்கள் உம்மிடம் வருகிறோம். நீரே எங்கள் கடவுளாகிய ஆண்டவர். |
23 | குன்றுகளிலிருந்தும் மலைகளில் செய்யப்படும் அமளிகளிலிருந்தும் கிடைப்பது ஏமாற்றமே: இஸ்ரயேலின் விடுதலை எங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் மட்டுமே உள்ளது. |
24 | எங்கள் இளமை முதல், எங்கள் மூதாதையர் உழைப்பின் பயனாகப் பெற்ற ஆடுமாடுகளையும், புதல்வர் புதல்வியரையும் வெட்கங்கெட்ட பாகால் விழுங்கிவிட்டது. |
25 | மானக்கேடே எங்கள் படுக்கை: அவமானமே எங்கள் போர்வை. ஏனெனில் எங்கள் இளமை முதல் இன்றுவரை நாங்களும் எங்கள் மூதாதையரும் எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தோம்: அவரது குரலுக்கு நாங்கள் செவிசாய்க்கவில்லை.' |