1 | கலத்திலிருக்கும் நறுமணத் தைலம் முழுவதையும் செத்த ஈக்கள் முடைநாற்றம் வீசும்படி செய்துவிடும். அதுபோல, சிறிய மதிகேடும் மேன்மையான ஞானத்தைக் கெடுத்து விடும். |
2 | தக்கன செய்வதையே ஞானியரின் உள்ளம் நாடும்: தகாதன செய்வதையே மூடரின் உள்ளம் நாடும். |
3 | மூடர் தெருவில் நடந்தாலே போதும்: அவரது மடமை வெளியாகிவிடும். தாம் மூடர் என்பதை அவரே அனைவருக்கும் காட்டிடுவார். |
4 | மேலதிகாரி உன்னைச் சினந்து கொண்டால், வேலையை விட்டு விடாதே. நீ அடக்கமாயிருந்தால், பெருங்குற்றமும் மன்னிக்கப்படலாம். |
5 | உலகில் நான் கண்ட தீமை ஒன்று உண்டு. அது உயர் அலுவலரின் தவற்றால் விளைவது. |
6 | மூடர்களுக்கு உயர்த்த பதவி அளிக்கப்படுகிறது: செல்வர்கள் தாழ்ந்த நிலையிலேயே இருக்கிறார்கள். |
7 | அடிமைகள் குதிரைமீதேறிச் செல்வதையும், உயர்குடிப் பிறந்தோர் அடிமைகளைப்போலத் தரையில் நடந்து செல்வதையும் நான் கண்டிருக்கிறேன். |
8 | குழியை வெட்டுவோர் அதில் தாமே வீழ்வார். கன்னமிடுவோரைக் கட்டு விரியன் கடிக்கும். |
9 | கற்களை வெட்டி எடுப்பவர் கற்களால் காயமடைவார். மரத்தை வெட்டுபவர் காயத்திற்கு ஆளாவார். |
10 | மழுங்கிய கோடரியைத் தீட்டாமல் பயன்படுத்தினால் வேலைசெய்வது மிகக் கடினமாயிருக்கும். ஞானமே வெற்றிக்கு வழிகோலும். |
11 | பாம்பை மயக்குமுன் அது கடித்து விட்டால் அதை மயக்கும் வித்தை தெரிந்திருந்தும் பயனில்லை. |
12 | ஞானியரின் வாய்மொழி அவருக்குப் பெருமை தேடித்தரும். மூடரோ தம் வாயால் கெடுவார். |
13 | அவரது பேச்சு மடமையில் தொடங்கும்: முழு பைத்தியத்தில் போய் முடியும். |
14 | மூடர் வளவளவென்று பேச்சை வளர்ப்பார்: என்ன பேசப்போகின்றார் என்பது எவருக்கும் தெரியாது. அதற்குப்பின் என்ன நடக்கும் என்பதை எவராலும் சொல்ல இயலாது. |
15 | மூடர் அளவுமீறி உழைத்துத் தளர்ந்து போவார். ஊருக்குத் திரும்பிப்போகவும் வகை அறியார். |
16 | சிறு பிள்ளையை அரசனாகவும் விடிய விடிய விருந்துண்டு களிப்பவர்களைத் தலைவர்களாகவும் கொண்ட நாடே! நீ கெட்டழிவாய். |
17 | உயர்குடிப் பிறந்தவனை அரசனாகவும் உரிய நேரத்தில் உண்பவர்களை, குடித்துவெறிக்காது தன்னடக்கத்தோடு இருப்பவர்களைத் தலைவர்களாகவும் கொண்ட நாடே! நீ நீடு வாழ்வாய். |
18 | சோம்பேறியின் வீட்டுக்கூரை ஒழுகும்: பழுதுபார்க்காதவரின் வீடு இடிந்து விழும். |
19 | விருந்து மனிதருக்கு மகிழ்ச்சிதரும்: திராட்சை மது வாழ்க்கையில் களிப்புத்தரும்: பணம் இருந்தால் தான் எல்லாம் கிடைக்கும். |
20 | தனிமைமயிலுங்கூட அரசனை இகழாதே: படுக்கையறையிலுங்கூடச் செல்வர்களை இகழ்ந்து பேசாதே. வானத்துப் பறவைகள் நீ கூறியதை எடுத்துச்செல்லும்: பறந்து சென்று நீ சொன்னதைத் திரும்பச் சொல்லும். |