1 | தாவீதின் மகனும் எருசலேமின் அரசருமாகிய சபையுரையாளர் உரைத்தவை: |
2 | வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்: வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண். |
3 | மனிதர் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உழைக்கின்றனர்: ஆனால், அவர்கள் உழைப்பினால் பெறும் பயன் என்ன? |
4 | ஒரு தலைமுறை மறைகின்றது: மறு தலைமுறை தோன்றுகின்றது: உலகமோ மாறாது என்றும் நிலைத்திருக்கின்றது. |
5 | ஞாயிறு தோன்றுகின்றது: ஞாயிறுமறைகின்றது. பிறகு தன் இடத்திற்கு விரைந்து சென்று மீண்டும் தோன்றுகின்றது. |
6 | தெற்கு நோக்கிக் காற்று வீசுகின்றது: பிறகு வடக்கு நோக்கித் திரும்புகின்றது. இப்படிச் சுழன்று சுழன்று வீசித் தன் இடத்திற்குத் திரும்புகின்றது. |
7 | எல்லா ஆறுகளும் ஓடிக் கடலோடு கலக்கின்றன: எனினும், அவை ஒருபோதும் கடலை நிரப்புவதில்லை: மீண்டும் ஓடுவதற்காக உற்பத்தியான இடத்திற்கே திரும்புகின்றன. |
8 | அனைத்தும் சலிப்பையே தருகின்றன: அதைச் சொற்களால் எடுத்துரைக்க இயலாது. எவ்வளவு பார்த்தாலும் கண்ணின் ஆவல் தீர்வதில்லை: எவ்வளவு கேட்டாலும் காதின் வேட்கை தணிவதில்லை. |
9 | முன்பு இருந்ததே பின்பும் இருக்கும்: முன்பு நிகழ்ந்ததே பிறகும் நிகழும். புதியது என்று உலகில் எதுவுமே இல்லை. |
10 | ஏதேனும் ஒன்றைப்பற்றி, “இதோ, இது புதியது” என்று சொல்லக் கூடுமோ? இல்லை. அது ஏற்கனவே, நமது காலத்திற்கு முன்பே, பல்லாயிரம் ஆண்டுகளாக இருப்பதாயிற்றே! |
11 | முற்காலத்தவரைப் பற்றிய நினைவு இப்போது யாருக்கும் இல்லை: அவ்வாறே, வரும் காலத்தவருக்கும் தமக்கு முந்திய காலத்தவரைப்பற்றிய நினைவு இருக்கப்போவதில்லை. |
12 | சபையுரையாளனாகிய நான் எருசலேமில் இஸ்ரயேலுக்கு அரசனாய் இருந்தேன். |
13 | இவ்வுலகில் நடக்கிற எல்லாவற்றையும் ஞானத்தின் துணை கொண்டு கூர்ந்து ஆராய்வதில் என் சிந்தையைச் செலுத்தினேன். மானிடர் பாடுபட்டுச் செய்வதற்கென்று அவர்களுக்குக் கடவுள் எவ்வளவு தொல்லைமிகு வேலையைக் கொடுத்திருக்கிறார்! |
14 | இவ்வுலகில் செய்யப்படும் ஒவ்வொரு செயலையும் கவனித்தேன். அனைத்தும் வீணான செயல்களே: காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பானவை. |
15 | கோணலானதை நேராக்க இயலாது: இல்லாததை எண்ணிக் கையில் சேர்க்க முடியாது. |
16 | எனக்குமுன் எருசலேமில் அரசராய் இருந்தவர்கள் எல்லாரையும் விட நான் ஞானத்தை மிகுதியாகத் தேடிப்பெற்றவன்: மிகுந்த ஞானத்தையும் அறிவையும் அனுபவத்தால் பெற்றவன் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். |
17 | ஞானத்தையும் அறிவையும்பற்றித் தெரிந்துகொள்வதில் என் சிந்தையைச்செலுத்தினேன்: மடமையையும் மதிகேட்டையும்பற்றி அறிய முயன்றேன். இதுவும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பானதே எனக் கண்டேன். |
18 | ஞானம் பெருகக் கவலை பெருகும்: அறிவு பெருகத் துயரம் பெருகும். |