1 | ஆகையால், உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே. “வாழ்க்கை எனக்கு இன்பம் தரவில்லையே” என்று நீ சொல்லக்கூடிய துயர நாள்களும் ஆண்டுகளும் வருமுன் அவரை உள்ளத்திலே நினை. |
2 | அதாவது, கதிரவன், பகலொளி, நிலா, விண்மீன்கள் ஆகியவை உனக்கு மங்கலாய்த் தெரியுமுன்னும், மழைக்குப்பின் மேகங்கள் இருண்டு வருவதுபோலத் தோன்றுமுன்னும், |
3 | வீட்டுக்காவலர் நடுக்கங்கொள், வலியோர் தளர்வுறு முன்னும், அரைப்போர் மிகச் சிலராகித் தம் வேலையை நிறுத்திக்கொள்ள, பலகணி வழியாகப் பார்ப்போர் ஒளி இழந்துபோகுமுன்னும், |
4 | தெருச்சந்தடி கேளாவண்ணம் கதவுகள் அடைத்துக்கொள், சிட்டுக்குருவியின் கீச்சொலியும் உறக்கத்தைக் கலைக்க, இன்னிசைக் கருவி இசைக்கும் மகளிர் அனைவரும் ஓய்ந்துபோகுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை. |
5 | மேட்டைக் கண்டு அச்சங்கொண்டு தெருவில் நடப்பதை நினைத்துத் திகில் கொள்ளுமுன்னும், வாதுமை மரம் பூப்பூக்குமுன்னும், வெட்டுக்கிளியைப்போல நடை தட்டுத்தடுமாற, ஆசையெல்லாம் அற்றுப்போகுமுன்னும், உற்றார் வீதியில் அழுது புலம்ப நீ முடிவற்ற ஓய்வுக்குச் செல்லுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை: |
6 | வெள்ளிக் கயிறு அறுந்து, பொன் விளக்கு கீழே விழுந்து உடைவதற்கு முன்னும், குளத்தருகில் குடம் உடைந்து நொறுங்க, கிணற்றருகில் உருளை உடைந்து விழுமுன்னும், |
7 | மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கே திரும்பு முன்னும், கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பு முன்னும் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை. |
8 | வீண், முற்றிலும் வீண் என்கிறார் சபை உரையாளர்: எல்லாமே வீண். |
9 | சபை உரையாளர் ஞானமுள்ளவராயிருந்ததோடு தாம் அறிந்தவற்றைத் தொகுத்துத் தந்தார். |
10 | சபை உரையாளர் இனிய நடையில் எழுத முயன்றுள்ளார். உண்மையை ஒளிவு மறைவில்லாமல் எழுதிவைத்திருக்கிறார். |
11 | ஞானமுற்றவர்களின் சொற்கள் ஆயரின் கோல்போல் வழிநடத்தும். தொகுத்து வைத்த முதுமொழிகள் பசுமரத்தாணிபோல உள்ளத்தில் பதியும். அவை ஒரே ஆயரால் அளிக்கப்பட்டவை. |
12 | பிள்ளாய்! மேலும் ஓர் எச்சரிக்கை: நூல்கள் பல எழுதுவதால் பயன் ஒன்றுமில்லை. மிகுதியான படிப்பு உடலுக்கு இளைப்பு. |
13 | இவையனைத்திற்கும் முடிவுரையாக ஒன்று கூறுகிறேன்: கடவுளுக்கு அஞ்சி நட: அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படி. இதற்காகவே மனிதர் படைக்கப்பட்டனர். |
14 | நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், மறைவான செயலுக்குங்கூட, அது நல்லதோ தீயதோ எதுவாயினும், அனைத்திற்கும் கடவுளே தீர்ப்பு வழங்குவார். |