1 | யோபு அதற்கு உரைத்த பதில்: |
2 | உண்மையில் இது இவ்வாறு என்று அறிவேன்: ஆனால், மனிதர் இறைவன்முன் நேர்மையாய் இருப்பதெப்படி? |
3 | ஒருவர் அவருடன் வழக்காட விரும்பினால், ஆயிரத்தில் ஒன்றுக்கேனும் அம்மனிதரால் பதிலளிக்க முடியுமா? |
4 | இறைவன் உள்ளத்தில் ஞானமுள்ளவர்: ஆற்றலில் வல்லவர்: அவர்க்கு எதிராய்த் தம்மைக் கடினபடுத்தி, வளமுடன் வாழ்ந்தவர் யார்? |
5 | அவர் மலைகளை அகற்றுவார்: அவை அதை அறியா: அவர் சீற்றத்தில் அவைகளைத் தலைகீழாக்குவார். |
6 | அசைப்பார் அவர் நிலத்தை அதனிடத்தினின்று: அதிரும் அதனுடைய தூண்கள். |
7 | அவர் கட்டளையிடுவார்: கதிரவன் தோன்றான்: அவர் மறைத்திடுவார் விண்மீன்களை. |
8 | தாமே தனியாய் வானை விரித்தவர், ஆழியின் முதுகை மிதித்து நடந்தவர். |
9 | வடமீன் குழுவையும், மிருகசீரிடத்தையும், கார்த்திகை விண்மீன்களையும், தென்திசை விண்மீன் குழுக்களையும் அமைத்தவர் அவரே. |
10 | உணர்ந்திட இயலாப் பெருஞ்செயல்களையும், கணக்கிட முடியா அருஞ்செயல்களையும் ஆற்றுநர் அவரே. |
11 | இதோ! என் அருகே அவர் கடந்து செல்கையில் நான் பார்க்க முடியவில்லை: நழுவிச் செல்கையில் நான் உணர முடியவில்லை. |
12 | இதோ! அவர் பறிப்பாரானால், அவரை மறிப்பார் யார்? யாது செய்கின்றீர் என அவரைத் கேட்பார் யார்? |
13 | கடவுள் தம் சீற்றத்தைத் தணிக்கமாட்டார்: அவரடி பணிந்தனர் இராகாபின் துணைவர்கள். |
14 | இப்படியிருக்க, எப்படி அவருக்குப் பதிலுரைப்பேன்? எதிர்நின்று அவரோடு எச்சொல் தொடுப்பேன்? |
15 | நான் நேர்மையாக இருந்தாலும் அவருக்குப் பதிலுரைக்க இயலேன்: என் நீதிபதியிடம் நான் இரக்கத்தையே கெஞ்சுவேன். |
16 | நான் கூப்பிட அவர் பதிலுரைப்பினும், என் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார் என்று நம்புவதற்கில்லை. |
17 | புயலினால் என்னை நொறுக்குவார்: காரணமின்றி என் காயங்களைப் பெருக்குவார். |
18 | அவர் என்னை மூச்சிழுக்கவும் விடாது, கசப்பினால் என்னை நிரப்புகின்றார். |
19 | வலிமையில் அவருக்கு நிகர் அவரே! அவர்மேல் வழக்குத் தொடுப்பவர் யார்? |
20 | நான் நேர்மையாக இருந்தாலும், என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்: நான் குற்றமற்றவனாக இருந்தாலும், மாறுபட்டவனாக அது என்னைத் தீர்ப்பிடும். |
21 | குற்றமற்றவன் நான்: என்னைப்பற்றிக் கவலையில்லை: என் வாழ்க்கையையே வெறுக்கின்றேன். |
22 | எல்லாம் ஒன்றுதான்: எனவேதான் சொல்கின்றேன்: "அவர் நல்லவரையும் பொல்லாரையும் ஒருங்கே அழிக்கின்றார்'. |
23 | பேரிடர் சாவைத் திடீரெனத் தரும்போது, அவர் மாசற்றவரின் நெருக்கடி கண்டு நகைப்பார். |
24 | வையகம் கொடியோர் கையில் கொடுக்கப்படுகின்றது: அதன் நீதிபதிகளை கண்களை அவர் கட்டுகின்றார். அவரேயன்றி வேறு யார் இதைச் செய்வார்? |
25 | ஓடுபவரைவிட விரைந்து செல்கின்றன என் வாழ்நாள்கள்: அவை பறந்து செல்கின்றன: நன்மையொன்றும் அவை காண்பதில்லை. |
26 | நாணற் படகுபோல் அவை விரைந்தோடும்: இரைமேல் பாயும் ஒரு கழுகைப்போல் ஆகும். |
27 | 'நான் துயர் மறப்பேன்: முகமலர்ச்சி கொள்வேன்: புன்முறவல் பூப்பேன், எனப் புகல்வேனாயினும், |
28 | என் இடுக்கண் கண்டு நடுக்க முறுகின்றேன், ஏனெனில், அவர் என்னைக் குற்றமற்றவனாய்க் கொள்ளார் என அறிவேன். |
29 | நான்தான் குற்றவாளி எனில், வீணே ஏன் நான் போராடவேண்டும்? |
30 | பனிநீரில் நான் என்னைக் கழுவினும், சவர்க்காரத்தினால் என் கைகளைத் தூய்மையாக்கினும், |
31 | குழியில் என்னை அவர் அமிழ்த்திடுவார்: என் உடையே என்னை வெறுத்திடுமே! |
32 | ஏனெனில், அவரோடு நான் வழக்காடவும், வழக்கு மன்றத்தில் எதிர்க்கவும் என்னைப்போல் அவர் மனிதர் இல்லை. |
33 | இருவர்மீதும் தம் கையை வைக்க, ஒரு நடுவர்கூட எம் நடுவே இல்லையே. |
34 | அகற்றப்படுக அவர் கோல் என்னிடமிருந்து! அப்போது மிரட்டாது என்னை அவரைப்பற்றிய அச்சம்! |
35 | அவரிடம் அச்சமின்றிப் பேசுவேன் அப்போது: அப்படிப் பேசும் நிலையில் நான் இல்லையே இப்போது. |