1 | பின்னர் தேமானியனான எலிப்பாசு பேசத் தொடங்கினான்: |
2 | மனிதரால் இறைவனுக்குப் பயன் உண்டா? மதிநுட்பம் உடையவரால் அவருக்குப் பயன் உண்டா? |
3 | நீர் நேர்மையாக இருப்பது எல்லாம் வல்லவர்க்கு இன்பம் பயக்குமா? நீர் உமது வழியைச் செம்மைப்படுத்துவது அவர்க்கு நன்மை பயக்குமா? |
4 | நீர் அவரை அஞ்சி மதிப்பதாலா அவர் உம்மைக் கண்டிக்கிறார்? அதனை முன்னிட்டா உம்மைத் தீர்ப்பிடுகிறார்? |
5 | உமது தீமை பெரிதல்லவா? உமது கொடுமைக்கு முடிவில்லையா? |
6 | ஏனெனில், அற்பமானவற்றுக்கும் உம் உறவின்முறையாரிடம் அடகு வாங்கினீர்: ஏழைகளின் உடையை உரிந்து விட்டீர்! |
7 | தாகமுள்ளோர்க்குக் குடிக்கத் தண்ணீர் தரவில்லை: பசித்தோர்க்கு உணவு கொடுக்க முன்வரவில்லை. |
8 | வலிய மனிதராகிய உமக்கு வையகம் சொந்தமாயிற்று: உம் தயவு பெற்றவர்க்கே அது குடியிருப்பாயிற்று. |
9 | விதவைகளை நீர் வெறுங்கையராய் விரட்டினீர்: அனாதைகளின் கைகளை முறித்துப் போட்டீர். |
10 | ஆகையால், கண்ணிகள் உம்மைச் சூழ்ந்துள்ளன: கிலி உம்மைத் திடீரென ஆட்கொள்ளும். |
11 | நீர் காணாவண்ணம் காரிருள் சூழ்ந்தது: நீர்ப்பெருக்கு உம்மை மூழ்கடித்தது. |
12 | உயரத்தே விண்ணகத்தில் கடவுள் இல்லையா? வானிலிருக்கும் விண்மீன்களைப் பாரும்! அவை எவ்வளவு உயரத்திலுள்ளன! |
13 | ஆனால், நீர் சொல்கின்றீர்: 'இறைவனுக்கு என்ன தெரியும்? கார்முகிலை ஊடுருவிப் பார்த்து அவரால் தீர்ப்பிட முடியுமா? |
14 | அவர் பார்க்காவண்ணம் முகில் மறைக்கின்றது: அவர் வான்தளத்தில் உலவுகின்றனார்'. |
15 | பாதகர் சென்ற பழைய நெறியில் நீரும் செல்ல விழைகின்றீரோ! |
16 | நேரம் வருமுன்பே அவர்கள் பிடிப்பட்டனர்: அவர்கள் அடித்தளத்தை வெள்ளம் அடித்துச் சென்றது. |
17 | அவர்கள் இறைவனிடம், 'எங்களைவிட்டு அகலும்: எல்லாம் வல்லவர் எங்களுக்கு என்ன செய்ய முடியும்?' என்பர். |
18 | இருப்பினும், அவரே அவர்களின் இல்லத்தை நம்மையினால் நிரப்பினார்: எனினும், தீயவரின் திட்டம் எனக்குத் தொலைவாயிருப்பதாக! |
19 | நேர்மையுள்ளோர் அதைக் கண்டு மனம் மகிழ்கின்றனர்: மாசற்றோர் அவர்களை எள்ளி நகையாடுகின்றனர்: |
20 | 'இதோ! நம் பகைவர் வீழ்த்தப்பட்டனர்: அவர்களின் சேமிப்பு தீயால் விழுங்கப்பட்டது' என்கின்றனர். |
21 | இணங்குக இறைவனுக்கு: எய்துக அமைதி: அதனால் உமக்கு நன்மை வந்தடையும். |
22 | அவர் வாயினின்று அறிவுரை பெறுக: அவர்தம் மொழிகளை உம் நெஞ்சில் பொறித்திடுக: |
23 | நீர் எல்லாம் வல்லவரிடம் திரும்பி வருவீராகில், நீர் கட்டியெழுப்பப்படுவீர்: தீயவற்றை உம் கூடாரத்திலிருந்து அகற்றி விடும்! |
24 | பொன்னைப் புழுதியிலே எறிந்து, ஓபீர்த் தங்கத்தை ஓடைக் கற்களிடை வீசிவிடும்! |
25 | எல்லாம் வல்லவரே உமக்குப் பொன்னாகவும், வெள்ளியாகவும், வலிமையாகவும் திகழ்வார். |
26 | அப்போது எல்லாம் வல்லவரில் நீர் நம்பிக்கை கொள்வீர். கடவுளைப் பார்த்து உம் முகத்தை நிமிர்த்திடுவீர். |
27 | நீர் அவரிடம் மன்றாடுவீர்: அவரும் உமக்குச் செவி கொடுப்பார். |
28 | நீர் நினைப்பது கைகூடும்: உம் வழிகள் ஒளிமயமாகும். |
29 | ஏனெனில், அவர் செருக்குற்றோரின் ஆணவத்தை அழிக்கின்றார்: தாழ்வாகக் கருதப்பட்டோரை மீட்கின்றார். |
30 | குற்றவாளிகளையும் அவர் விடுவிப்பார்: அவர்கள் உம் கைகளின் தூய்மையால் மீட்கப்படுவர். |