1 | அதற்கு நாமாயனான சோப்பார் கூறின பதில்: |
2 | என்னுள் இருக்கும் துடிப்பின் பொருட்டு, என் எண்ணங்கள் பதில் சொல்ல வைக்கின்றன. |
3 | என்னை வெட்கமடையச் செய்யும் குத்தல்மொழி கேட்டேன்: நான் புரிந்து கொண்டதிலிருந்து விடை அளிக்க மனம் என்னை உந்துகிறது. |
4 | மாந்தர் மண்ணில் தோன்றியதிலிருந்து, தொன்றுதொட்டு நடக்குமிது உமக்குத் தெரியாதா? |
5 | கொடியவரின் மகிழ்ச்சி நொடிப் பொழுதே! கடவுளுக்கு அஞ்சாதவரின் களிப்பு கணப்பொழுதே! |
6 | அவர்களின் பெருமை விசும்பு மட்டும் உயர்ந்தாலும், அவர்களின் தலை முகிலை முட்டுமளவு இருந்தாலும், |
7 | அவர்கள் தங்களின் சொந்த மலம் போன்று என்றைக்கும் ஒழிந்திடுவர்: அவர்களைக் கண்டவர், எங்கே அவர்கள்? என்பர். |
8 | கனவுபோல் கலைந்திடுவர்: காணப்படார்: இரவு நேரக் காட்சிபோல் மறைந்திடுவர். |
9 | பார்த்த கண் இனி அவர்களைப் பார்க்காது: வாழ்ந்த இடம், அவர்களை என்றும் காணாது. |
10 | ஏழைகளின் தயவை அவர்களின் குழந்தைகள் நாடுவர்: அவர்களின் கைகளே அவர்களின் செல்வத்தைத் திரும்ப அளிக்கும். |
11 | எலும்புகளை நிரப்பிய அவர்களின் இளமைத் துடிப்பு, மண்ணில் அவர்களோடு மறைந்துவிடும். |
12 | தீங்கு அவர்களின் வாயில் இனிப்பாய் இருப்பினும், நாவின் அடியில் அதை அவர்கள் மறைத்து வைப்பினும், |
13 | இழந்து போகாமல் அதை அவர்கள் இருத்தி வைத்தாலும், அண்ணத்தின் நடுவே அதை அடைத்து வைத்தாலும், |
14 | வயிற்றிலே அவர்களின் உணவு மாற்றமடைந்து, அவர்களுக்கு விரியன் பாம்பின் நஞ்சாகிவிடுமே: |
15 | செல்வத்தை விழுங்கினர்: அதை அவர்களே கக்குவர்: இறைவன் அவர்களின் வயிற்றிலிருந்து அதை வெளியேற்றுவார். |
16 | விரியன் பாம்பின் நஞ்சை அவர்கள் உறிஞ்சுவர்: கட்டு விரியனின் நாக்கு அவர்களைக் கொன்றுபோடும். |
17 | ஓலிவ எண்ணெய்க் கால்வாய்களிலும், தேன், வெண்ணெய் ஆறுகளிலும் அவர்கள் இன்பம் காணார். |
18 | தங்களின் உழைப்பின் பயனை அவர்கள் திரும்ப அளிப்பர்: அதை அவர்கள் உண்ணமாட்டார்: வணிகத்தின் வருவாயில் இன்புறார். |
19 | ஏனெனில், அவர்கள் ஏழைகளை ஒடுக்கி, இல்லாதவராக்கினர்: தாங்கள் கட்டாத வீட்டை அவர்கள் அபகரித்துக் கொண்டனர். |
20 | அவர்களின் ஆசைக்கோர் அளவேயில்லை: ஆதலால், அவர்கள் இச்சித்த செல்வத்தில் மிச்சத்தைக் காணார். |
21 | அவர்கள் தின்றபின் எஞ்சியது எதுவும் இல்லை: எனவே அவர்களது செழுமை நின்று நிலைக்காது. |
22 | நிறைந்த செல்வத்திடை அவர்களுக்கு நெருக்கடி ஏற்படும்: அவலத்தின் பளுவெல்லாம் அவர்கள்மேல் விழும். |
23 | அவர்கள் வயிறு புடைக்க உண்ணும்போது, இறைவன் தம் கோபக்கனலை அவர்கள்மேல் கொட்டுவார்: அதையே அவர்களுக்கு உணவாகப் பொழிவார். |
24 | அவர்கள் இரும்பு ஆயுதத்திற்கு அஞ்சி ஓடுவர்: ஆனால், வெண்கல வில் அவர்களை வீழ்த்திடுமே! |
25 | அவர்கள் அதைப் பின்புறமாக இழப்பர்: மின்னும் முனை பிச்சியிலிருந்து வெளிவரும்: அச்சம் அவர்கள் மேல் விழும். |
26 | காரிருள் அவர்களது கருவூலத்திற்குக் காத்திருக்கும்: மூட்டாத தீ அதனைச் சுட்டெரிக்கும்: அவர்களின் கூடாரத்தில் எஞ்சியதை விழுங்கும். |
27 | விண்ணகம் அவர்களின் பழியை வெளியாக்கும்: மண்ணகம் அவர்களை மறுத்திட எழுந்து நிற்கும். |
28 | அவர்களது இல்லத்தின் செல்வம் சூறையாடப்படும்: இறைவனின் வெஞ்சின நாளில் அது அடித்துப்போகப்படும். |
29 | இதுவே பொல்லார்க்குக் கடவுள் அளிக்கும் பங்கு: அவர்களுக்கு இறைவன் குறிக்கும் உரிமைச் சொத்து. |