வேதாகமத்தை வாசி

யோபு 19

                   
புத்தகங்களைக் காட்டு
1பின் யோபு உரைத்த மறுமொழி:
2என் உள்ளத்தை எவ்வளவு காலத்திற்குப் புண்படுத்துவீர்? என்னை வார்த்தையால் நொறுக்குவீர்?
3பன்முறை என்னைப் பழித்துரைத்தீர்: வெட்கமின்றி என்னைத் தாக்கிப் பேசினீர்.
4உண்மையாகவே நான் பிழை செய்திருந்தாலும் என்னுடன் அன்றோ அந்தப் பிழை இருக்கும்?
5எனக்கு எதிராய் நீங்களே உங்களைப் பெருமைப்படுத்திக் கொள்வீர்களாகில், என் இழிநிலையை எனக்கு விரோதமாய்க் காட்டுவீராகில்,
6கடவுள்தான் என்னை நெருக்கடிக்குள் செலுத்தினார் என்றும், வலைவீசி என்னை வளைத்தார் என்றும் அறிந்துகொள்க!
7இதோ! 'கொடுமை' எனக் கூக்குரலிட்டாலும் கேட்பாரில்லை: நான் ஓலமிட்டாலும் தீர்ப்பாரில்லை.
8நான் கடந்துபோகாவண்ணம், கடவுள் என் வழியை அடைத்தார்: என் பாதையை இருளாக்கினார்.
9என் மாண்பினை அவர் களைந்தார்: மணிமுடியை என் தலையினின்று அகற்றினார்.
10எல்லாப் பக்கமும் என்னை இடித்துக் தகர்த்தார்: நான் தொலைந்தேன்: மரம்போலும் என் நம்பிக்கையை வேரோடு பிடுங்கினார்.
11அவர்தம் கோபக்கனல் எனக்கெதிராய்த் தெறித்தது: அவர் எதிரிகளில் ஒருவனாய் என்னையும் எண்ணுகின்றார்.
12அவர்தம் படைகள் ஒன்றாக எழுந்தன: அவர்கள் எனக்கெதிராய் முற்றுகை இட்டனர்: என் கூடாரத்தைச் சுற்றிப் பாசறை அமைத்தனர்.
13என் உடன் பிறந்தவரை என்னிடமிருந்து அகற்றினார்: எனக்கு அறிமுகமானவரை முற்றிலும் விலக்கினார்:
14என் உற்றார் என்னை ஒதுக்கினர்: என் நண்பர்கள் என்னை மறந்தனர்.
15என் வீட்டு விருந்தினரும் என் பணிப்பெண்களும் என்னை அன்னியனாகக் கருதினர்: அவர்கள் கண்களுக்குமுன் நான் அயலானானேன்.
16என் அடிமையை அழைப்பேன்: மறுமொழி கொடான்: என் வாயால் அவனைக் கெஞ்ச வேண்டியிருக்கிறது.
17என் மனைவிக்கு என் மூச்சு வீச்சம் ஆயிற்று: என் தாயின் பிள்ளைகளுக்கு நாற்றம் ஆனேன்.
18குழந்தைகளும் என்னைக் கேலி செய்கின்றனர்: நான் எழுந்தால் கூட ஏளனம் செய்கின்றனர்.
19என் உயிர் நண்பர் எல்லாரும் என்னை வெறுத்தனர்: என் அன்புக்குரியவராய் இருந்தோரும் எனக்கெதிராக மாறினர்.
20நான் வெறும் எலும்பும் தோலும் ஆனேன்: நான் பற்களின் ஈறோடு தப்பினேன்.
21என் மேல் இரங்குங்கள்: என் நண்பர்கள்! என் மேல் இரக்கம் கொள்ளுங்கள்: ஏனெனில் கடவுளின் கை என்னைத் தண்டித்தது.
22இறைவனைப் போல் நீங்களும் என்னை விரட்டுவது ஏன்? என் சதையை நீங்கள் குதறியது போதாதா?
23ஓ! என் வார்த்தைகள் இப்பொழுது வரையப்படலாகாதா? ஓ! அவை ஏட்டுச் சுருளில் எழுதப்படலாகாதா?
24இரும்புக்கருவியாலும் ஈயத்தாலும் என்றென்றும் அவை பாறையில் பொறிக்கப்படவேண்டும்.
25ஏனெனில், என் மீட்பர் வாழ்கின்றார் என்றும் இறுதியில் மண்மேல் எழுவார் என்றும் நான் அறிவேன்.
26என் தோல் இவ்வாறு அழிக்கப்பட்ட பின், நான் சதையோடு இருக்கும் போதே கடவுளைக் காண்பேன்.
27நானே, அவர் என் பக்கத்தில் நிற்கக் காண்பேன்: என் கண்களே காணும்: வேறு கண்கள் அல்ல: என் நெஞ்சம் அதற்காக ஏங்குகின்றது.
28ஆனால், நீங்கள் பேசிக்கொள்கின்றீர்கள்: 'அவனை எப்படி நாம் வதைப்பது? அவனிடம் அடிப்படைக் காரணத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது?'
29மாறாக-வாளுக்கு நீங்களே அஞ்சவேண்டும்: ஏனெனில், சீற்றம் வாளின் தண்டனையைக் கொணரும்: அப்போது, நீதித் தீர்ப்பு உண்டு என்பதை அறிந்துகொள்வீர்கள்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.