1 | அதற்குத் தேமானியனான எலிப்பாசு சொன்னான்: |
2 | வெற்று அறிவினால் ஞானி விடையளிக்கக்கூடுமோ? வறண்ட கீழ்க்காற்றினால் வயிற்றை அவன் நிரப்பவோ? |
3 | பயனிலாச் சொற்களாலோ, பொருளிலாப் பொழிவினாலோ அவன் வழக்காடத் தகுமோ? |
4 | ஆனால், நீர் இறையச்சத்தை இழந்துவிட்டீர்: இறைச்சிந்தனை இல்லாது போனீர். |
5 | உம் குற்றம் உம் வாயை உந்துகின்றது: வஞ்சக நாவை நீர் தேர்ந்துகொண்டீர். |
6 | கண்டனம் செய்தது உம் வாயே: நானல்ல: உம் உதடே உமக்கு எதிராய்ச் சான்றுரைக்கின்றது. |
7 | மாந்தரில் முதல்பிறவி நீர்தாமோ? மலைகளுக்கு முன்பே உதித்தவர் நீர்தாமோ? |
8 | கடவுளின் மன்றத்தில் கவனித்துக் கேட்டீரோ? ஞானம் உமக்கு மட்டுமே உரியதோ? |
9 | எங்களுக்குத் தெரியாத எது உமக்குத் தெரியும்? எங்களுக்குப் புரியாத எது உமக்குப் புரியும்? |
10 | நரைமுடியும் நிறைவயதும்கொண்டு, நாள்களில் உம் தந்தைக்கு மூத்தோர் எங்களிடை உள்ளனர். |
11 | கடவுளின் ஆறுதலும், கணிவான சொல்லும் உமக்கு அற்பமாயினவோ? |
12 | மனம்போன போக்கில் நீர் செல்வது ஏன்? உம் கண்கள் திருதிருவென விழிப்பது ஏன்? |
13 | அதனால், இறைவனுக்கு எதிராய் உம் கோபத்தைத் திருப்புகின்றீர்: வாயில் வந்தபடி வார்த்தைகளைக் கொட்டுகின்றீர். |
14 | மாசற்றவராய் இருக்க மானிடர் எம்மாத்திரம்? நேர்மையாளராய் இருக்கப் பெண்ணிடம் பிறந்தவர் எம்மாத்திரம்? |
15 | வான தூதரில் இறைவன் நம்பிக்கை வையார்: வானங்களும் அவர்தம் கண்முன் தூயவையல்ல: |
16 | தீமையை தண்ணீர் போல் குடிக்கும் அருவருப்பும் ஒழுங்கீனமும் நிறைந்த மாந்தர் எத்துணை இழிந்தோர் ஆவர்? |
17 | கேளும்! நான் உமக்கு விளக்குகின்றேன்: நான் பார்த்த இதனை நவில்கின்றேன்: |
18 | ஞானிகள் உரைத்தவை அவை! அவர்கள் தந்தையர் மறைக்காதவை அவை! |
19 | அவர்களுக்கே நாடு வழங்கப்பட்டது: அன்னியர் அவர்களிடையே நடமாடியதில்லை. |
20 | துடிக்கின்றனர் துன்பத்தில் மூர்க்கர் தம் நாளெல்லாம்: துன்பத்தின் ஆண்டுகள் கொடியோர்க்குக் கூட்டப்பட்டுள்ளன. |
21 | திகிலளிக்கும் ஒலி அவர்களின் செவிகளில் கேட்கும்: நலமான காலத்தில் அழிப்பவர் தாக்கலாம். |
22 | அவர்கள் இருளினின்று தப்பிக்கும் நம்பிக்கை இழப்பர்: வாளுக்கு இரையாகக் குறிக்கப்பட்டனர். |
23 | எங்கே உணவு என்று ஏங்கி அலைவர்: இருள்சூழ்நாள் அண்மையில் உள்ளதென்று அறிவர். |
24 | இன்னலும் இடுக்கணும் அவர்களை நடுங்க வைக்கும்: போருக்குப் புறப்படும் அரசன்போல் அவை அவர்களை மேற்கொள்ளும். |
25 | ஏனெனில், இறைவனுக்கு எதிராக அவர்கள் கையை ஓங்கினர்: எல்லாம் வல்லவரை எதிர்த்து வீரம் பேசினர். |
26 | வணங்காக் கழுத்தோடும் வலுவான பெரிய கேடயத்தேடும், அவரை எதிர்த்து வந்தனர். |
27 | ஏனெனில், அவர்களின் முகத்தைக் கொழுப்பு மூடியுள்ளது: அவர்களின் தொந்தி பருத்துள்ளது. |
28 | பாழான பட்டணங்களிலும், எவரும் உறைய இயலா இல்லாங்களிலும், இடிபாடுகளுக்குரிய வீடுகளிலும் அவர்கள் குடியிருப்பர். |
29 | அவர்கள் செல்வர் ஆகார்: அவர்களின் சொத்தும் நில்லாது: அவர்களது உடைமை மண்ணில் பெருகாது. |
30 | இருளுக்கு அவர்கள் தப்புவதில்லை: அவர்களது தளிரை அனல் வாட்டும். அவர்களது மலர் காற்றில் அடித்துப்போகப்படும். |
31 | வீணானதை நம்பி ஏமாந்து போகவேண்டாம்: ஏனெனில், வெறுமையே அவர்களது செயலுக்கு வெகுமதியாகும். |
32 | அவர்களது வாழ்நாள் முடியுமுன்பே அது நடக்கும்: அவர்களது தளிர் உலர்ந்துவிடும்: |
33 | பிஞ்சுகளை உதிர்க்கும் திராட்சைச் செடிபோன்றும் பூக்களை உகுக்கும் ஒலிவமரம் போன்றும் அவர்கள் இருப்பர். |
34 | ஏனெனில், இறையச்சமிலாரின் கூட்டம் கருகிப்போம்: கையூட்டு வாங்குவோரின் கூடாரம் எரியுண்ணும். |
35 | இன்னலைக் கருவுற்று அவர்கள் இடுக்கண் ஈன்றெடுப்பர்: வஞசகம் அவர்களது வயிற்றில் வளரும். |