வேதாகமத்தை வாசி

யோபு 18

                   
புத்தகங்களைக் காட்டு
1அதற்குச் சூகாவியனான பில்தாது சொன்ன பதில்:
2எப்பொழுது உமது சூழ்ச்சியுள்ள சொற்பொழிவை முடிக்கப் போகிறீர்? சிந்தித்திப் பாரும்: பின்னர் நாம் பேசுவோம்.
3மாக்களாக நாங்கள் கருதப்படுவது ஏன்? மதியீனர்களோ நாங்கள் உம் கண்களுக்கு?
4சீற்றத்தில் உம்மையே நீர் கீறிக்கொள்வதனால், உம்பொருட்டு உலகம் கைவிடப்பட வேண்டுமா? பாறையும் தன் இடம்விட்டு நகர்த்தப்படவேண்டுமா?
5தீயவரின் ஒளி அணைந்துபோம்: அவர்களது தீக்கொழுந்து எரியாதுபோம்.
6அவர்களின் கூடாரத்தில் ஒளி இருளாகும்: அவர்கள்மீது ஒளிரும் விளக்கு அணைந்துபோம்.
7அவர்களின் பீடுநடை தளர்ந்துபோம்: அவர்களின் திட்டமே அவர்களைக் கவிழ்க்கும்.
8அவர்களின் கால்களே அவர்களை வலைக்குள் தள்ளும்: அவர்கள் நடப்பதோ கண்ணிகள் நடுவில்தான்.
9கண்ணி அவர்களின் குதிகாலைச் சிக்கிப்பிடிக்கும்: சுருக்கு அவர்களை மாட்டி இழுக்கும்.
10மண்மீது அவர்களுக்குச் சுருக்கும், பாதையில் அவர்களுக்குப் பொறியும் மறைந்துள்ளன.
11எப்பக்கமும் திகில் அவர்களை நடுங்க வைக்கும்: கால் செல்லும் வழியில் துரத்தி விரட்டும்.
12பட்டினி அவர்களின் வலிமையை விழுங்கிடும்: தீங்கு அவர்களின் வீழ்ச்சிக்குக் காத்திருக்கும்.
13நோய் அவர்களின் தோலைத் தின்னும்: சாவின் தலைப்பேறு அவர்களின் உறுப்புகளை விழுங்கும்.
14அவர்கள் நம்பியிருந்த கூடாரத்தினின்று பிடுங்கப்படுவர்: அச்சம்தரும் அரசன்முன் கொணரப்படுவர்.
15அவர்களின் கூடாரங்களில் எதுவும் தங்காது: அவர்களின் உறைவிடங்களில் கந்தகம் தூவப்படுகின்றது.
16கீழே அவர்களின் வேர்கள் காய்ந்துபோம்: மேலே அவர்களின் கிளைகள் பட்டுப்போம்.
17அவர்களின் நினைவே அவனியில் இல்லாதுபோம்: மண்ணின் முகத்தே அவனுக்குப் பெயரே இல்லாது போம்.
18ஒளியிலிருந்து இருளுக்குள் அவர்கள் தள்ளப்படுவர்: உலகிலிருந்தே அவர்கள் துரத்தப்படுவர்.
19அவர்களின் இனத்தாரிடையே அவர்களுக்கு வழிமரபும் வழித்தோன்றலுமில்லை: அவர்கள் வாழ்ந்த இடத்தில் அவர்கள்வழி எஞ்சினோர் யாருமில்லை.
20அவர்கள் கதி கண்டு திடுக்கிட்டது மேற்றிசை: திகிலுற்றது கீழ்த்திசை.
21கொடியவரின் குடியிருப்பெல்லாம் இத்தகையதே: இறைவனை அறியாதவரின் நிலையும் இதுவே.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.