1 | என் உயிர் ஊசலாடுகின்றது: என் நாள்கள் முடிந்துவிட்டன: கல்லறை எனக்குக் காத்திருக்கின்றது. |
2 | உண்மையாகவே, எள்ளி நகைப்போர் என்னைச் சூழ்ந்துள்ளனர்: என் கண்முன் அவர்தம் பகைமையே நிற்கின்றது. |
3 | நீரே எனக்குப் பணையமாய் இருப்பீராக! வேறுயார் எனக்குக் கையடித்து உறுதியளிப்பார்? |
4 | அறியமுடியாதபடி அவர்கள் உள்ளத்தை அடைத்துப் போட்டீர்: அதனால் அவர்கள் மேன்மையடைய விடமாட்டீர். |
5 | கைம்மாறு கருதி நண்பர்க்கு எதிராயப் புறங்கூறுவோரின் பிள்ளைகளின் கண்களும் ஒளியிழந்துபோம். |
6 | என் இனத்தார்க்கு அவர் என்னைப் பழிச் சொல்லாக்கியுள்ளார்: என்னைக் காண்போர் என்முன் துப்புகின்றனர். |
7 | கடுந்துயரால் என் கண்கள் மங்குகின்றன: என் உறுப்புகளெல்லாம் நிழல்போலாகின்றன. |
8 | இதைக்கண்டு நேர்மையானவர் திகைக்கின்றனர்: குற்றமற்றோர் இறைப்பற்று இல்லார் மேல் சீற்றமடைகின்றனர். |
9 | நேர்மையாளர் தம் நெறியைக் கடைப்பிடிப்பர்: கறையற்ற கையினர் இன்னும் வலிமை அடைவர். |
10 | ஆனால், இப்பொழுது நீங்கள் எல்லாரும் திரும்பி வாருங்கள். வந்தாலும் ஞானமுள்ள எவரையும் உங்களில் காணமாட்டேன். |
11 | கடந்தன என் நாள்கள்: தகர்ந்தன என் திட்டங்கள்: அவ்வாறே ஆயின என் இதய நாட்டங்கள். |
12 | அவர்கள் இரவைப் பகலாகத் திரிக்கின்றனர்: ஒளி இருளுக்கு அண்மையில் உளது என்கின்றனர். |
13 | இருள் உலகையே என் இல்லமென எதிர்பார்ப்பேனாகில், என் படுக்கையை இருளிலே விரிப்பேனாகில், |
14 | படுகுழியை நோக்கி “என் தந்தையே” என்றும், புழுவை நோக்கி “என் தாயே, என் தமக்கையே” என்றும் புகல்வேனாகில், |
15 | பின் எங்கே என் நம்பிக்கை? என் நம்பிக்கையைக் காணப்போவது யார்? |
16 | நாம் ஒன்றாய்ப் புழுதிக்குப் போகும் போது, இருள் உலகில் வாயில்வரை அது இறங்குமா? |