வேதாகமத்தை வாசி

எஸ்தர் 7

                   
புத்தகங்களைக் காட்டு
1மன்னரும் ஆமானும் அரசி எஸ்தர் வைத்த விருந்துக்கச் சென்றனர்.
2மன்னர் இரண்டாம் நாள் விருந்தில் திராட்சை மதுவை மீண்டும் அருந்துகையில், எஸ்தரிடம், “எஸ்தர் அரசியே உன் விண்ணப்பம் யாது? அது உனக்கு அளிக்கப்படும். நீ வேண்டுவது என் அரசின் பாதியே ஆனாலும் அது உனக்குக் கொடுக்கப்படும்” என்றார்.
3அப்பொழுது, அரசி எஸ்தர், “உம் கண்களில் எனக்குத் தயவுகிடைத்திருப்பின், அரசே! உமக்கு நலமெனப்பட்டால் எனது விண்ணப்பத்திற்கிணங்க எனக்கும் என் வேண்டுகோளின்படி என் மக்களுக்கும் உயிர்ப்பிச்சை அருள்வீராக!
4என் மக்களும் நானும் கொலையுண்டு அழிந்து ஒழிந்து போகும்படி விலை பேசப்பட்டிருக்கிறோம்: ஆண்களும் பெண்களுமாக நாங்கள் அடிமைகளாய் விற்கப்பட்டிருந்தால்கூட நான் மௌனமாய் இருந்திருப்பேன். ஆனால் மன்னருக்கு உண்டாகும் இழப்பிற்கு எதிரியால் ஈடு செய்ய முடியாது” என்று பதிலிறுத்தார்.
5மன்னர் அகஸ்வேர் அரசி எஸ்தரை நோக்கி, “இப்படிச் செய்தவன் எவன்? தன் இதயத்தில் செருக்குற்று இவ்வாறு செய்யும்படி நினைத்த அவன் எங்கே?” என வினவினார்.
6“எதிரியும் வஞ்சகனுமாகிய மனிதன் இந்த ஆமானே: இவனே அந்தத் தீயவன்!” என்று எஸ்தர் பதிலுரைத்தார். இது கேட்ட ஆமான், மன்னருக்கும் எஸ்தருக்கும் முன்பாகப் பேரச்சம் கொண்டான்.
7மன்னர் கடுஞ்சினமுற்று, விருந்தில் திராட்சைமது அருந்துவதை விட்டுவிட்டு: எழுந்து அரண்மனைப் பூங்காவில் நுழைந்தார். தனக்குத் தீங்கிழைக்க மன்னர் முடிவு செய்துவிட்டார் என்று கண்ட ஆமான் அரசி எஸ்தரிடம் தன் உயிருக்காய் மன்றாட எண்ணிப் பின்தங்கினான்.
8மன்னர் அரண்மனைப் பூங்காவிலிருந்து விருந்து நடைபெற்ற இடத்திற்குத் திரும்பிய பொழுது, எஸ்தரின் மெத்தையில் ஆமான் வீழ்ந்து கிடக்கச் கண்டனர். “என் மாளிகையில நான் இருக்கும் போதே, இவன் அரசியைக் கெடுப்பானோ?” என்ற சொற்கள் மன்னரின் வாயினின்று வெளிப்பட காவலர் ஆமானின் முகத்தை மூடிவிட்டனர்.
9அச்சமயம், மன்னருக்குப் பணிவிடை செய்த அர்பேனா என்ற அலுவலர் மன்னரை நோக்கி, “அதோ! ஆமானின் வீட்டெதிரே மன்னருக்கு நல்லது செய்த மொர்தக்காயைத் தூக்கிலிட ஆமான் நாட்டிய ஐம்பது முழத் தூக்குமரம்!” என்றார். அதற்கு மன்னர், “அதிலேயே அவனைத் தூக்கிலிடுங்கள்!” என்றார்.
10மொர்தக்காயைக் தூக்கிலிட அவன் நாட்டிய தூக்கு மரத்திலேயே ஆமான் தூக்கிலிடப்பட்டான். மன்னரின் சீற்றமும் தணிந்தது.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.