1 | இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் அறிந்த மொர்தக்காய் தம் ஆடைகளைக் கிழித்து, சாக்கு உடை அணிந்து, சாம்பல் பூசிக்கொண்டு, வெளியே நகரின் மையத்திற்குச் சென்று ஓலமிட்டு, மனங்கசிந்து அழுதார். |
2 | அரச வாயிலுள் சாக்கு உடை அணிந்து எவரும் நுழையக்கூடாது என்பதால் அவர் வாயில் வரை சென்றார். |
3 | மன்னரின் வார்த்தையும் நியமமும் எந்தெந்த மாநிலங்களை அடைந்தனவோ, அங்கெல்லாம் இருந்த யூதரிடையே பெரும் புலம்பலும், நோன்பும், கண்ணீரும், அழுகையும் விளங்க, அனைவரும் சாக்கு உடை அணிந்து சாம்பல் பூசிக் கொண்டனர். |
4 | எஸ்தரின் செவிலியரும் அண்ணகர்களும் வந்து இவற்றை அவரிடம் சொல்ல, அரசி பெரிதும் வாடித் துடித்தார். மொர்தக்காய் சாக்கு உடை களைந்து, நல்லாடை அணிந்து கொள்ளும்படி ஆடைகளை அவர் அனுப்பி வைத்தார். அவரோ அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. |
5 | எஸ்தருக்குப் பணிபுரியும்படி மன்னரால் நியமிக்கப்பட்டிருந்த அண்ணகர் அத்தாக்கை அவர் அழைத்து, மொர்தக்காயின் அவலநிலைக்குக் காரணம் யாதென அறிந்து வருமாறு அனுப்பினார். |
6 | அத்தாக்கு அரச வாயிலுக்கு எதிரே நகர்ச் சந்தியில் இருந்த மொர்தக்காயிடம் சென்றார். |
7 | மொர்தக்காய் தமக்கு நேரிட்ட அனைத்தைப்பற்றியும், யூதரை அழிக்கும்படி அரச கருவூலத்தில் சேர்ப்பதற்காக ஆமான் வாக்களித்த வெள்ளி பற்றியும் அவருக்குத் தெரிவித்தார். |
8 | மேலும், சூசானில் பிறப்பிக்கப்பட்ட நியமத்தின் ஒரு நகலை எஸ்தரிடம் காட்டும்படி கொடுத்து, அலர் மன்னரிடம் சென்று மன்றாடி, அவர் முன்னிலையில் தம் மக்களுக்காகப் பரிந்து பேசுமாறு வேண்டினார். |
9 | அத்தாக்கு அவ்வாறே சென்று, எஸ்தரிடம் மொர்தக்காயின் வார்த்தைகளை எடுத்துரைத்தார். |
10 | எஸ்தர் மறுபடியும் அத்தாக்கு வழியாய் மொர்தக்காய்க்குச் சொல்லி அனுப்பியது: |
11 | “மன்னரால் அழைப்புப் பெறாத ஆண், பெண் எவரும் மன்னரின் உள்முற்றத்திற்குச் சென்றால் கொல்லப்படுவர் என்பதும், யாருக்கு மன்னர் தம் பொற்செங்கோலை நீட்டுகிறாரோ அவரே பிழைப்பார் என்பதும் அரச நியமம்: இதனை மன்னரின் அனைத்து ஊழியர்களும், மாநில மக்கள் அனைவரும் அறிவர்.” |
12 | அவரும் எஸ்தரின் வார்த்தைகளை மொர்தக்காயிடம் அறிவித்தார். |
13 | அதற்கு மொர்தக்காய் எஸ்தரிடம் அறிவிக்கும்படியாகக் கூறியது: “அனைத்து யூதருள்ளும் அரச மாளிகையில் உள்ள நீ மட்டும் காப்பாற்றப் பெறுவாய் என உனக்குள் கற்பனை செய்ய வேண்டாம். |
14 | ஏனெனில், இவ்வமயம் நீ மௌனமாய் வாளாவிருப்பின், விடுதலையும் பாதுகாப்பும் யூதருக்குப் பிறிதொரு இடத்தினின்று தோன்றும். ஆனால் நீயும் உன் தந்தையின் வீட்டாரும் அழிவீர். யார் அறிவார்? ஒருவேளை இதுபோன்ற நேரத்திற்கெனவே நீ அரசியாகி உள்ளாய் போலும்!”. |
15 | இது கேட்ட எஸ்தர் மொர்தக்காயிடம் சொல்லும்படியாகக் கூறியது: |
16 | “சூசானில் காணப்படும் அனைத்து யூதரையும் ஒன்று சேர்ப்பீராக! எனக்காக நோன்பிருந்து, மூன்றுநாள் இரவு பகல் உண்ணாமலும், குடியாமலும் இருப்பீராக! நானும் என் செவிலியரும் அவ்வாறே நோன்பிருப்போம். சட்டத்திற்குப் புறம்பே எனினும் நான் மன்னரிடம் செல்வேன்! அழிவதாயின் அழிகின்றேன்.” |
17 | மொர்தக்காய் அவ்வாறே சென்று, எஸ்தரின் வாக்கின்படியே அனைத்தையும் செய்தார். |