வேதாகமத்தை வாசி

எஸ்தர் 2

                   
புத்தகங்களைக் காட்டு
1இவற்றுக்குப்பின் மன்னர் அகஸ்வேர் சினம் தணிய அவர் வஸ்தியையும் அவளது செயலையும் அவளுக்கு எதிராய்த் தாம் விடுத்த ஆணையையும் எண்ணிப் பார்த்தார்.
2அவ்வமயம் மன்னருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த பணியாளர் அவரை நோக்கிக் கூறியது: “அரசராகிய உமக்கென அழகும் இளமையும் கொண்ட கன்னிப் பெண்களைத் தேடுவார்களாக!
3அரசரின் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து மாநிலங்களிலும் அழகும் இளமையும் கொண்ட கன்னிப் பெண்கள் அனைவரையும் ஒன்று கூட்டும்படி மேற்பார்வையாளர்களை மன்னர் நியமிப்பாராக! சூசான் அரண்மணையின் அந்தப்புரத்தில் மன்னரின் அண்ணகரான ஏகாயிடம் அப்பெண்களை ஒப்படைத்து, தூய்மைப்படுத்தும் பொருள்களை அவர்களுக்குத் தர ஆவன செய்வாராக!
4மன்னரின் கண்களில் இனியவளாய்க் காணப்படுகின்ற இளம் பெண்ணே வஸ்திக்குப் பதிலாக அரசி ஆவாள்.” இது மன்னருக்கு நலமெனப் பட்டதால் அவரும் அவ்வாறே செய்தார்.
5சூசான் அரண்மனையில் மொர்தக்காய் என்னும் பெயர்கொண்ட யூதர் ஒருவர் இருந்தார்.
6அவர் பென்யமினைச் சார்ந்த கீசின் மகனான சிமயியின் புதல்வரான யாயிரின் மைந்தர்: இந்தக் கீசு எருசலேமில் கைது செய்யப்பட்டு, பாபிலோன் மன்னன் நெபுகத்னேசரால் சிறைப்பிடிக்கப்பட்ட யூதாவின் அரசன் எக்கோனியாவுடன் நாடு கடத்தப்பட்டவர்களுள் ஒருவர்.
7மொர்தக்காய்”அதசா” என்னும் மறுபெயர் கொண்ட எஸ்தர் என்பவரை எடுத்து வளர்த்தார். அவர் அவருடைய சிற்றப்பன் மகள்: தாய் தந்தையை இழந்தவர்: எழில்மிகு தோற்றமும் வடிவழங்கும் கொண்ட இளம் பெண்.
8மன்னரின் சொற்களும் ஆணையும் அறிவிக்கப்பட்டபொழுது, இளம் பெண்கள் பலர் சூசான் அரண்மனைக்குள் ஒன்று சேர்க்கப்பட்டு ஏகாயிடம் ஒப்படைக்கப்பட்டனர். எஸ்தரும் அவ்வாறே அரண்மனையில் அந்தப்புரப் பொறுப்பேற்றிருந்த ஏகாயிடம் ஒப்படைக்கப்பட்டார்.
9அவ்விளம் பெண் ஏகாயின் கண்களுக்கு இனியவளெனக் காணப்பெற்று, அவரது தயவைப் பெற்றார். அவரும் அவருக்குத் தேவையான அழகு சாதனங்களை உடனே தந்து, அரண்மனையில் சிறந்த செவிலியர் எழுவரையும் கொடுத்தார். மேலும் எஸ்தரையும் அவருடைய செவிலியரையும் அந்தப்புரத்தின் சிறந்த பகுதிக்கு மாற்றினார்.
10யாரிடமும் சொல்லக்கூடாது என்று மொர்தக்காய் ஆணையிட்டிருந்ததால் எஸ்தர் தம் இனத்தையோ வழி மரபையோ வெளிப்படுத்தவில்லை.
11ஒவ்வொரு நாளும் மொர்தக்காய் அந்தப்புர முற்றத்தில் அங்கும் இங்கும் உலவி, எஸ்தரின் நலன்பற்றியும் அவருக்கு என்னென்ன செய்யப்படுகிறது என்பதைப் பற்றியும் அறிந்து வந்தார்.
12ஆறு மாதம் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறு மாதம் பெண்டிர்க்கான வாசனைத் தைலங்கள், நறுமணத் பொருள்கள் ஆகியவற்றாலும் அழகுபடுத்தும் பன்னிரு மாதங்கள் நிறைவெய்தின. பின்னர் ஒவ்வொரு இளமங்கையும் மன்னர் அகஸ்வேரின் முன் செல்லும் சமயம் வந்தது.
13மன்னரிடம் செல்லும் ஒவ்வொரு இளம் பெண்ணுக்கும், அந்தரப்புரத்திலிருந்தது அரச மாளிகைக்குச் செல்லும்போது, அவள் கேட்பதனைத்தும் கொடுக்கப்பட்டது.
14அவள் மாலையில் சென்று, மறுநாள் காலையில் இரண்டாம் அந்தப்புரத்திற்குச் செல்வாள்: அங்கு வைப்பாட்டியரின் கண்காணிப்பாளரான அரச அண்ணகர் சாட்சகாசின் பொறுப்பில் விடப்படுவாள். மன்னர் அவள் மீது விருப்பம் கொண்டு பெயர் சொல்லி அழைக்கும் வரை மன்னிரிடம் அவள் மீண்டும் செல்ல இயலாது.
15அபிகாயிலின் புதல்வியும், மொர்தக்காயின் வளர்ப்பு மகளுமாகிய எஸ்தர் மன்னருக்கு முன்னே செல்லும் முறை வந்தபொழுது, பெண்களைக் கண்காணிக்கும் அரச அண்ணகர் ஏகாயின் அறிவுரையைத் தவிர வேறெதையும் நாடாமல், காண்போர் அனைவரின் கண்களிலும் அவர் தயவு பெற்றிருந்தார்.
16அகஸ்வேரின் ஆட்சியின் ஏழாம் ஆண்டில், பத்தாம் மாதமாகிய தேபேத்து மாதத்தில், அகஸ்வேரின் அரச மாளிகைக்குள் எஸ்தர் அழைத்துச் செல்லப்பட்டார்.
17பெண்கள் அனைவரிலும் எஸ்தரையே மன்னர் மிகுதியாய் விரும்பினார். கன்னிப் பெண்கள் அனைவருள்ளும் அவரே மன்னரின் கண்களில் மிகுதியான தயவு பெற்றார். எனவே அவர் அவரது தலைமீது அரசியின் மகுடம் வைத்து, வஸ்திக்குப் பதிலாக அவரை அரசி ஆக்கினார்.
18இவற்றிற்குப்பின், எஸ்தரை முன்னிட்டுக் குறுநில மன்னர்களுக்கும் தம் அலுவலர் அனைவருக்கும் பெரிய விருந்து வைத்தார். மேலும் அனைத்து மாநிலங்களுக்கும் மன்னர் விடுமுறை நாளை அறிவித்துத் தம் கைகளினால் அன்பளிப்புகள் வழங்கினார்.
19கன்னிப் பெண்கள் இரண்டாம் முறையாய் ஒன்று கூட்டப்பட்டபொழுது, மொர்தக்காய் அரசவாயிலில் பணி புரிந்து கொண்டிருந்தார்.
20மொர்தக்காய் கட்டளையிட்டவாறு, எஸ்தர் தம் வழிமரபிபையோ, இனத்தையோ வெளிப்படுத்தாதிருந்தார். அவரால் வளர்க்கப்பட்டபோது செய்தது போலவே, அப்பொழுதும், எஸ்தர் மொர்தக்காயின் கட்டளைக்கு இணங்கி நடந்தார்.
21மொர்தக்காய் அரசவாயிலருகில் பணிபுரிந்த நாள்களில், பிகதான், தெNருசு என்ற இருவர் சினமுற்று மன்னர் அகஸ்வோரைத் தாக்க வகை தேடினர்.
22இக்காரியம் மொர்தக்காய்க்குத் தெரிந்தது. இதனை அவர் அரசி எஸ்தரிடம் கூற, அவர் மொர்தக்காயின் பெயரால் அதனை மன்னரிடம் அறிவித்தார்.
23உடனே அக்காரியம் புலனாய்வு செய்யப்பட, உண்மை வெளிப்பட்டது. அவர்கள் இருவரும் தூக்கிலிடப்பட்டனர். இந்நிகழ்ச்சி மன்னர் முன்னிலையில் குறிப்பேட்டில் எழுதிவைக்கப்பட்டது.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.