வேதாகமத்தை வாசி

2நாளாகமம் 8

                   
புத்தகங்களைக் காட்டு
1சாலமோன் ஆண்டவரின் இல்லத்தையும் தம் அரண்மனைiயும் கட்டி முடிக்க இருபது ஆண்டுகள் ஆயின.
2அதன்பின், ஈராம் தமக்கு அளித்திருந்த நகர்களைச் சாலமோன் புதுப்பித்து, அங்கே இஸ்ரயேல் மக்களைக் குடியமர்த்தினார்.
3அடுத்து, சாலமோன் அமத்சோபா சென்று அதனைக் கைப்பற்றினார்:
4பாலைநிலத்தில் தத்மோர் என்ற நகரையும், ஆமாத்துப் பகுதியின் கிடங்கு நகர்கள் அனைத்தையும் எழுப்பினார்.
5மேலும், மேலைப் பெத்கோரோன், கீழைப் பெத்கோரோன் என்ற நகர்களை மதில்கள், கதவுகள், தாழ்ப்பாள்கள் கொண்ட அரண்சூழ் நகர்களாக அமைத்தார்.
6மேலும். பாலத்தையும், தம் கிடங்கு நகர்களையும், தேர் நகர்களையும், குதிரை வீரர் நகர்களையும் சாலமோன் எழுப்பினார்: அவற்றுடன், எருசலேமிலும், லெபனோனிலும், தம் ஆட்சிக்கு உட்பட்ட எல்லா நாடுகளிலும் தாம் விரும்பிய எல்லாவற்றையும் கட்டியெழுப்பினார்.
7இஸ்ரயேலர் அல்லாத இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் ஆகிய மக்களினத்தாருள் விடப்பட்ட எல்லாரையும்-
8இஸ்ரயேல் மக்கள் கொல்லாமல் விட்டுவைத்த அவர்களின் வழிமரபினர் எல்லாரையும்-சாலமோன், இன்றுவரை உள்ளதுபோல், கட்டாய வேலைக்கு உட்படுத்தினார்.
9ஆனால், சாலமோன் இஸ்ரயேல் மக்களுள் எவரையும் கட்டாய வேலைக்கு உட்படுத்தவில்லை. மாறாக அவர்கள் போர்வீரர்களாகவும் தானைத் தலைவர்களாகவும் தேர்ப்படை, குதிரைப்படையின் தலைவர்களாகவுமே இருந்தனர்.
10அரசர் சாலமோனுடைய அலுவலர்களின் தலைவர்கள் மொத்தம் இருநூற்று ஐம்பது பேர்: இவர்களே மக்கள்மேலும் அதிகாரம் செலுத்தினர்.
11'ஆண்டவரின் பேழை வைக்கப்பட்டிருந்த இடங்கள் புனிதம் பெற்றவை. எனவே இஸ்ரயேல் அரசராம் தாவீதின் அரண்மனையில் என் மனைவி வாழக்கூடாது' என்று சாலமோன் எண்ணி, பார்வோனின் மகளைத் தாவீதின் நகரிலிருந்து அழைத்துவந்து, அவளுக்கெனத் தாம் கட்டிய அரண்மனையில் குடியமர்த்தினார்.
12அதன்பின், சாலமோன், மண்டபத்தின் முன் ஆண்டவருக்காகத் தாம் கட்டிய பலிபீடத்தில் அவருக்கு எரிபலிகளைச் செலுத்தினார்.
13அந்தப் பலிபீடத்தில், மோசேயின் கட்டளைப்படி ஓய்வுநாள், அமாவாசை நாள்களிலும், ஆண்டுதோறும் வரும் புளியாத அப்பத் திருவிழா, வாரங்களின் திருவிழா, கூடாரத் திருவிழா ஆகிய மூன்று விழாக்களிலும், அந்தந்த நாளுக்குரிய பலிகளைச் செலுத்தினார்.
14சாலமோன், தம் தந்தை தாவீது கட்டளையிட்டவாறு, திருப்பணி செய்யும் குருக்களின் பிரிவுகளையும், ஒவ்வொரு நாளின் சடங்கிற்கு ஏற்ப புகழ்ப்பண் இசைத்து, குருக்களுக்குத் துணைப்பணி செய்யும் லேவியரின் முறைகளையும் ஒவ்வொரு வாயிலிலும் காவல்புரிய வாயிற்காப்போரின் குழுக்களையும் ஏற்படுத்தினார். கடவுளின் மனிதர் தாவீதின் கட்டளை இப்படியிருந்தது.
15குருக்களும் லேவியரும் கருவூலங்களைக் கண்காணிப்பது உட்பட அனைத்திலும் அரச கட்டளையிலிருந்து சிறிதும் பிறழவில்லை.
16ஆண்டவரின் இல்லம், அடிக்கல் நாட்டப்பட்டது முதல் முழுமை பெறும் வரை, சாலமோனின் திட்டம் இனிதே நடந்தேறியது. இவ்வாறு ஆண்டவரின் இல்லம் கட்டி முடிக்கப்பட்டது.
17பின்பு சாலமோன் ஏதோம் நாட்டின் கடலோரப் பகுதிகளான எட்சியோன்கெபேருக்கும், ஏலோத்துக்கும் சென்றார்.
18ஈராம், கப்பல்களையும் கடல் வல்லாரையும் தம் பணியாளர் பொறுப்பில் சாலமோனிடம் அனுப்பி வைத்தார். அவர்கள் அரசர் சாலமோனின் பணியாளர்களுடன் ஓபீருக்குச் சென்று, அங்கிருந்து பதினெட்டாயிரம் கிலோ கிராம் பொன் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தனர்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.