1 | சாலமோன் ஆண்டவரின் இல்லத்தையும் தம் அரண்மனைiயும் கட்டி முடிக்க இருபது ஆண்டுகள் ஆயின. |
2 | அதன்பின், ஈராம் தமக்கு அளித்திருந்த நகர்களைச் சாலமோன் புதுப்பித்து, அங்கே இஸ்ரயேல் மக்களைக் குடியமர்த்தினார். |
3 | அடுத்து, சாலமோன் அமத்சோபா சென்று அதனைக் கைப்பற்றினார்: |
4 | பாலைநிலத்தில் தத்மோர் என்ற நகரையும், ஆமாத்துப் பகுதியின் கிடங்கு நகர்கள் அனைத்தையும் எழுப்பினார். |
5 | மேலும், மேலைப் பெத்கோரோன், கீழைப் பெத்கோரோன் என்ற நகர்களை மதில்கள், கதவுகள், தாழ்ப்பாள்கள் கொண்ட அரண்சூழ் நகர்களாக அமைத்தார். |
6 | மேலும். பாலத்தையும், தம் கிடங்கு நகர்களையும், தேர் நகர்களையும், குதிரை வீரர் நகர்களையும் சாலமோன் எழுப்பினார்: அவற்றுடன், எருசலேமிலும், லெபனோனிலும், தம் ஆட்சிக்கு உட்பட்ட எல்லா நாடுகளிலும் தாம் விரும்பிய எல்லாவற்றையும் கட்டியெழுப்பினார். |
7 | இஸ்ரயேலர் அல்லாத இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் ஆகிய மக்களினத்தாருள் விடப்பட்ட எல்லாரையும்- |
8 | இஸ்ரயேல் மக்கள் கொல்லாமல் விட்டுவைத்த அவர்களின் வழிமரபினர் எல்லாரையும்-சாலமோன், இன்றுவரை உள்ளதுபோல், கட்டாய வேலைக்கு உட்படுத்தினார். |
9 | ஆனால், சாலமோன் இஸ்ரயேல் மக்களுள் எவரையும் கட்டாய வேலைக்கு உட்படுத்தவில்லை. மாறாக அவர்கள் போர்வீரர்களாகவும் தானைத் தலைவர்களாகவும் தேர்ப்படை, குதிரைப்படையின் தலைவர்களாகவுமே இருந்தனர். |
10 | அரசர் சாலமோனுடைய அலுவலர்களின் தலைவர்கள் மொத்தம் இருநூற்று ஐம்பது பேர்: இவர்களே மக்கள்மேலும் அதிகாரம் செலுத்தினர். |
11 | 'ஆண்டவரின் பேழை வைக்கப்பட்டிருந்த இடங்கள் புனிதம் பெற்றவை. எனவே இஸ்ரயேல் அரசராம் தாவீதின் அரண்மனையில் என் மனைவி வாழக்கூடாது' என்று சாலமோன் எண்ணி, பார்வோனின் மகளைத் தாவீதின் நகரிலிருந்து அழைத்துவந்து, அவளுக்கெனத் தாம் கட்டிய அரண்மனையில் குடியமர்த்தினார். |
12 | அதன்பின், சாலமோன், மண்டபத்தின் முன் ஆண்டவருக்காகத் தாம் கட்டிய பலிபீடத்தில் அவருக்கு எரிபலிகளைச் செலுத்தினார். |
13 | அந்தப் பலிபீடத்தில், மோசேயின் கட்டளைப்படி ஓய்வுநாள், அமாவாசை நாள்களிலும், ஆண்டுதோறும் வரும் புளியாத அப்பத் திருவிழா, வாரங்களின் திருவிழா, கூடாரத் திருவிழா ஆகிய மூன்று விழாக்களிலும், அந்தந்த நாளுக்குரிய பலிகளைச் செலுத்தினார். |
14 | சாலமோன், தம் தந்தை தாவீது கட்டளையிட்டவாறு, திருப்பணி செய்யும் குருக்களின் பிரிவுகளையும், ஒவ்வொரு நாளின் சடங்கிற்கு ஏற்ப புகழ்ப்பண் இசைத்து, குருக்களுக்குத் துணைப்பணி செய்யும் லேவியரின் முறைகளையும் ஒவ்வொரு வாயிலிலும் காவல்புரிய வாயிற்காப்போரின் குழுக்களையும் ஏற்படுத்தினார். கடவுளின் மனிதர் தாவீதின் கட்டளை இப்படியிருந்தது. |
15 | குருக்களும் லேவியரும் கருவூலங்களைக் கண்காணிப்பது உட்பட அனைத்திலும் அரச கட்டளையிலிருந்து சிறிதும் பிறழவில்லை. |
16 | ஆண்டவரின் இல்லம், அடிக்கல் நாட்டப்பட்டது முதல் முழுமை பெறும் வரை, சாலமோனின் திட்டம் இனிதே நடந்தேறியது. இவ்வாறு ஆண்டவரின் இல்லம் கட்டி முடிக்கப்பட்டது. |
17 | பின்பு சாலமோன் ஏதோம் நாட்டின் கடலோரப் பகுதிகளான எட்சியோன்கெபேருக்கும், ஏலோத்துக்கும் சென்றார். |
18 | ஈராம், கப்பல்களையும் கடல் வல்லாரையும் தம் பணியாளர் பொறுப்பில் சாலமோனிடம் அனுப்பி வைத்தார். அவர்கள் அரசர் சாலமோனின் பணியாளர்களுடன் ஓபீருக்குச் சென்று, அங்கிருந்து பதினெட்டாயிரம் கிலோ கிராம் பொன் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தனர். |