1 | சாலமோன் ஒரு வெண்கலப் பலிபீடத்தைச் செய்தார். அதன் நீளம் இருபது முழம்: அகலம் இருபது முழம்: உயரம் பத்து முழம். |
2 | மேலும் கடல் என்னும் வட்டவடிவமான வெண்கலத் தொட்டியை அவர் வார்ப்பித்தார். அதன் விட்டம் பத்து முழம்: உயரம் ஐந்து முழம்: சுற்றளவு முப்பது முழம். |
3 | அதன் அடியில் சுற்றிலும் காளை வடிவங்கள் இருந்தன. பத்து முழ அகலத்தில் அவை இரண்டு வரிசைகளாக வைக்கப்பட்டிருந்தன. அவை தொட்டியோடு சேர்த்து வார்க்கப்பட்டிருந்தன. |
4 | அத்தொட்டி பன்னிரு காளைகளின்மேல் அமைக்கப்பட்டிருந்தது. அவற்றுள் மூன்று வடக்கையும் மூன்று மேற்கையும் மூன்று தெற்கையும் மூன்று கிழக்கையும் நோக்கிய வண்ணம் இருந்தன. காளைகளின் பின்பக்கம் உட்புறம் இருந்தது. |
5 | தொட்டியின் கனம் நான்கு விரல் கடை. அதன் விளிம்பு கிண்ணத்தின் விளிம்பைப் போன்றும், மலர்ந்த லீலியைப்போன்றும் இருந்தது. அது மூவாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும். |
6 | கழுவுவதற்குப் பத்துக் கொப்பரைகளைச்செய்து, ஐந்தை வலப்பக்கத்திலும், ஐந்தை இடப்பக்கத்திலும் அவர் வைத்தார். எரிபலிக்கான அனைத்தும் அவற்றின் கழுவப்பட்டன. குருக்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காகக் 'கடல்' பயன்படுத்தப்பட்டது. |
7 | மேலும் அவர் பத்துப் பொன் விளக்குத் தண்டுகளை அவற்றிற்குரிய நியமத்தின்படி செய்து, ஐந்தை வலப்புறமும் ஐந்தை இடப்புறமுமாகத் தூயகத்தில் வைத்தார்: |
8 | பத்து மேசைகளைச் செய்து ஐந்தை வலப்புறமும், ஐந்தை இடப்புறமுமாகத் தூயகத்தில் வைத்தார்: நூறு பொற்கிண்ணங்களையும் செய்தார்: |
9 | குருக்களின் முற்றத்தையும், பெரிய முற்றத்தையும் அமைத்தார்: முற்றத்தின் வாயில்களை அமைத்து, அவற்றின் கதவுகளை வெண்கலத் தகட்டால் மூடினார்: |
10 | ‘கடலை ‘ வலப்பக்கம் தென்கிழக்கே நிறுவினார். |
11 | ஈராம், பாத்திரங்களையும் சாம்பல் அள்ளுகருவிகளையும் கிண்ணங்களையும் செய்தார். இவ்வாறு அரசர் சாலமோன் கட்டளையிட்டபடி கடவுளின் இல்லத்திற்கான வேலைகளை அவர் செய்து முடித்தார். |
12 | அவையாவன: இரு தூண்கள், இரு தூண்களின் உச்சியில் கிண்ண வடிவம் கொண்ட இரு போதிகைகள், தூண்களின் உச்சியிலுள்ள அப்போதிகைகளை மூட இரு வலைப்பின்னல்கள், |
13 | அவ்விரு வலைப்பின்னல்களுக்கான நானூறு மாதுளை வடிவங்கள். அவை ஒவ்வொன்றிலும் மாதுளை வடிவங்கள் இரு வரிசைகளில் வைக்கப்பட்டிருந்தன. வலைப்பின்னல்கள் தூண்களின் கிண்ண வடிவம் கொண்ட போதிகைகளை மூடியிருந்தன. |
14 | மேலும் அவன் செய்தவை: கொப்பரைகள், அவற்றுக்கான தள்ளுவண்டிகள், |
15 | ஒரு 'கடல்' அதன்கீழ் பன்னிரு காளைகள், |
16 | பாத்திரங்கள், அள்ளுகருவிகள், முட்கரண்டிகள், மற்றும் துணைக்கலன்கள், ஈராம்அபி ஆண்டவரின் இல்லத்துக்கு வேண்டிய பாத்திரங்களைக் கலப்பற்ற வெண்கலத்தால் சாலமோனுக்குச் செய்து கொடுத்தான். |
17 | அரசர் சுக்கோத்துக்கும் செரேதாவுக்கும் இடையிலுள்ள யோர்தான் சமவெளிக் களிமண் பகுதியில் அவற்றை வார்ப்பித்தார். |
18 | சாலமோன் செய்த கலன்கள் எல்லாம் கணக்கிலடங்கா: அவற்றுக்கான வெண்கலத்தை நிறுத்து மாளாது. |
19 | சாலமோன் கடவுளின் இல்லத்திற்கு வேண்டிய கலன்கள் எல்லாவற்றையும், பொற்பலிபீடத்தையும், திருமுன்னிலை மேசைகளையும், |
20 | திருத்தூயகத்திற்கு முன்பாக முறைப்படி வைக்கவேண்டிய விளக்குத் தண்டுகளையும், ஏற்றவேண்டிய அகல்களையும் பசும் பொன்னால் செய்தார்: |
21 | அதேபோன்று மலர்களையும், அகல்களையும், அணைப்பான்களையும் பசும்பொன்னால் செய்தார்: |
22 | கத்தரிக்கோல்களையும், தீர்த்தச் செம்புகளையும், கரண்டிகளையும் தூபகலசங்களையும் பசும் பொன்னால் செய்தார்: மேலும் கோவில் வாயில்களையும், அதாவது திருத்தூயகக் கதவுகளையும் தூயகக் கதவுகளையும் தங்கத்தால் செய்தார். |