1 | எசேக்கியா அரசரானபோது அவருக்கு வயது இருபத்தைந்து. அவர் எருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். செக்கரியா மகளான அபியா என்பவளே அவர் தாய். |
2 | அவர் தம் மூதாதையான தாவீதைப் போல் ஆண்டவரின் பார்வையில் நேரியன செய்தார். |
3 | அவர் தம் ஆட்சியின் முதல் ஆண்டின் முதல் மாதத்தில் ஆண்டவரின் இல்லக் கதவுகளைத் திறந்து, அவற்றைப் பழுதுபார்த்தார். |
4 | குருக்களையும் லேவியரையும் வரவழைத்து கீழை மண்டபத்தில் ஒன்று கூட்டினார். |
5 | அவர் அவர்களை நோக்கி,‘லேவியரே, கேளுங்கள்: இப்பொழுது நீங்கள் உங்களையே தூய்மைப்படுத்திக்கொண்டு, உங்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவரின் இல்லத்தைத் தூய்மைப்படுத்துங்கள், திருத்தலத்தின் எல்லாத்தீட்டுகளையும் அகற்றுங்கள். |
6 | ஏனெனில், நம் தந்தையர் துரோகம் செய்து, நம் கடவுளாம் ஆண்டவரின் பார்வையில் தீயன செய்தனர்: அவரைப் புறக்கணித்து, ஆண்டவரின் திருஉறைவிடத்திலிருந்து தங்கள் முகங்களைத் திருப்பி, முதுகைக் கட்டினர். |
7 | அவர்கள், திருத்திலத்தில், இஸ்ரயேலின் கடவுளுக்குத் தூபமிடாமலும் எரிபலி செலுத்தாமலும் விளக்குகளை அணைத்து விட்டு, மண்டபக் கதவுகளைப் பூட்டி வைத்தனர். |
8 | அதனால், யூதாவின் மீதும், எருசலேமின்மீதும் ஆண்டவர் சினம் கொண்டார்: அவர் அவர்களை நடுக்கத்திற்கும் அச்சத்துக்கும், பழிப்பிற்கும் கையளித்தார். இதை நீங்கள் கண்ணாரக் கண்டீர்கள்! |
9 | இதன் பொருட்டே இதோ நம் தந்தையர் வாளால் வெட்டுண்டனர்: நம் புதல்வரும் புதல்வியரும் மனைவியரும் நாடு கடத்தப்பட்டனர். |
10 | இப்பொழுது இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவருடன் ஓர் உடன்படிக்கை செய்ய என் மனம் முடிவு செய்துள்ளது: அப்பொழுதுதான் அவரது வெஞ்சினம் நம்மைவிட்டு நீங்கும். |
11 | ஆதலால், எம் புதல்வர்களே, நீங்கள் வாளாவிருக்க வேண்டாம்: ஏனெனில், நீங்கள் ஆண்டவர் திருமுன் நின்று திருப்பணி புரியவும், வழிபாடு நிறைவேற்றவும், தூபமிடவும் அவர் உங்களைத் தேர்ந்து கொண்டுள்ளார் ‘ என்றார். |
12 | அதைக் கேட்ட கோகாத்து புதல்வரில் அமாசாயின் மகன் மகாத்து. அசரியாவின் மகன் யோவேல், மெராரி புதல்வரில் அப்தியின் மகன் கீசு, எகல்லேலின் மகன் அசரியா, கெர்சோனியரில் சிமமாவின் மகன் யோவாகு, யோவாகின் மகன் ஏதேன், |
13 | எலிசாப்பான் புதல்வரில் சிம்ரியும் எயூயேலும், ஆசாபு புதல்வரில் செக்கரியாவும் மத்தனியாவும், |
14 | ஏமான் புதல்வரில் எகுவேலும் சிமயியும், எதுத்தூன் புதல்வரில் செமாயாவும், உசியேலும் ஆகிய லேவியர் எழுந்து, |
15 | தங்கள் சகோதரர்களை ஒன்றுதிரட்டி, தங்களையே தூய்மைப்படுத்தியபின், அரச கட்டளைக்கும் ஆண்டவரின் வாக்குக்கும் ஏற்ப ஆண்டவரின் இல்லத்தைத் தூய்மைப்படுத்த நுழைந்தனர். |
16 | ஆண்டவரின் இல்லத்தின் உட்புறத்தைத் தூய்மைப்படுத்த குருக்கள் உள்ளே சென்று, திருக்கோவிலில் கண்ட தீட்டான எல்லாவற்றையும் அதன் மண்டபத்திற்குக் கொண்டு வந்தனர். லேவியர் அவற்றை எடுத்துக் கிதரோன் பள்ளத்தாக்கில் கொட்டினர். |
17 | முதல் மாதத்தின் முதல் நாளில் அவர்கள் தூய்மைப்படுத்தத் தொடங்கினர். மாதத்தின் எட்டாம் நாள் ஆண்டவரின் மண்டபத்திற்கு வந்து, ஆண்டவரின் இல்லத்தை எட்டு நாளில் தூய்மைப்படுத்தினர். ஆக, முதல் மாதத்தின் பதினாறாம் நாளில் இப்பணியை முடித்தனர். |
18 | அரசர் எசேக்கியாவிடம் அவர்கள் வந்து,‘ஆண்டவரின் இல்லத்தை முழுமையாக நாங்கள் தூய்மைப்படுத்திவிட்டோம்: எரிபலி பீடத்தையும், அதற்குரிய எல்லாத் துணைக்கலன்களையும், திருமுன்னிலை அப்ப மேசையையும், அதற்குரிய எல்லாத் துணைக்கலன்களையும், |
19 | ஆகாசு தனது ஆட்சிக் காலத்தில் துரோகம் செய்து புறக்கணித்திருந்த எல்லாக் கலன்களையும் தூய்மைப்படுத்தி, ஆண்டவரின் பலிபீடத்துக்கு முன்பாக அவற்றை ஒழுங்குபடுத்தி வைத்திருக்கிறோம் ‘ என்றனர். |
20 | அரசர் எசேக்கியா அதிகாலையில் எழுந்து, நகரத் தலைவர்களை ஒன்று திரட்டிக் கொண்டு ஆண்டவரின் இல்லத்திற்குச் சென்றார். |
21 | அரசுக்காகவும், திருத்தலத்துக்காகவும், யூதாவுக்காகவும் பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுக்க அவர்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கிடாய்களையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஏழு வெள்ளாட்டுக்குட்டிகளையும் கொண்டு வந்தனர். ஆண்டவருக்கு அவற்றைப் பீடத்தில் பலியிட அரசர் ஆரோனின் புதல்வர்களான குருக்களுக்குக் கட்டளையிட்டார். |
22 | அவர்கள் காளைகளை வெட்ட, குருக்கள் அவற்றின் குருதியைப் பிடித்துப் பலிபீடத்தின் மேல் தெளித்தினர்: ஆட்டுக்கிடாய்களை வெட்டி, அவற்றின் குருதியையும் பலிபீடத்தின் மேல் தெளித்தனர்: ஆட்டுக்குட்டிகளையும் வெட்டி அவற்றின் குருதியையும் பலிபீடத்தின்மேல் தெளித்தனர்: |
23 | அடுத்து, பாவம்போக்கும் பலியான வெள்ளாட்டுக் கிடாய்களை அரசனுக்கும் மக்கள் சபைக்கும் முன்பாகக் கொண்டுவந்து, அவற்றின்மேல் தங்கள் கைகளை விரித்தனர். |
24 | ‘இஸ்ரயேலர் அனைவருக்காகவும் எரிபலியும் பாவம்போக்கும் பலியும் செலுத்தவேண்டும் ‘ என்று அரசர் கூறியிருந்ததால், குருக்கள் அவற்றை வெட்டி அவற்றின் குருதியைப் பலிபீடத்தில் தெளித்து, இஸ்ரயேலர் அனைவருக்காகவும் பாவம்போக்கும் பலியை நிறைவேற்றினர். |
25 | தாவீதின் கட்டளைப்படியும், அரசரின் காட்சியாளர் காத்து, இறைவாக்கினர் நாத்தான் ஆகியோரின் கட்டளைப்படியும், கைத்தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகியவற்றை இசைக்கும் லேவியரை ஆண்டவரின் இல்லத்தில் எசேக்கியா நியமித்திருந்தார். ஏனெனில், ஆண்டவரே இக்கட்டளையைத் தமது இறைவாக்கினர்கள் வாயிலாக அளித்திருந்தார். |
26 | அதனால், தாவீதின் இசைக்கருவிகளுடன் லேவியரும், எக்காளத்துடன் குருக்களும் அங்கே நின்றிருந்தனர். |
27 | பின்னர் எரிபலியைப் பீடத்தின்மேல் நிறைவேற்றுமாறு எசேக்கியா கட்டளையிட்டார்: அப்பலியைச் செலுத்தத் தொடங்கியபோது, இஸ்ரயேலரின் அரசர் தாவீதின் இசைக்கருவிகளுடனும் எக்காளத்துடனும் ஆண்டவருக்கான புகழ்ப்பாடல் தொடங்கியது. |
28 | எரிபலி நிறைவேறு மட்டும் பாடகர்கள், பாட எக்காளம் முழங்க, எல்லா மக்களும் வணங்கி நின்றனர். |
29 | அப்பலி நிறைவுற்றபோது அரசரும் அவரோடு இருந்த அனைவரும் தலைவணங்கி வழிபட்டனர். |
30 | தாவீதின் வார்த்தைகளிலும், திருக்காட்சியாளர் ஆசாபின் மொழிகளிலும் ஆண்டவரைப் புகழுமாறு அரசர் எசேக்கியாவும் தலைவர்களும் லேவியர்களுக்குக் கட்டளையிட்டனர். அவர்களும் மகிழ்ச்சியுடன் ஆண்டவரைப் புகழந்து தலைவணங்கி வழிபட்டனர். |
31 | அப்பொழுது எசேக்கியா அவர்களை நோக்கி,‘இதோ நீங்கள் ஆண்டவருக்கென உங்களையே அர்ப்பணித்துள்ளீர்கள்: ஆதலால் அணுகி வாருங்கள், ஆண்டவரின் இல்லத்துக்குப் பலிகளையும் நன்றிப்பலிகளையும் கொண்டு வாருங்கள் ‘ என்று கூறினார். அப்பொழுது மக்கள் சபையார் பலிகளையும், நன்றிப்பலிகளையும் கொண்டு வந்தனர், விரும்பியோர் பலர் எரிபலிகளையும் கொண்டுவந்தனர். |
32 | மக்கள் சபையார் கொண்டுவந்த எரிபலிகளின் மொத்த எண்ணிக்கை: எழுபது காளைகள், நூறு ஆட்டுக் கிடாய்கள், இருநூறு ஆட்டுக்குட்டிகள், இவையாவும் ஆண்டவருக்கான எரிபலி. |
33 | இவற்றுடன் அவர்கள் அறுநூறு மாடுகளையும் மூவாயிரம் ஆடுகளையும் அர்ப்பணித்தனர். |
34 | குருக்கள் சிலரே இருந்ததால், எரிபலிகளுக்கான எல்லாவற்றையும் தோலுரிக்க அவர்களால் இயலவில்லை. எனவே, அவ்வேலையை முடித்துத் தங்களைத் தூய்மைப்படுத்தும்வரை அவர்களுக்கு அவர்கள் சகோதரர்களான லேவியர் உதவி செய்தனர். ஏனெனில் குருக்களைவிட லேவியர் தம்மைத் தூய்மையாக்கிக் கொள்வதில் அதிக நேர்மையுடன் நடந்து கொண்டனர். |
35 | ஏராளமான எரிபலிகளுடன், நல்லுறவுப் பலிகளின் கொழுப்பும், எரிபலிக்கான நீர்மப் படையல்களும் இருந்தன. இவ்வாறு ஆண்டவரின் இல்ல வழிபாடு மறுமலர்ச்சி அடைந்தது. |
36 | தன் மக்களுக்காகக் கடவுள் ஆற்றியது குறித்து எசேக்கியாவும், எல்லா மக்களும் மகிழ்ந்தனர். ஏனெனில், இவையாவும் மிக விரைவாய் நடந்தேறின. |